நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை

நம் ஆழ்வார் என்ற‌ நூல் திரு.சி. இராமமூர்த்தி இராமாநுஜதாசன் அவர்களால் மே மாதம்-2021 ல் வெளியிடப்பட்ட அற்புதமான நூல் ஆகும்.

அற்புதமான ஆழ்வாரான நம்மாழ்வாரின் இலக்கிய நயங்களையும், வைணவச் சமயம் சார்ந்த இறையாண்மைக் கருத்துக்களையும் பன்னூல் புலமையோடு ஒப்பிட்டும், உவமித்தும் எழுதப்பட்டது இந்நூல்.

ஆன்மீகம் ஒரு மாபெரும் பிரமாண்டம். அதை இன்னும் யாரும் முழுதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் நுழைவதற்கான பல வழிகளில் இந்த நூலும் ஒன்று எனலாம்.

பக்திமை எனும் புதிர்

அரியதான பலவற்றை மனிதன் வெளிக்கொணர்ந்தான் என்றால், அதில் மிக அரிதானது “பக்திமை” எனும் புதிராகும்.

எங்கு தேடினும் கிடைக்காத ஞானப் புதையலைக் கண்டு, தெளிந்து, இம்மானிட இனம் தனக்கானதாக, அதை அனுபவிப்பதை, என்னவென்று வியப்பது?

இயற்கை, கூறமுடியாத மறையாற்றலோடு விளங்குவது. அதனூடாக நடக்கும் பலவும், எண்ணியும், எண்ணிலடங்கா விஸ்வரூபத் தரிசனத்தைத் தந்து கொண்டே இருப்பது.

இவ்வுலக இயக்கமும், அதன் மையமும் காலங்காலமாய் ஆராய, ஆராயப் பல கோடிப் பக்கங்களை நீட்டுவித்துக் கொண்டே பயணிப்பதாய் அமைந்திருக்கிறது.

இவ்விடத்தில் தான் ‘ஆன்மீகம் சார்பான தேடலையும், விடையையும் மனிதன் பலநூற்றாண்டாய் கண்டு, கண்டு தெளிந்திருக்கிறான்.

இதில், அதிகப் புண்ணியம் செய்த பூமியாகத் தமிழகம் விளங்கி, மனிதனுக்கானச் சிந்தனைக்கு எட்டிய மட்டும் அளவிடமுடியா ஆன்மீகத்தைக் கண்டு விளக்கியுள்ளான்.

யாராலும் எப்போதும் அமைந்திட முடியா சூட்சுமப் பொருளாய் ஆன்மீகப் பேராற்றல் சக்தி வியாபித்திருக்கிறது.

அதனை, பிறப்பின் அதிசயத்தால். ஒவ்வொருவரும் ஒரு இடத்தைப் பிடித்து, அறிந்து, தெளிந்து விளக்கமளித்திருக்கின்றனர்.

கோடான கோடிப் பேர் கண்டும் தெளியாத ஆழ்கடல் ஆன்மீகத்தைக் கண்டு கண்டு மயங்கி அதனை உணர்ந்து, சிலர் அதாகி வாழ்ந்தும், கூறியும், எழுதியும் ஞான ஒளியை இனம் காட்டினர்.

அதனையெலாம் வரும் மானிட இனம் உணர்ந்து கொள்ள, எத்தகு ஆற்றலையும், நுண்மான் நுழைபுலத்தையும் கொண்டிருக்க வேண்டும் என யோசித்துப் பார்த்தால், காலம் அதற்கு நிறைய விடை கொடுக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஆன்மீகப் புருஷர்களை இயற்கை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

அவர்கள் கண்டு தெளிந்து இருக்கும் ஞான உணவைப் படையலிடுவர். அதுவே நமக்குக் கிடைத்திருக்கும் இறையாண்மை பேரூண்மைகள்.

