நர்மதா ஒரு நீரோடை – கதை

மாலை மணி நாலே முக்கால்.

துருப்பிடித்த குழாய்களோடு நைந்துபோன பவானி ஜமுக்காளத்தாலான சிகப்பும் வெள்ளையுமாய் கோடுபோட்ட துணி மாட்டப்பட்டிருந்த ஹைதர்காலத்து ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி செகண்ஹேண்டில் பெரும் பிரயத்தனத்தில் வாங்கிய சின்ன சைஸ் டிவியில் நியூஸ்சேனலில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.

“ஏன்னா..நியூஸே பாத்துண்ருக்கேள்.. சங்கரா டிவி மாத்தமாட்டேளா..”

“மணி நாலே முக்கால் தானே ஆறுது நர்மதா.. அஞ்சு மணிக்குதானே லலிதா சகஸ்ரநாமம் சங்கரா டிவில..”

“இல்ல..இல்ல..நாலு அம்பதாறுக்கே ஆரம்பிச்சுடறுது..மணி நாலு அம்பத்தஞ்சு ஆயிடுத்து பாருங்கோ..”

நியூஸ் சேனலிலிருந்து சங்கராவுக்கு மாற்றினார் சேதுராமன்.

“ஓம் ஸ்ரீமாதா ஸ்ரீமாஹாராஜ்ஞீ ஸ்ரீமத் சிம்ஹாசனேச்வரீ.. சிதக்னிகுண்ட ஸம்பூதா தேவகார்ய ஸமுத்யதா..”

லலிதா சகஸ்ர நாமம் ஆரம்பமாகியிருந்தது.

“பாத்தேளா, ஆரம்பிச்சுடுத்து. நாந்தா சொன்னேனே சீக்கிரமே ஆரம்பிச்சுடும்னு” என்றவாறே தரையிலமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டார் நர்மதா மாமி.

இனி இரவு ஒன்பது வரை டிவிக்கு ஓய்வு கிடையாது. அஞ்சுலேந்து அஞ்சரை லலிதா சகஸ்ர நாமம். அஞ்சரை டு ஆறு விஷ்ணு சகஸ்ரநாமம். ஆறிலிருந்து அடுத்த பத்து நிமிஷம் ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்.

டாக்டர்.ஸ்ரீ.உ.வே.வெங்கடேஷ் சொல்லும் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் தினம் ஒரு திருநாமத்துக்கான கதை. அதிஅற்புத நிகழ்ச்சி.

அதைத் தொடர்ந்து கேட்கக் கேட்கத் தெவிட்டாத உபன்யாஸங்கள், பஜனைப் பாடல்கள், எட்டரை டு ஒன்பது பொதிகையில் சங்கடம் நீக்கிடும் ஜெயஹனுமான் சீரியல் என ஒன்பது மணி வரை ஓடிக் கொண்டே இருக்கும் டி.வி.

மணி ஆறு. லலிதா மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் முடிந்து அடுத்த நிகழ்ச்சி தொடங்கவிருந்த நிலையில் போய் வெளக்கேத்தறேன் என்றபடி கைகளைத் தரையில் ஊன்றி “நாராயணா, கோவிந்தா” என்றபடி மெல்ல எழுந்தார் மாமி.

மெல்ல எழுந்து நின்ற மாமியின் பார்வை மீண்டும் டிவிக்குச் சென்றபோது அந்த விளம்பரம் ஒளிபரப்பானது. சட்டென நின்று ஆர்வத்தோடு அந்த விளம்பரத்தைப் பார்த்தார் மாமி.

ஆன்மிக அன்பர்களை வரும் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு பனிரெண்டு நாள் காசி மற்றும் இன்னபிற ஆன்மிகத் தலங்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறது தென்னிந்திய ரெயில்வே என்று ஒளிபரப்பான விளம்பரம் மாமியை அப்படியே நகரவொட்டாமல் செய்தது.

