நம்பிக்கை நட்சத்திரம் – விளையாட்டுக்கள்

விளையாட்டுக்கள் மனித வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார் பேராசிரியர் நவராஜ் செல்லையா அவர்கள். ஏன் அப்படிச் சொல்கிறார் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இயக்கம் என்பது மனித உடலில் இயற்கையாக நடப்பது. அவரவர் தங்களை அறியாமலேயே அந்த இயக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.

எதையும் எதிர்ப்பார்க்காமல் இயங்கும் உறுப்புக்களை தவிர்க்க முடியாது. அவை தன்னிச்சையானவை.

செயல் என்பது நினைத்து, திட்டமிட்டுத் தொடர்கின்ற இயக்கமாகும். அதுவும் பயன் கருதிச் செய்வனவாகும்.

செயல் என்றவுடன் கைதான் நமக்கு நினைவுக்கு வரும். அதனால்தான் உதவியிழந்த நிலைக்கு உதாரணம் கூறுகின்ற பொழுது “கையிழந்தது போல் இருந்தது” என்று கூறுவார்கள்.

உடுப்புக்கு ‘உடுக்கை’ என்பது ஒரு பெயர். உடுத்துதலுக்கு கை மிகவும் பயன்படுவதால் தான் உடு+கை என்றும் வந்திருக்கலாம்.
இதை வைத்துத்தான் ‘உடுக்கை இழந்தவன் கை போல’ என்று வள்ளுவரும் வலியுறுத்திப் பாடிச்சென்றிருக்கிறார் போலும்.

 

எண்ணத்தில் நினைவுகளின் எழுச்சி இருந்தாலும், திண்ணமாய் இருக்க வேண்டும் என்பதால் தான் ‘நம்பு’ என்றனர் முன்னோர்.

நம்புகின்ற நினைவுகளோடு தெம்புடன் உழைக்கின்ற கைகளும் சேர்ந்து கொண்டு உழைப்பதால் தான், நம்பிக்கை என்ற சொல்லும் தோன்றியிருக்கலாம்.

இந்த நம்பிக்கை தான் வாழ்வுக்கு ஆதாரமாக விளங்குகிறது.

 

எதிலும் நம்பிக்கை ஏற்பட்டால்தான், இதயமும் அதில் முழு மூச்சாகப் பதியும்; புதிய வலிவும் திட்டமும் பிறக்கும். இறுதி வெற்றியை நோக்கி விளைவுகளும் முன்னோக்கி நடக்கும்.

 

நம் வாழ்வில், நாம் நீண்ட நாட்கள் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை இருப்பதால்தான், நிலபுலன்கள் நிறைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். கோடிக் கணக்கில் பணம் சேர்க்க வேண்டும் என்று இரவு பகல் பாராது பாடுபடுகிறோம்.

எந்தெந்த வழிகள் தெரியுமோ, அவற்றில் எல்லாம் ஈடுபடுகிறோம். இதற்காகவே இறைவனை வேண்டுகிறோம். கோயிலுக்குப் போகிறோம். சோதிடம் கேட்கிறோம். குறுக்கு வழிகளையும் தேடுகிறோம்.

உள்ளத்தில் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளத்தானே இப்படிப்பட்ட முயற்சிகளை மக்கள் அனைவரும் மேற்கொள்கின்றார்கள்.

 

நம்பிக்கையுடன் வாழ்கிறவனோ, நியாயமான வழிகளிலேயே ஆசைப்படுகிறான். தவறி விழுந்தாலும் எழுந்து நிற்க முயற்சிக்கிறான்.

நம்பிக்கை இழந்தவர்களோ, ஊஞ்சல் போல முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். புழுங்கிப் புழுங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

செக்குமாடு போல சுற்றி வந்து கொண்டிருக்கின்றார்கள்.

சிக்கலில் தாங்களே போய் மாட்டிக் கொண்டு சுக்கல் நூறாகிப் போகின்றார்கள்.

 

நம்பிக்கை உடையவன் பைத்தியகாரனல்ல.

அவன் முதலில் தன்னை நம்புகிறான்.

தனது எதிர் காலத்தை நம்புகிறான்.

தனது சமுதாயத்தை, தனது நாட்டிற்கான தனது கடமையையும் நம்புகிறான்.

