மார்க்கெட்டில் நுழைந்த மாணிக்கவேலு ஏதேச்சையாய் திரும்பியபோது தேங்காய் வாங்கிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்துவிட்டார்.
வழக்கமாய் காணப்படும் உற்சாகம் அவர் முகத்தில் இல்லை. வாட்டமுடன் அவர் காணப்படுவதைக் கண்டு குழம்பினார் மாணிக்கவேலு.
நேற்று அவர் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் ஏடாகூடமாக ஏதாவது சொல்லிவிட்டுப் போயிருப்பார்களோ?
அவர் அருகில் போய்,
“என்ன ராமநாதா, நேற்று வந்தவங்க ராதிகாவைப் பார்த்தாங்களா? என்ன சொன்னாங்க?” எனக் கேட்க,
ராமநாதன் பதிலேதும் கூறவில்லை.
மாணிக்கவேலு கேட்டதற்கு என்ன கூறுவதென்று அவருக்குத் தெரியவில்லை. முகம் இன்னும் வாட்டமுடன் காணப்பட்டது.
“என்னப்பா, என்ன விஷயம்? அதிகம் எதிர்பார்க்கிறாங்களா?”
‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினார் ராமநாதன்.
“அப்புறம் என்ன? ஏன் என்னவோ போல் இருக்கே?”
“நாம ஒண்ணு நினைக்க, தெய்வம் ஒண்ணு நினைக்குது மாணிக்கம்.”
“என்னப்பா புதிர் போடறே? விவரமாத்தான் சொல்லேன்.”
“உனக்குத் தெரியும் மாணிக்கம். நான் ராதிகாவுக்கு எத்தனை இடங்கள் பார்த்திருப்பேன்? கடைசியாய், ஒரு வழியா ஒரு வரன் வந்து குதிர்ந்ததேன்னு சந்தோஷமாக இருந்துச்சு.”
“ஏன் உன் மனைவிக்கு அவங்களைப் பிடிக்கலையா?”
“அதெல்லாம் இல்லை மாணிக்கம். ராதிகாவுக்குத்தான் பிடிக்கலை.”
மாணிக்கவேலு ஆச்சரியமுற்றார்.
“என்னது ராதிகாவுக்குப் பிடிக்கலையா? மாப்பிள்ளையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நீ சொன்னேல்லே?”
“வரன் தேடறப்போ எல்லாம் நான் ரொம்ப அவசரப்படறதாகவும், இப்ப வேண்டாம் கல்யாணம்னும் சொல்லிக்கிட்டிருந்தா. இந்த இடம் எல்லாவிதத்திலும் பொருத்தமா அமைஞ்சிருக்கேன்னு சந்தோஷப்பட்டு பெண் பார்க்க வரச் சொன்னேன்.”
“முதன் முதலா வீடு தேடி வந்த இடத்தை இப்படி வேண்டாம்னு சொல்லிட்டாளே? எதனால் பிடிக்கலையாம்?”
“வா மாணிக்கம், அந்த பார்க்குக்குப் போய் பேசுவோம். மனசை அழுத்திக்கிட்டிருக்கிற பாரம் குறையணும்னா உன்கிட்ட மனசுவிட்டு எல்லாத்தையும் கொட்டணும்.”
ராமநாதனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது மாணிக்கவேலுவுக்கு. ரொம்பவும் மனம் உடைந்து போயிருந்தார்.
இருவருமாக பார்க்கில் ஒரு ஓரமாக இருந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டனர்.
“இப்ப சொல்லு ராமநாதன். ராதிகா என்ன சொல்கிறாள்?”
“மாணிக்கம், ராதிகா எங்க எல்லோருடைய தலையிலும் கல்லைத் தூக்கிப் போட்டுட்டாப்பா.”
சொன்னவர் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதார்.
மாணிக்கவேலு அதிர்ந்தார்.
“ராமநாதன், என்ன இது? என்ன ஆச்சு உனக்கு? இப்படி குலுங்கி குலுங்கி அழற அளவுக்கு என்ன நடந்துபோச்சு இப்போ? இந்த இடம் பிடிக்கலைன்னா, வேறு இடம் பார்த்தால் போச்சு.”
“நீ நினைக்கிறாற்போல் இல்லை மாணிக்கம். குடும்ப கௌரவமே போயிடுச்சு.”
“புரியும்படிதான் சொல்லேன்.”
“யாரோ ராம்குமாராம். காலேஜில் லெக்சரராம். அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பாளாம். அவங்க வீட்லேயும் சம்மதிச்சுட்டாங்களாம்.”