அதனையொட்டி, தேடித் தேடி ஆன்மீகச் சான்றோர்கள் உருவாக்கித் தந்திருப்பவைகளின் தொகுப்பே தமிழில் “பக்திமை நூல்களாக” இனம் காணப்படுகின்றன. உலகினோர், இதனைக் கண்டு வியப்புறுகின்ற ஞான வாழ்வைத் தேடி இதனூடாக அலைகின்றனர்.

நம்மோடு இணைந்து பயணிப்பவர்களில் கூட ஒரு சிலர் இந்த ஞான வாழ்வின் தேடலுக்குள் இனம் புரியா ஆனந்தத்துடன் வாழ்வதுண்டு.

அவ்வகையில், திரு. சி.இராமமூர்த்தி இராமாநுஜதாசன் இன்று நம்மோடு பயணிப்பவர்களில் ஞானவாழ்வை அடைந்து, அதை வெளிப்படுத்தும் நபராகவும் விளங்குகிறார்.

சு.இராமமூர்த்தி அவர்கள் வைணவ சமய இலக்கியத்தின் மூலம் பரிபூரணமான இறைத்தத்துவ நிலையைப் புரிந்து அதுவாகவே வாழ்பவர்.

ஆழமான இலக்கிய நுண்ணறிவும், பிறரையும் அதனுடாக அழைத்துச் செல்லும் பாங்கும் அளப்பறிய ஆற்றலாக அவரிடம் வெளிப்பட்டிருக்கின்றது. இது இறைச் செயலின் ஒரு வடிவாகும்.

ஒரு இலக்கியம், படிப்பவருக்கு வெவ்வேறு கோணங்களில் நயம் தருவதாக அமையும். சு.இராமமூர்த்தி அவர்களோ தாம் பருகிய இலக்கிய இன்பத்தை அதன் சார்பான இலக்கியம் வெளிப்படுத்த நினைக்கிற உட்பொருளையும் உணர்ந்து பிறருக்கும் தரவேண்டும் என உருகி உருகி எழுதுகிறார்.

விரிந்த பிரபஞ்சத்தைப் போல் இறைவனின் ஆற்றலும் பெருமையும் விரிந்தது. எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிற அவனை அப்படியே உணர்ந்தும், உணர்ந்ததைக் கூறியும் விடலாகாது. எல்லோரையும் உணர வைக்க வேண்டும் அதனையே சி.இராமமூர்த்தி அவர்கள் தமது நூல்களில் எழுதிச் செல்கிறார்.

நம்மாழ்வார் சிறப்போதும் நம் ஆழ்வார்

ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார். நம்மாழ்வார் அவர்களில் ஒருவர். பொதுவாக‌ ஆழ்வார் என்றாலே அது நம்மாழ்வாரையே குறிக்கும்.

பதினாறு ஆண்டுகள் திருக்குருகூர் நம்பி கோவிலின் புளியமரப்பொந்தில் யோகத்தில் இருந்து மதுரகவி ஆழ்வாரின் கேள்விக்கு பதில் தந்து அவரை சீடராகப் பெற்ற பெருமை இவரைச் சாரும்.

நம்மாழ்வார் இயற்றிய நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, பெரியதிருவாய்மொழி ஆகியவை. இவை ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையானவை ஆகும் என்பது பெரியோர்களின் வாக்கு.

நம் ஆழ்வார் நூல் முழுவதும் நம்மாழ்வாரின் சிறப்பும், பாநயமும், சிந்தனையும், இறைத்தத்துவமும் விரித்து வியந்தோதப்பட்டுள்ளன. 29 தலைப்புக்களில் எண்ணிலடங்கா பெருமாளின் பெருமைகளை எடுத்துக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

திருவள்ளுவரும் நம்மாழ்வாரும் எனும் தலைப்பில், வைணவச் சமயப் பொருண்மையில், இவ்விருவரும் எவ்வாறு ஒன்றியுள்ளனர் என்பதை மிக அழகாக விரித்து விளக்கிக் கூறியுள்ளது சிறப்பாகும்.

