நரியை பரியாக்கிய படலம் இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காட்டில் உள்ள நரிகளை பரிகளாக (குதிரைகளாக) மாற்றி அழைத்து வந்ததைக் குறிப்பிடுகிறது.
மாணிக்கவாசகரின் இறை நம்பிக்கை, வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனார் நரிகளை பரிகளாக மாற்றி அழைத்து வருதல், அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகருக்கு பரிசளித்தல் ஆகியவற்றை இப்படலம் விளக்கிக் கூறுகிறது.
நரியை பரியாக்கிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து ஒன்பதாவது படலமாக அமைந்துள்ளது.
நரிகளை பரிகளாக்கி அழைத்து வருதல்
இறைவனார் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை எண்ணி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார்.
நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் பொய் உரைப்பதாகக் கருதி அவரை தண்டித்து அரசாங்கப் பணத்தை அவரிடம் இருந்து பெறுமாறு தண்டல்காரர்களுக்கு உத்தரவிட்டான்.
அரசனின் ஆணையை ஏற்று தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் வீட்டிற்கு அவரை அழைப்பதற்காகச் சென்றனர். அவர் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். தண்டல்காரர்கள் அரச ஆணையை அவரிடம் தெரிவித்தனர்.
அதற்கு அவர் ‘எல்லாம் இறைவனின் விருப்பப்படி நடக்கும்’ என்று எண்ணி அவர்களுடன் சென்றார். தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரிடம் அரசாங்கப் பணத்தை திரும்ப அளிக்கும்படி வலியுறுத்தி அவரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். அவருக்கு அது பஞ்சுப் பொதி போல் தோன்றியது.
மறுநாள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கினர். அதனையும் பொறுத்துக் கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம் “தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்கமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள்” என மனமுருகி வழிபட்டார்.
இந்நிலையில் ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ திருவுள்ளம் கொண்டார்.
இறைவனார் திருநந்தி தேவரிடம் “மாணிக்கவாசகன் குதிரைகளை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டியனின் சிறையில் அவதிப்படுகிறான். அவனுடைய துன்பத்தை போக்குவதற்காக நீயும் நம் பூதகணங்களும் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி குதிரை வீரர்களாக மதுரையை நோக்கிச் செல்லுங்கள். மதுரைக்கு அருகில் செல்லும்போது யாம் குதிரை வீரனாக வந்து உங்களுடன் கலந்து கொள்வோம்” என்று கூறினார்.
இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர்.
பாண்டியனிடம் குதிரைகளை ஒப்படைத்தல்
குதிரைகள் மதுரையை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவிக்கச் செய்தான். அவருக்கு பரிசுகள் பல வழங்கினான்.
குதிரைகளின் அணி வகுப்பினைக் காண மணிமண்டபத்திற்கு வந்தான். மக்கள் எல்லோரும் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.
பாண்டியனின் கண்களுக்கு மட்டும் குதிரைகள் புலப்படவில்லை. மாணிக்கவாசகர்தான் ஏதோ தந்திரம் செய்கிறார். ஆதலால்தான் தன் கண்களுக்கு குதிரைகள் புலப்படவில்லை என்று பாண்டியன் கருதி மாணிவாசகரை மீண்டும் சிறையில் அடைத்தான்.
சற்று நேரத்தில் குதிரைக் கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரைவீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் விபரத்தைச் சொல்லினர்.
அங்கு வந்த பாண்டியன் குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அருகில் இருந்த குதிரை வீரனிடம் “உங்கள் குதிரைப் படைக்கு தலைவன் யார்?” என்று கேட்டான்.
அப்போது வேதமாகிய குதிரையில் அமர்ந்திருந்த இறைவனாரை சுட்டிக் காட்டி “இவர்தாம் எம் தலைவர்” என்று கூறினான். இறைவனாரைக் கண்டதும் பாண்டியன் அவனையும் அறியாமல் வணங்கினான்.
அப்போது இறைவனார் குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்து விட்டு “குதிரைகளை ஒப்படைத்ததாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கம்” என்று கூறினார்.
இறைவனாரின் கூற்றினை ஆமோதித்த அரிமர்த்தன பாண்டியன் இறைவனாருக்கு வெண்துண்டினைப் பரிசளித்தான். இறைவனாரும் தலையில் அதனைக் கட்டிக் கொண்டு அங்கிருந்து தம் பூதகணங்களோடு புறப்பட்டார்.
பின்னர் மாணிக்கவாசகருக்கு பரிசுகளை அரிமர்த்தன பாண்டியன் வழங்கி அவரை அவருடைய இல்லத்திற்கு வழி அனுப்பி வைத்தான். மாணிக்கவாசகரும் பாண்டியனின் பரிசுகளை தம் சுற்றத்தாருக்கு பகிர்ந்தளித்தார்.
நரியை பரியாக்கிய படலம் கூறும் கருத்து
கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.
முந்தைய படலம் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்
அடுத்த படலம் பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்
Comments
“நரியை பரியாக்கிய படலம்” மீது ஒரு மறுமொழி
[…] முந்தைய படலம் நரியை பரியாக்கிய படலம் […]