“உள்ளுர் தானே? விசாரிச்சாப் போச்சு. அவளுக்குப் பிடிச்சிருக்குன்னா முடிச்சிடலாமே? இதுல என்ன குடும்ப கௌரவம் போயிடுச்சுங்கறே?”
“எங்க குடும்பத்துல யாருமே இப்படிச் செய்யலை மாணிக்கம். ஏல்லாமே அரேஞ்சுடு மேரேஜ்தான். ஜாதகம் பார்த்து, குலம் கோத்திரம் பார்த்து பெற்றோர் ஏற்பாடு பண்ணின கல்யாணம்தான் நடந்திருக்கு.”
“இவளுக்குப் பிறகு ஒருத்தி இருக்காளே? அவ கல்யாணம் ஒழுங்கா நடக்க வேண்டாமா? என்னோட மத்த மாப்பிள்ளைங்க, சம்பந்திங்க எங்க குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க? இருக்கிற ஒரே பையனுக்கும் யார் பொண்ணு குடுக்க முன்வருவாங்க?”
“தப்பு ராமநாதன். நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் ஆயிடாது. ராதிகா இப்ப என்ன பண்ணிட்டான்னு நீ இப்படி ஆடிப் போயிருக்கே?”
“என்னப்பா? ரொம்ப சாதாரணமா சொல்லிட்டே. உனக்கும் ஒரு பெண் இருந்து அவளும் இப்படிச் செஞ்சிருந்தா, நீ இப்படிச் சொல்லமாட்டே.”
“தோ பார் ராமநாதன். ஏனக்கு பொண்ணுங்க இல்லைதான். ஆனா ரெண்டு பிள்ளைங்களுமே லவ் மேரேஜ்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்கன்னு உனக்குத் தெரியும். நான் என்ன உன்னை மாதிரி இடிஞ்சு போயா உட்கார்ந்திருக்கேன்? இல்லை… என் குடும்ப கௌரவம் எதுவும் பாதிக்கப்பட்டிருக்கா? அவங்களும் நல்லா இருக்காங்க. நாங்களும் சந்தோஷமாத்தான் இருக்கோம்.”
“உன்னை மாதிரியா நான்? உங்க சமூகத்துத்துல அதையெல்லாம் ஏத்துக்கலாம். எங்க சமூகத்தைப் பத்தி உனக்குத் தெரியாது மாணிக்கம்.”
“ராமநாதன்! நீ ஒரு ரிடையர்டு மில்டரி ஆபீசராயிருந்தும் இந்த நூற்றாண்டுல வாழ்ந்தும் இப்படிப் பத்தாம் பசலித்தனமா இருக்குறது ரொம்ப வேடிக்கையாதான் இருக்கு. கௌரவம், அந்தஸ்து, ஒழுக்கம், கட்டுப்பாடு எல்லாம் அவங்கவங்க நேர்மையா நடந்துக்கிறதுலேயும், நன்னடத்தையுடன் இருக்கறதுலேயும்தான் அடங்கியிருக்கு. ஜாதியிலோ, குலம் கோத்திரத்திலேயோ இல்லைப்பா.”
“அப்படீன்னா ராதிகா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறதுல தப்பு இல்லேங்கிறியா? அவ செய்யற காரியம் ரைட்டுங்கிறியா?”
“ஒய் நாட்? ஓரு விஷயத்துல நீ சந்தோப்படணும் ராமநாதன். உங்க எல்லோருடைய சம்மதத்தோட, ஆசீர்வாதத்தோட ராம்குமாரோட வாழ ஆசைப்படறா. மனசுல உள்ளதை வெளிப்படையா சொல்லியிருக்கா.”
“என்னோட மத்தப் பொண்ணுங்களுக்கெல்லாம் ஜாதகம், பொருத்தம் பார்த்துத்தானே கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்? அவங்கெல்லாம் இப்படி ஒரு காரியத்துல ஈடுபடலேயே?”
“உன்னோட மூத்த பெண்ணுக்கு தாய்மாமனையே கட்டி வச்சுட்டே. ரெண்டாவது பெண்ணை உன்னோட தங்கச்சி பையனுக்குக் கொடுத்திருக்கே. மூணாவது பெண்ணை உறவுக்குள் இல்லாம வெளி இடமாத்தான் கொடுத்திருக்கே. உறவிலும் சரி, வெளியிடத்திலும் சரி ஜாதகம் பார்த்து, எட்டுப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணிவச்சே…”
பேசிக் கொண்டிருந்த மாணிக்கவேலு கடலை விற்றுக் கொண்டிருந்த சிறுவனிடம் இரண்டு பொட்டலங்கள் வாங்கி ஒன்றை ராமநாதனிடம் நீட்டினார். இன்னொன்றைப் பிரித்து ஒவ்வொன்றாய் வாயில் போட்டுக் கொறித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.
