நரம்பு வலுவிழப்பு நோய்

உலகம் முழுவதும் மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோயாகவும், நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வரும் நோயாக சர்க்கரை நோய் உள்ளது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததாலோ அல்லது உடலில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் பராமரிக்கத் தவறியவர்களுக்கு உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைகின்றன.

இந்நோயால் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கணையம், கண்கள், பாதங்கள் மற்றும் நரம்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதிலும் குறிப்பாக உடலில் உள்ள வெளிநரம்புகள் பாதிப்படைகின்றன. கால்களுக்குச் செல்லும் நரம்புகள் முக்கியமாக பாதிப்பிற்கு உள்ளாகிறது.

இந்த பாதிப்பின் காரணமாக ஏற்படும் நோய் நரம்பு வலுவிழப்பு நோய் (DIABETIC NEUROPATHY) என்று அழைக்கப்படுகிறது.

சர்க்கரை நோயால் நரம்பில் ஏற்படும் பாதிப்புக்கள்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகஅதிகமாக இருக்கும் நிலையில், அதிகப்படியான உடலிலுள்ள சர்க்கரையானது ‘சார்பிட்டால்’ என்னும் வேதிப்பொருளாக உருமாறி புறநரம்புகளில் (PERIPHERAL NERVE) சேர்கிறது.

இதனால் நரம்பின் மெல்லிய இழைகள் பாதிக்கப்பட்டு நரம்பு முழுவதும் சேதமடைந்து கீழ்க்கண்ட அறிகுறிகள் உண்டாகின்றன.

கால்கள் மரத்துப் போதல்

கால், கெண்டைக்கால், பாதங்களில் எரிச்சல்

ஊசியால் குத்துவதைப் போன்ற வலி, இரவு நேரங்களில் வலி அதிகரிப்பது, கால்களில் மதமதப்பு

கெண்டைக்காலில் வலி

தோலில் வறட்சியான நிலை

பாதத்தில் மதமதப்பு மற்றும் உணர்ச்சியற்ற நிலை

இயல்பான உடல் வெப்பநிலையில் இருந்து பாதத்தின் வெப்பநிலை குறைந்து குளிர்நிலையில் காணப்படுதல்.

மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து இயன்முறை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உடலியக்கப்பயிற்சிகளும், நரம்பு பாதித்த நிலையில் உள்ள நோயாளிகள் குணமடையவும், நோயின் கடுமையான தாக்கத்திலிருந்து விடுபடவும் மிகவும் பேருதவியாக இருக்கும்.

நரம்பு வலுவிழப்பு நோய் இயன்முறை சிகிச்சை

நரம்புகளில் ஏற்படும் வலியை குறைக்க மின்சிகிச்சையான TRASCUTANEOUS ELECTRICAL NEVERE STUMULATION (TENS) மற்றும் நோயின் தன்மைக்கேற்ப HEAT THERAPY, ELECTRO THERAPY போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

உடலியக்கப் பயிற்சிகளானது வலிகளைக் குறைக்கவும், நரம்பு பாதிப்பிலிருந்து விடுபடவும் உதவுகிறது. நோயாளிகள் தாங்களாகவே கொள்ளும் சில உடலியக்கப்பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்காக பரிந்துரைக்கப்படும் உடலியக்கப் பயிற்சிகளில் பிரதானமானதும், அவசியமானதும் நடைப்பயிற்சியாகும்.

நடைப்பயிற்சியால் ஏற்படும் பயன்கள்

உடலில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது.

இரத்தக்குழாய்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
முறையான‌ நடைப்பயிற்சியினால் புதிய இரத்தக்குழாய்கள் உருவாகிறது. உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.

பக்கவாதம் வருவதைக் குறைகிறது.

கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

மாரடைப்பைத் தடுக்கிறது.

உடல் எடை குறைகிறது.

நடைப்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு எண்டார்பின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மனஅழுத்தம் குறைய காரணமாக அமைகிறது. இதனால் மனஅழுத்தத்தினால் ஏற்படும் சர்க்கரை நோய் வராமல் குறைகிறது.