ஏனெனில் நம்பிக்கை என்பது இதயத்திலிருந்து உருவாகும் இனிய ராகம். நம்பிக்கை என்பதை தைரியம் என்றே நாம் கூறலாம்.

 

நம்பிக்கை என்பது உருவாக்கும் சக்தி கொண்டதாகும். அதனால்தான் நம்பிக்கையை உள்ளமாகவும், செயலை உடலாகவும் பாவிக்க வேண்டும் என்று அறிவுடையோர்கள் கூறுவார்கள்.

ஆமாம்! நம்பிக்கை இல்லாமல் வாழ்வதும் உழைப்பதும், சிறகில்லாமல் பறக்க முயலும் பறவையைப் போன்றதாகும்.

 

ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கை கொண்டவனாகவே வாழ்கிறான். அதைவிட்டால் வேறு வழியேயில்லை. வாழ்வும் இல்லை. இந்த உலகமே அவனது நம்பிக்கையின் இடமாகத்தான் விளங்குகிறது.

இப்படி வாழ்வோடு வாழ்வாக அரும்பி முகிழ்ந்து மணம் பரப்பும் நம்பிக்கையை, செயல்படுத்தும் ஒத்திகை மன்றமாக பயிற்சிக் களமாக்கவே விளையாட்டுக்கள் உதவுகின்றன.

நம்பிக்கை நல்ல வழிகாட்டும்; நன்கு செயல்பட உரம் கூட்டும்; திறம் சேர்க்கும்; தைரியம் அளிக்கும் என்பதெல்லாம் உண்மைதான்.

விளையாட்டு

தனக்கு எவ்வளவு திறமை இருக்கிறது, தகுதி இருக்கிறது என்பதைக் கண்டறியவும், தன்னையொத்தவர்களுடன் பொருந்தி, தன் வலிமையை பரிசோதித்து மகிழவும் விளையாட்டு  வாய்ப்பளிக்கின்றது.

தன்னிடம் தகுதி இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளவன் தான், விளையாட்டில் ஈடுபட முடியும்.

 

தன்னால் முடியும்!

தன்னால் சமாளிக்க முடியும்!

தன்னால் மீண்டுவர முடியும்!

என்ற நம்பிக்கை தானே விளையாட்டின் அடிப்படை சிறப்பு.

 

விளையாட்டில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன், விளையாட்டின் நேரம் முழுவதும் விளையாடும் நம்பிக்கை – நம்பிக்கையின் சிகரமல்லவா?

தோற்கவே மாட்டோம், தோற்றாலும் பரவாயில்லை, தோல்விதானே வெற்றியின் முதல்படி என்றெல்லாம் தனக்கு வலிமை ஏற்படக்கூடிய மனப்பக்குவத்தை, தத்துவப்பாங்கான வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ள விளையாட்டு நம்பிக்கைக்கு உதவுகிறது.

போராட்டத்தில் ஈடுபடக்கூடிய மனோபக்குவத்தை எளிதில் ஊட்டுவது விளையாட்டுக்களின் இயல்பாகும்.

ஏனெனில் விளையாட்டுக்கள் எல்லாமே எளிமையானவை. இனிமையானவை. இலவசமானவை, இன்னல்கள் இல்லாதவையாகும்.

விளையாட்டு தன்னிடம் வந்து சேரும் வீரர்களுக்கு, இளைஞர்களுக்கு சிறுவர்களுக்கு பாடிக் களிக்கும் கவிதை போன்றதாகும். அதுவே மனிதர்களுக்கு சுவையான நினைவோட்டமாக மகிழ்ச்சி தரும் கடந்த கால நாவல் கூட்டமாக விளங்குவதாகும்.

 

ஏனென்றால், நம்பிக்கையுள்ள மனிதன் முன்னோக்கிப் பார்த்து புன்னகை புரிகிறான்; புத்துணர்ச்சி பெறுகிறான்; பேரின்பம் அடைகிறான்.

நம்பிக்கையற்றவனோ, தனக்குள்ளே குழம்புகிறான்; தடுமாறுகிறான்; தளர்ச்சி பெறுகிறான்; பெருமூச்சு விடுகிறான்.