“இல்லைன்னு சொல்லாம, உன்னோட பெரிய பொண்ணு அமோகமா இருக்கா. உன் ரெண்டாவது பெண்ணை தங்கச்சி பையனுக்குக் கட்டி வச்சியே. என்ன ஆச்சு? வருஷத்துல பாதிநாள் உங்க வீட்லதான் இருக்கா.
கல்யாணத்துக்கு முன்னால இருந்த அண்ணன் தங்கச்சி உறவு இப்போது முறிஞ்சு போய் நிக்குது. பணம், காசு, சொத்துன்னு வந்துட்டா உறவையெல்லாம் மறந்துடுறாங்க.
மூணாவது பெண் நிலைமை மட்டும் என்னவாம்? கல்யாணத்துக்கு அப்புறம்தான் தெரிஞ்சது மாப்பிள்ளை ஒரு ஹிஸ்டீரியா பேஷண்ட்டுன்னு. வாழ்நாள் முழுக்க அவனோட அல்லாடிக்கிட்டிருக்கா.
ராதிகா படிச்சுப் பட்டம் வாங்கி வேலைக்குப் போறா. வெளி உலகம்னா என்னன்னு தெரியும் அவளுக்கு. இவ்வளவு படிச்சவ, அவ வாழ்க்கையை எப்படிப்பட்டவனோட அமைச்சுக்கணும்னு தெரிஞ்சிட்டிருக்க மாட்டாளா என்ன?”
மாணிக்கவேலுவின் பேச்சில் உடன்பாடு இல்லாதுபோல், ராமநாதன் எதுவும் கூறாமல் மௌனமாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, மாணிக்கவேலு மீண்டும் தொடர்ந்தார்.
“….. ராமநாதன், எங்கிட்டக் கேட்டா கல்யாணத்துக்கு முன் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஜாதகம், குலம், கோத்திரம், பொருத்தம் இதையெல்லாம் பார்க்கிறதைவிட, அவங்கவங்க உடல்நலம் பற்றி டாக்டர் சர்டிபிகேட் வாங்கித் தரணும்னு ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக்கலாம். யாரும் எந்த வியாதியையும் மறைச்சுக் கல்யாணம் செஞ்சு வைக்க முடியாதில்லையா?”
“டாக்டருக்கு லஞ்சம் கொடுத்து எந்த வியாதியும் இல்லேன்னு பொய் சர்டிபிகேட் வாங்கிக் கொடுக்கமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?”
“கரெக்ட் ராமநாதன். பெத்தவங்க இப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்யற கல்யாணங்களே இந்தக் கலியுகத்துல வெற்றிகரமாய் அமையாதப்போ, லவ் மேரேஜை ஆதரிக்கிறதுல என்ன தப்பு?”
“பிள்ளைங்க மட்டும் ரொம்பக் கரெக்டாத் துணையைத் தேடிப்பாங்கன்னு என்ன உத்தரவாதம் மாணிக்கம்? லவ் மேரேஜில் மட்டும் கல்யாணத்துக்குப் பிறகு பல உண்மைகள் தெரிய வராதா?”
“இந்த இடத்துல ஒண்ணைப் புரிஞ்சுக்கோ ராமநாதன். பழக்கடைக்குப் போறோம். பார்த்துப் பார்த்துப் பழங்களை வாங்குறோம்.
வீட்டில் போய் வெட்டிச் சாப்பிடும்போதுதான் ஏமாந்து போயிருப்பது தெரியும். புளிக்கும் இல்லேன்னா ருசிக்காது அல்லது உள்ளே அழுகியிருக்கும். ஏதாவது குறை இருக்கும்.
ஆனால், பழக்கடையிலேயே வேலை செய்யற விற்பனையாளனுக்கு பழம் தேவைப்படும்போது, கொட்டிக்கிடக்கிற பழங்களில் எந்தப்பழம் தரமானது, ருசியானது என்பதை அவன் நிச்சயம் தெரிஞ்சு வச்சிருப்பான்; நல்ல சுவையான பழங்களைத்தான் தேர்ந்தெடுப்பான்.