நம்மாழ்வார் பாடல்களில் தன் மனம் முழுவதையும், உள் செலுத்தி அதன் வெளிப்பாட்டுத் தன்மையைக் கூறும் அழகு, நம்மையெலாம் மயக்குவதாக அமைந்துள்ளது.

திருவள்ளுவரை மட்டும் ஒப்புமைப்படுத்தாது, பதஞ்சலி முனிவர், சங்க இலக்கியம், பரிபாடல், நளவெண்பா, கம்பர், கருவூர் சித்தர், சடகோபர் அந்தாதி, உபயகவி அப்பா, பராங்குச நாடகம், நம்மாழ்வார் தாலாட்டு, திருக்கூர் மகிழ்மாறன் பவனிக்குறம், சேனாவரையர், போன்ற எண்ணற்றோர் பாடல்களின் வழியும், நூல்களின் வழியும் தம் புலமைத்திறனை வெளிப்படுத்தி ஆய்வு செய்துள்ளார்.

நூல், படிப்பவரின் மனதில் ஆழமான உணர்வுகளைத் தோற்றுவிக்க வேண்டும். நூல் கருத்துக்களிலிருந்து சிலவற்றில் இயைந்தும், சிலவற்றில் மறுப்புத் தெரிவித்தும் சிந்தனை வழி ஏற்றும் மறுத்தும் முன்னோர் மொழிந்தவற்றை உணர்வர்.

அவை மனம் சார்ந்த பெருத்த மாற்றங்களை உருவாக்கி நடைமுறை மாற்றங்களையும் உருவாக்கி வெளிப்படுத்தும்.

எனவே, நூல் படிப்பதும், நூல் எழுதுவதும் சாதாரண வேலையல்ல. உள்பெறுபவையும், வெளிப்படுத்துபவையும் ஒரு மாபெரும் மாற்றத்தைச் சமூகத்தில் உண்டாக்கித் தருபவை.

நம் ஆழ்வார் நூலின் ஆசிரியர். சி.இராமமூர்த்தி இதனை நன்குணர்ந்து, வெளிப்படுத்தி இருக்கும் ஆன்மீகம், சமூக மாற்றத்தை உள்ளம் அளவில் ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

நம்மாழ்வாரின் பிறப்பு, வளர்ப்பு, நூல்நயம், நம்மாழ்வார் காட்டும் ஆன்மீக வழி, வைணவப் பெருமைகள் உலக வாழ்வுக்கான சடங்குகள், வழிபாடுகள் என விரிந்த தளத்தை உணர்ந்து தெளிந்து கொள்ள முடிகிறது இந்நூல் மூலம்.

‘ஞானம்’ என்பது எது? உலகப் பிரச்சனைகளுக்குக் காரணம் எது? என்பதற்கான பதிலை இந்நூலாசிரியர் கூறும் பொழுது, “நாம் பொதுவில் சமரசம் பேசினாலும் அவற்றில் ஞானப்பசையில்லை. அகண்ட உணர்வு இல்லை.

நாடு, மொழி, நிறம், சாதி, மதம் முதலியவற்றில் ஏதேனும் ஒன்றின் மீது பற்றுக்கொண்டு வாழ்கின்றோம். நாடுகள் தனித்தனியாக இருப்பவை.

மொழிகள் வெவ்வேறாகின்றன. ஆகவே, ஒருங்கிணைக்கும் சமரச ஞானமார்க்கம் மக்களிடம் கூடுவது கடினமாகிறது. சிலநேரம் போடும் பூசலும் தலைவிரித்தாடுகின்றன.

சமரச ஞான வழிக்கு, நாடு, மொழி, சாதி, நிறம் ஆகியவற்றிற்குப் பொதுவாயுள்ள ஒன்று இறைப்பொருளே. வேற்றுமைகளில் இறை அடங்காது. இறை என்பது எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக் கொள்வது” என்கின்றார். இதுபோல், உலக மக்களின் ஆன்மீகத் தேடலுக்குப் பல இடங்களில் விடை கூறுகிறார்.