 

நீரில் வீழ்ந்தால் தானே நீச்சலைக் கற்றுக் கொள்ள முடியும்?

தரையில் படுத்துக் கொண்டு நீந்த முயற்சித்தால் எப்படி?

நீரில் விழுந்து முயற்சிக்கிறவன் நம்பிக்கையாளன்.

தரையில் கிடப்பவன் தன்னையே நம்பாதவன்.

நீரில் வீழ்ந்தால் நீந்த உதவும் நீச்சல் குளம் போன்றது விளையாட்டுக்களும் ஆடுகளமும்.

தரையில் படுத்திருப்பவனோ, வாழ்வில் படுத்தே போகிறான்.

அவநம்பிக்கையுள்ளவனைக் கெடுக்க, வேறு எதிரிகள் யாருமே வேண்டாம். அவனே அவனுக்கு எதிரியாவான்.

நம்பிக்கை எவனையும் ஏமாற்றாது. இந்த எண்ணத்தை விளைவிப்பது மனித குலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என விளங்கும்  விளையாட்டுக்கள்.

நம்பிக்கை பயத்தின் எதிரி

நம்பிக்கையும் பயமும் பிரிக்க முடியாத சக்திகள் தான். ஆனால், ஒருவன் பய உணர்விலிருந்து விடுபட வேண்டுமானால், நம்பிக்கை நிறைந்தவனாக இருத்தல் வேண்டும்.

நிறைந்த நம்பிக்கை உள்ளவனே, வாழ்வில் மற்றவர்கள் மதிக்கத்தக்க அளவில் உயர்ந்திட முடியும்.

ஏன் அப்படி நம்புகிறோம்?

 

வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்கள் எல்லாம், முயற்சிக்கும் நேரங்களில் வீழ்ந்து அடி பட்டவர்கள் தாம்.

வீழ்ந்ததை எண்ணிக் கிடப்பவர்கள் கோழைகள்.

வாழுகின்ற ஒவ்வொரு நிலையிலும், எழுந்து முன்னேற எத்தனிக்கும் இயல்புள்ளவர்களே, புகழ் பெறுகின்றார்கள்.

இந்தப் புகழ்நிலைக்கு அழைத்துப் போவது தான் விளையாட்டுக்கள் ஆகும்.

 

விளையாட்டு மனிதர்களிடையே நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம்பிக்கையை வளர்க்கிறது. மேலும் மேலும் உயர்த்துகிறது.

பய உணர்வைப் போக்குகிறது. பங்கு பெறும் ஆசையைத் தூண்டுகிறது.

எப்பொழுதும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படும் எழுச்சியை ஏற்படுத்துகிறது.

 

என்னால் முடியும் என்று முயல்வது –

நான் முயற்சித்துப் பார்க்கிறேனே என்று செயல்படுவது – 

எனக்கு வெற்றி கிடைக்கும் என்று உழைப்பது –

எப்படியும் வென்றே தீருவேன் என்று சபதம் எடுப்பது. –

இன்றில்லாவிட்டாலும், நாளைக்காவது என் முயற்சியால் வெல்வேன் என்று கங்கணம் கட்டுவது –

கடமையுணர்வுடன் ஈடுபடுவது –

பிறர் பரிகாசத்தினை புறம் தள்ளுவது 

எல்லாமே நம்பிக்கை தரும் நல்ல பலம்தான்.

 

இத்தகைய இனிய சக்தியை, எழுச்சி மிக்க பலத்தை, பண்பாட்டை, மக்களிடையே வளர்த்துக் கொண்டிருப்பதால் தான், மனித குலத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என‌ விளையாட்டுக்கள் மகத்தாக‌ வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இவற்றைப் பற்றி மாறுபட்ட கருத்துடன் தூற்றும் மக்கள் அழிந்து போயிருக்கிறார்கள். ஆனால் விளையாட்டுக்கள் என்றும் அழியாமல், குன்றிலிட்ட தீபமாக ஒளிகாட்டி, வாழ்வில் வந்த துணையாக உதவுகின்றன.

இந்த நம்பிக்கை உள்ளவர்களே மனிதர்களில் மேலானவர்களாக வாழ்கின்றார்கள். அதுதானே உண்மை.

எஸ்.நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.