அது மாதிரிதான் அதே காலேஜில், ஆபீஸில் வேலை செய்யற ராதிகாவுக்கு யார் நல்லவங்க, கெட்டவங்க, எப்படிப்பட்டவங்கன்னு நிச்சயமா தெரிஞ்சிருக்கும்.
அது மட்டுமில்லே ராமநாதன், பெண்ணானவள் தன்னோட மனசை ஒருத்தங்கிட்ட பறிகொடுக்கிறதுங்கிறது அவ்வளவு எளிதான விஷயமில்லே.
ஜாக்கிரதை உணர்வு, விழிப்புணர்ச்சி ரெண்டுமே ஆணை விட பொண்ணுக்குத்தான் அதிகம். ஏதோ பார்த்தோம். பேசினோம், மயங்கினோம்ங்கிற ரீதியில பெண்கள் செயல்படமாட்டாங்க.
ஒருத்தனை ஒரு பெண் விரும்பறா, கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறான்னா, எந்த அளவுக்கு அவனை ஊடுருவி எடை போட்டுப் பார்த்து, முடிவெடுத்திருக்கணும்? ஏன்னா அவதான் அவனோட வாழப்போறா.
தன்னை இன்னொருத்தங்கிட்ட ஒப்படைக்கிறதுக்கு முன்னால பத்தாயிரம் தடவைகளாவது யோசிச்சிருப்பா.’
மப்பும் மந்தாரமுமாய் இருந்த வானத்திலிருந்து அங்கொன்றும் தூறல் விழ, ராமநாதன் எழுந்தார்.
மாணிக்கவேலுவின் பேச்சை இடைமறித்து,
“லவ்வோ, கிவ்வோ மாணிக்கம், எங்க சமூகத்துப் பையனா இருந்துட்டாக்கூட பரவாயில்லை” என்றார் ராமநாதன்.
“என்ன ராமநாதன் இவ்வளவு விளக்கியும் இன்னுமா புரிஞ்சுக்கலே? எந்த சமூகமாக, ஜாதியாக இருந்தாலும் சரி. அனைத்திலும் நல்லவங்களும் கெட்டவங்களும் கலந்துதான் இருக்காங்க. யோக்கியர்களும் அயோக்கியர்களும் இல்லாமல் இல்லை.
ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் ஆண் மகன் மனசாட்சி உள்ளவனாக, கருணை உள்ளம் படைத்தவனாக, பெண்ணின் உள்ளத்தைப் புரிந்து கொள்பவனாக, கடைசிவரை அவளை வைத்துக் காப்பாற்றுபவனாக, ஒழுக்கமுள்ளவனாக, நேர்மையுடையவனாக இருந்தால் போதாதா?
இவைகள் அனைத்தையும் கொண்டவனோ, கொண்டவளோ எந்த ஜாதியாக, குலமாக, கோத்திரமாக, சமூகமாக இருந்தால்தான் என்ன?
வரம்பு மீறாத, ஆத்மார்த்தமான காதலை பெத்தவங்க ஆதரிக்கணும் ராமநாதன். அப்பதான் இளம் தலைமுறை செழிக்கும்.
மாறாக, அர்த்தமற்ற, பத்தாம் பசலித்தனமான எதிர்ப்பும், நிராகரிப்பும் வெறும் மனக்கசப்பையும் வேதனையையும் மட்டும்தான் தரும். இளந்தளிரை வெந்நீர் ஊற்றி அழிப்பதற்குச் சமம்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுறதாச் சொல்றாங்க. ஆனா, பெரும்பாலான பெற்றோருங்க தங்களோட பிள்ளைங்க திருமண விஷயத்துல செயல்படறதைப் பார்த்தா, திருமணங்கள் நரகத்துல நிச்சயிக்கப்படுறதாத்தான் தோணுது.”
சம்பிரதாயங்களிலும் பராம்பரிய சமூகக் கோட்பாடுகளிலும் ஊறிப் போய், அவைகளைக் கடைப்பிடித்து வாழ்வில் அலுத்து, சலித்துப் போய், நிம்மதியின்றி, அமைதியின்றி நடைப்பிணமாய் உலவி வந்த ராமநாதனுக்கு மாணிக்கவேலுவின் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளாகப்பட்டன.
ராதிகா கூறிய அந்த வரனைப் போய் பார்ப்பதுதான் முதல்வேலை என்கிற முடிவுக்கு வந்த அவர் வானத்தை அன்னாந்து பார்க்க, கருமேகங்கள் கலைந்துபோய் நீலவானமாய் அவரது உள்ளத்தைப் போல பளிச்சென காட்சியளித்தது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!