சுவாசம் எளிதாகிறது. இதனால் சுவாச நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

செரிமான மண்டலம் நன்கு வேலை செய்கிறது.

மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது.

நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

உறக்கத்தைத் தூண்டி நன்கு உறக்கம் வர உதவுகிறது.

நடைபயிற்சி மேற்கொள்ளும் முறைகள்

நன்கு காற்றோட்டமான திறந்தவெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மெல்லிய பருத்தியிலான காலுறைகளை அணிவது.

நடைப்பயிற்சியின்போது தளர்ந்த உடைகளை அணிய வேண்டும்.

குறைந்தது 40 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்கள் 3லிருந்து 5 கி.மீ வரை நடைப்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் நடைபயிற்சியினை மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் 5 நாட்களாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அதிவேகமாகவும், மிகமெதுவாகவும் நடைபயிற்சியினை மேற்கொள்ளமால் மிதமான வேகத்தில் கைகளை முன்னும் பின்னும் வீசி நடைபயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் நடைபயிற்சி முடிந்த பிறகு கால்கள், பாதங்களை நன்கு கவனித்து புண்கள், கொப்புளங்களைக் கண்காணிக்க வேண்டும்.

இரவில் படுக்கைக்கு போகுமுன் பாதங்களை சோப்பினால் நன்கு கழுவது நல்லது.

நடைப்பயிற்சியின் போது கால்களுக்கு மிதமான அழுத்தம் தரும் காலணிகளை அணிய வேண்டும்.

நடைபயிற்சியின் போது கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று பின்னர் நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நடைப்பயிற்சியின்போது மூச்சுவிட சிரமம் அல்லது மூச்சுத்திணறல்.

தலைசுற்றல் அல்லது மயக்கம்.

நெஞ்சு எரிச்சல் அல்லது நெஞ்சு அடைப்பதைப் போன்ற உணர்வு.

தாடை மற்றும் தோள்பட்டைகளில் வலி.

இதயப்படபடப்பு.

அதிக தாகம்.

வியர்வை அதிகரித்தல்.

ஏரோபிக் பயிற்சிகள்

எளியவகை ஏரோபிக் பயிற்சிகளான நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவது.

இப்பயிற்சிகள் மூலம் ஆக்ஸிஜன் உடல் முழுவதும் ஏற்கப்பட்டு இரத்தத்தில் உள்ள குளுகோஸ் மற்றும் தசைகளில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தொடர் மருத்துவ சிகிச்சையும், சர்க்கரை அளவு குறைய முயற்சிகளும், இயன்முறை மருத்துவர் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சைகள் மற்றும் உடலியக்கப் பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மேற்கூறியவாறு செய்தால் சர்க்கரை நோயாளிகள் நரம்பு பாதிப்பிலிருந்து விடுபட்டு நலமுடன் ஆரோக்கியமாக வாழலாம்.

க.கார்த்திகேயன்

 

க.கார்த்திகேயன் அவர்கள்

க.கார்த்திகேயன்

தமிழ்நாடு இயன்முறை மருத்துவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர்.

ஆர். கே. இயன்முறை மருத்துவமனை மற்றும் புனர்வாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இளையோர் இயன்மருத்துவப் பட்டம் (Bachelor of Physiotherapy), முதுநிலை உளவியல் ஆற்றுப்படுத்துதல் பட்டம்(M.S.,(Psychotherapy) படித்தவர்.

விளையாட்டு மருத்துவம் (Sports Medicine & Rehabilitation) ), மூட்டுவலிக்கான சிறப்பு சிகிச்சை (Ligament Injuries & Rehabilitation) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் படித்தவர்.

முகவரி :
க.கார்த்திகேயன்
46 ,மேலத்தெரு
வீரான நல்லூர்
காட்டுமன்னார் கோயில் -608301
கைபேசி: 9894322065

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.