நம்பிக்கை வேண்டும்

விவேகானந்தர்

நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம். நான் சொன்னால் நம்புவீர்களா? இங்கிலீஷ்காரனைவிட நமக்கு நம்பிக்கை குறைவு. ஆயிரம் மடங்கு குறைவு.
முப்பத்து மூன்று கோடி ஜனங்களாகிய நாம் சென்ற ஆயிரம் ஆண்டுகளாக, நம்மை மிதித்துக் கொண்டுவரும் எந்த அன்னியக்கூட்டத்தாராலும், அவர்கள் எவ்வளவு சிறு தொகையினரா யிருப்பினும், ஆளப்பட்டு வருவதேன்?

ஏனெனில், அவர்களுக்குத் தங்களிடம் நம்பிக்கை இருந்தது; நமக்கு அது இல்லை. உங்களிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக்கையின் மேல் வலிமையுடன் நில்லுங்கள். அதுவே நாம் வேண்டுவதாகும்.

நமக்கு சிரத்தை வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும். பலமே உயிர்; பலவீனமே மரணம். நாம் மரணமற்ற சுதந்திரமுள்ள, தூய்மையே இயல்பாகக் கொண்ட ஆத்மா அல்லவா? நாம் பாவம் எவ்வாறு செய்யமுடியும்? முடியவே முடியாது. இத்தகைய நம்பிக்கை நம்மை மனிதர்களாக்கும்; தேவர்களாக்கும். நாம் சிரத்தையை இழந்து விட்டபடியால்தான் இந்நாடு நாசமடைந்திருக்கிறது.

நாம் பல விஷயங்களைப் பற்றி எண்ணுகிறோம். ஆனால் அவற்றைச் செய்வதில்லை, நாம் கிளிப்பிள்ளைகள் ஆகிவிட்டோம். பேசுதலே நமது வழக்கமாய்ப் போய்விட்டது. செயலில் ஒன்றும் நடத்துவதில்லை. இத்தகை வலிமையற்ற மூளையினால் எதுவும் செய்யமுடியாது. அதற்கு வலிவு கொடுக்க வேண்டும்.

நீங்கள் அறிந்தது அதிகம்; ஆனால் செய்வது குறைவு. உங்கள் அறிவு அளவுகடந்து போய்விட்டது. அதுதான் உங்களுடைய தொல்லை. உங்கள் இரத்தம் வெறும் தண்ணீர் போன்றது. ஆகையினால்தான் உங்கள் மூளை தோல் உரிந்து வருகிறது; உங்கள் உடம்பு சோர்ந்து கிடக்கிறது. உங்கள் உடம்பை மாற்றிப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பேச்சு! பேச்சு! பேச்சு! பேச்சு அளவு கடந்துவிட்டது. நாம் பெரிய சாதியாராம்! உளறல்! நாம் மனோபலமும் உடல் வலிவும் அற்ற சோகைகள்; உண்மை இதுதான்.
நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் எதையும் பரிகாசிக்கும் தன்மை, சிரத்தை இல்லாமை. இந்நோயைத் தொலைத்துவிடுங்கள் சிரத்தையுடைய பலசாலிகளாக இருங்கள். மற்றவையெல்லாம் தாமே வரும்.

நமது சமயம் சமையலறைக்குள் புகுந்துவிடக்கூடிய அபாயம் நேர்ந்திருக்கிறது. நாம் வேதாந்திகளுமல்லோம்; பௌராணிகர்களுமல்லோம். தாந்திரிகர்களுமல்லோம்.நாம் ‘தொடாதே’ சமயிகள், சமையலறையே நமது சமயம். சோற்றுப் பானையே நமது கடவுள். “என்னைத் தொடாதே, நான் பரிசுத்தன்” என்பதே நமது சமயக் கொள்கை.இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் இவ்வழியே சென்றோமானால் நம்மில் ஒவ்வொருவரும் பைத்தியக்காரர் விடுதியையே அடைவோம்.

என் மகனே! எந்த மனிதனானாலும், தேசமானாலும் பிறரைப் பகைத்து உயிர்வாழ முடியாது. என்றைய தினம் இந்நாட்டில் ‘மிலேச்சன்’ என்னும் வார்த்தையைச் சிருஷ்டித்தார்களோ, என்றைய தினம் பிறருடன் கலந்து பழகுவதை நிறுத்தினார்களோ, அன்றே இந்தியாவுக்குச் சனியன் பிடிக்கலாயிற்று.

மற்றொரு படிப்பினையை நாம் நிறைவு கூர வேண்டும். பிறர் செய்வது போல் செய்தல் நாகரிகம் ஆகாது. நான் இராஜாவின் உடைதரித்துக் கொள்ளலாம். அதனால் நான் இராஜாவாகி விடுவேனோ? சிங்கத்தோல் போர்த்துக் கொண்ட கழுதை சிங்கமாகி விடுமா?

பிறரைப் போல் வேஷந்தரித்தல் பெரிய கோழைத்தனம். அதனால் அபிவிருத்தி எதுவும் ஏற்படாது. உண்மையில் அது மனிதனுடைய பயங்கரமான இழி நிலைக்கு அறி குறியாகும்.

ஒருவன் தன்னைத் தானே இழிவாக நினைக்க ஆரம்பித்து விட்டால், தன் முன்னோர்களைப் பற்றி வெட்கப்பட ஆரம்பித்து விட்டால் அவனுடைய அழிவு காலம் நெருங்கி விட்டதென்பது உறுதியாகும்.

இந்திய வாழ்வு முறையிலிருந்து அகன்று விடாதீர்கள்; இந்தியர் அனைவரும் வேறோர் அன்னிய ஜாதியாரைப் போல் உண்டு, உடுத்து, நடக்கத் தொங்கினால் இந்தியா நன்மையடையும் என்று ஒரு கணமும் நினைக்க வேண்டாம்.