இன்றைய ஆன்மீகச் சூழலில், இறையாளர்களான மதக்குருமார்கள் மேன்மையுடையவர்கள் தான். ஆனால் வழிபட வேண்டியவர்கள் அல்லர் எனத் துணிந்து சொல்கிறார்.

அதற்காக அவர் நம்மாழ்வாரையும் துணைக்கு அழைத்துக் கூறும் போது,

“சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ
என்னாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்”
எனும் திருவாய்மொழிப் பாடலின் வரிகளை எடுத்தாள்கிறார்.

சமூகக் கருத்துகள்

‘அடியார்க்குச் சாதிபேதமில்லை’ எனும் தலைப்பில் இன்றையச் சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளை நீக்கத் தேவையான அறிவுரைகளை ஆன்மீக வழியில் கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறும் பொழுது, “பிறப்பால் குலம் என்று போற்றும் சுயநலக் கூட்டம், தெரிந்தும் போடுகின்றது ஆட்டம்.

இவற்றால் சனாதன தர்மமே காண்கிறது ஆட்டம். இறைவன் சொல்லவில்லை ஆழ்வார்கள் சொல்லவில்லை.

எப்படி புகுத்தப்பட்டது? எக்காலத்தில் வகுக்கப்பட்டது? பக்திக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? சிந்திக்க வேண்டும்” என்கிறார்.

சமயம் சார்ந்த ஆழ்வாரின் பாடல்களின் திறனை எண்ணி எண்ணி வியந்து பேசுகையில் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் ஒருங்கே பேசியிருப்பது ஆசிரியன் சமூக மேம்பாட்டில் அவருக்குள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது.

ஞானம் கிடைக்கத் தேவையான அருள் அமுதைக் கொட்டி நிறைத்து, எதிர்காலச் சமூகம் சிறப்பாக வாழ வழியையும் காட்டுகிறார் ஆசிரியர்.

அதற்காக நம்மாழ்வாரின் வாழ்வையும், நூல் சிறப்பையும் நம் கண் முன்னே விரித்து, நம்மாழ்வாரின் விஸ்வரூப தரிசனத்தை அடையாளப்படுத்துகின்றார்.

ஆன்மீகம் தழைந்தோங்க நம் ஆழ்வார் போன்ற நூல்கள், மிகப்பெரும் அடிப்படையாக அமைந்து வாழ்விக்கும்.

தாம் கண்ட ரகசியத்தை, ரசனையை, அனுபூதியை யாவரும் அள்ளிப் பருக வைத்த இராமாநுஜனைப் போல், இந்நூல் ஆசிரியரும் நம்மை வைணவப் பெருங்கடலில் நீந்த வைக்கிறார். பெயருக்கேற்ப இராமாநுஜதாசனாகவே தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

நம் ஆழ்வார் பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்புப் பொருந்திய நூல் ஆகும்.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com


Comments

“நம் ஆழ்வார் – நூல் மதிப்புரை” அதற்கு 3 மறுமொழிகள்

  1. நூல் ஆசிரியர் திறனை அறிய முடிகிறது. வைண்வ இலக்கியம் அவரை மறக்காது.

  2. இந்த நூல் எங்கு கிடைக்கும். நூலாசிரியரின் கருத்துக்களை அறியவும், வைணவக் கருத்துக்களை அறியவும் மிக ஆவலாக உள்ளேன். ஆசிரியரின் எண் தாருங்கள்

  3. முனைவர் க வீரமனி

    ஆன்மீகத்தின் மூலம் சமூக பாதுகாப்பும்
    உறுதி செய்ய பட வேண்டும் என்பது
    அவசியம்
    அப்படி இல்லை என்றால் ஆன்மிகம் ஒரு ஒளியற்ற விளக்காக போய்விடும்..
    நூலும் அதன் விமர்சனமும் மிக அருமை…