வார்த்தைகள் சில பொழுதுகளில்
விலை போய்விடுகின்றன வக்கற்று.
சில தடிமன் ஆகவும்
சில நோஞ்சான் ஆகவும்
அவதியாய் பிரயோசனப்படுகின்றன.
அவை ஒவ்வொன்றும் உள்ளொன்றும் புறமொன்றும்
வைத்துப்பேசுகின்றன..
வார்த்தை ரோசம்அற்றது அல்ல.
சடமும் அல்ல .
அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரிஆனது…
இழிந்ததும் கெட்டதும் என்று உண்டு
இழிசாதி என்பதை போல.
மங்கலம் ஆகி மணி மகுடம் தரிப்பதும் உண்டு
உயர்சாதி என்பதை போல.
“கோபத்தில் வந்த வார்த்தை அது. அதைச் சும்மா சும்மா சொல்லி மாரடிக்காதே”
வார்த்தை சாகடிக்கவும் செய்யும் கற்புக்கரசி கதை…
“இவர்களை மன்னியும் ஆண்டவரே”
வார்த்தை அருள் தரவும் செய்யும்
மேய்ப்பரின் கதை…
இவைகளோடு பயணிக்கத் தொடங்கி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிறகிழந்த ஈசலாய்
செத்துப்போன – என்
வாழ்விழந்த வார்த்தைகள்…
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
வார்த்தைகள் சிலருக்கு வரம், சிலருக்கு தவம், சிலருக்கு அதுவே வாய்க்கரிசி.
அருமை
வார்த்தைகளுக்குப் பின்னணி இவ்வாரெல்லாம் உண்டா என்ன?
ஆழமான பொருளை இனம் காட்டியது கவிதை.