நாம் சோம்பேறிகள்; நம்மால் வேலை செய்ய முடியாது; நம்மால் ஒன்றுசேர முடியாது; நாம் ஒருவரை யொருவர் நேசிப்பதில்லை; ஆழ்ந்த சுயநல உணர்ச்சி உள்ளவர்கள் நாம்; நம்மில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரையொருவர் துவேசியாமல் எதுவும் செய்ய முடியாது.

நமது இயற்கையில் நிர்மாணத்திறன் என்பது பூஜ்யமாயிருக்கிறது. இந்தத் திறன் பெற வேண்டும். அது பெறும் இரகசியம், பொறாமையைத் தொலைத்தலேயாகும். உங்கள் சகோதரர்களின் அபிப்பிராயத்திற் கிணங்க எப்போதும் சித்தமாயிருங்கள். எப்போதும் சமசரப் படுத்தவே முயலுங்கள்.

நமது நிலைமை என்ன? கட்டுப்பாடு சிறிது மில்லாத ஜனத்திரள்; சுய நலம் மிகக் கொண்டவர்கள்; நெற்றியில் குறியை இந்தப் புறமாகப் போடுவதா, அந்தப் புறமாய்ப் போடுவதா என்பது குறித்து நூற்றுக்கணக்கான வருஷங்களாய்ச் சண்டை போடுகிறவர்கள்; சாப்பிடும் போது பிறர் பார்த்தால் உணவு தீட்டாய் போய்விடுகிறதா இல்லையா என்பது போன்ற விஷயங்களைப் பற்றிப் புத்தகம் புத்தகமாய் எழுதுகிறவர்கள் இத்தகைய மக்கள் நாம்.

ஆதலில் வருங்காலத்தில் பாரதநாடு பெருமை பெற்று விளங்க வேண்டுமானால் நிர்மாணத்திறன். சக்தி சேகரம் மன ஒற்றுமை இவை வேண்டும். சமூக வாழ்வின் இரகசியம் ஒரு மனப்படுதலேயாகும். சிதறிக் கிடக்கும் மனோ சக்திகளை ஓரிடத்தில் சேர்த்து ஒருமுகப்படுத்திப் பிரயோகித்தலே வெற்றியின் இரகசியம்.

சீனன் ஒவ்வொருவனும் தன்தன் வழியே சிந்திக்கிறான். ஆனால் மிகச் சிறு தொகையினரான ஜப்பானியர் எல்லோரும் ஒரு வழியாய் எண்ணுகிறார்கள். இவ்விரண்டின் பயன்களும் நீங்கள் அறிந்தவையே யாகும்.

குழந்தையைப் போல் எதற்கும் பிறரை நம்பியிருப்பது நமது தேசீய இயற்கையாய்ப் போய்விட்டது. உணவு வாயில் கொண்டுவந்து போடப்பட்டால் விழுங்க எல்லோரும் தயாராயிருக்கிறார்கள். சிலர் அதையும் தொண்டைக்குள் தள்ள வேண்டுமென்கிறார்கள். உங்கள் காரியத்தை நீங்களே செய்து கொள்ள முடியாவிடின் நீங்கள் உயிர்வாழத் தகுதியற்றவர்களாவீர்கள்.

ஒவ்வொரு தேசமும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே ரட்சித்துக் கொள்ள வேண்டும். பிறர் உதவியை எதிர் பார்த்தல் ஆகாது. இதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

அயல் நாட்டு உதவியை நீங்கள் நம்பியிருக்கக் கூடாது. தனி மனிதர்களைப் போலவே தேசங்களும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள வேண்டும். இதுவே உண்மையான தேசபக்தி. ஒரு தேசம் இது செய்யக்கூட வில்லையானால், அதன் முன்னேற்றத்திற்கு இன்னும் காலம் வரவில்லையென்று அறிந்து கொள்ளுங்கள், அது காத்திருக்கவே வேண்டும்.

தொழிலில் ஒழுங்கு முறையைப் பொறுத்தவரை இந்தியர்கள் அசட்டை அதிகம் உடையவர்களாயிருக்கிறார்கள். கணக்கு வைத்தல் முதலியவைகளில் அவர்கள் திட்டமாயும், கண்டிப்பாயும் இருப்பதில்லை. இந்தியாவில் ஒற்றுமைப்பட்ட முயற்சிகள் எல்லாம் இந்த ஒரு பெருங் குற்றத்தின் காரணமாகவே அழிந்து விடுகின்றன.

தொழிலில் ஒழுங்கு முறை அனுசரிப்பது குறித்து நாம் இது காறும் கவனம் செலுத்தியதேயில்லை. தொழில் முறைமையில் கண்டிப்பு வேண்டும். அதில் சிநேகத்ததுக்கும் சங்கோசத்துக்கும் இடமிருத்தல் கூடாது.

ஒருவன் தன் வசமுள்ள ஒவ்வொரு நிதிக்கும் மிகத் தெளிவாகக் கணக்கு வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு உத்தேசிக்கப்பட்ட பணத்தை ஒருவன் பட்டினி கிடக்கவே நேர்ந்தாலும் வேறொன்றுக்கு உபயோகிக்கக்கூடாது. இதுதான் தொழில் நேர்மை.

அடுத்தாற்போல் தளராத ஊக்கம் தேவை. நீங்கள் எக்காரியம் செய்தாலும், அந்த நேரத்திற்கு அதுவே இறைவன் பணி ஆகிவிட வேண்டும்.

– விவேகானந்தர்

Visited 1 times, 1 visit(s) today