மாமியின் கண்களில் ஆசையும் ஆர்வமும் மின்னின. ஆடி அமாவாசை, தை அமாவாசை, தீபாவளி அமாவாசை, மகாளய அமாவாசை என்று காசிக்குக் கூட்டிச் செல்வதாய் அவ்வப்போது தனியாரும் இந்திய ரெயில்வேயும் விளம்பரம் செய்யும் போதெல்லாம் அதைப் பார்க்கும் மாமியின் கண்கள் இப்படித்தான் மின்னும்.

ஒருவருக்கான கட்டணம் எவ்வளவு என்பதைப் பார்த்தவுடன் கண்களில் தெரிந்த ஆசைையும் ஆர்வமும் சட்டென மறைந்து முகம் ஏமாற்றத்தால் இருண்டு போகும்.

இப்போதும் ஆடி அமாவாசையன்று கங்கையில் புனித நீராட காசிக்கும் மற்றும் சில புண்ணிய ஸ்தலங்களுக்கும் ஆன்மிக அன்பர்களை பனிரெண்டு நாள் பயணமாக அழைத்துச் செல்வதாய் அறிவிக்கும் தெற்கு ரெயில்வேயின் விளம்பரத்தைப் பார்த்த மாமியின் கண்களில் ஆசையும் ஆர்வமும் மின்னின.

விளம்பரத்தில் இடம் பெற்றிருந்த கட்டண அறிவிப்பில் கண்கள் பதிந்தவுடன் வழக்கம்போல் கண்களில் தெரிந்த ஆசையும் ஆர்வமும் சட்டென மறைந்து முகம் ஏமாற்றத்தால் இருண்டு போனது.

விளம்பரத்தைப் பார்த்தபடி ஏக்கதோடு நிற்கும் மனைவியை ஏறிட்டுப் பார்த்தார் சேதுராமன். மனம் வலித்தது.

‘பாவம் நர்மதா! என்னை மணந்து என்ன சுகத்தைக் கண்டாள். என்னோடு சேர்த்து வறுமையையும் மணந்து கொண்டதைத் தவிர அவளுக்கு வாழ்க்கையில் என்ன கிடைத்தது. இந்த தரித்திரம் பிடித்தவனை மணந்து மனைவி என்ற அந்தஸ்த்தைப் பெற்றாளே தவிர ‘தாய்’ என்ற அஸ்தஸ்துகூட அவளுக்குக் கிடைக்கவில்லையே.’

இதோ எனக்கு வயசு எழுபத்ரெண்டு. நர்மதாக்கு அறுபத்தெட்டு. நாப்பத்துநாலு வருஷ தாம்பத்திய வாழ்க்கையில அவுளுக்குன்னு நான் என்ன செஞ்சிருக்கேன்.

குந்துமணி தங்கமோ, ஏன் ஒரு பட்டுப் பொடவயோ, எதாவது வாங்கிக் குடுத்துருப்பேனா, சேந்தாப்ல மாசம் செலவுக்குன்னு ஒரு அய்யாயிரம் ரூவா ம்கூம் குடுத்ததே இல்லியே.

யாராத்துலயாவது நல்ல காரியமோ, சிராத்தமோ, சாவோ எதாவது நடந்தா சீனு சாஸ்திரிகள் நம்ம மேல பாவப்பட்டு பிராமணாளா அனுப்பினா அன்னிக்கி விசேஷம் நடக்கிறவாளாத்துல சாப்பாடும்.. மிஞ்சி மிஞ்சிப் போனா ஐநூறு ரூவா தட்சணையும் கெடைக்கும்.

நா என்ன முறையா சாஸ்திரம், மந்த்ரம், வேதம் படிச்சவனா, வைதீகத்துல சம்பாதிச்சு காசுமழைல நனைய. தெவசப் பிராம்மணந்தானே, மாசம் முப்பது நாளுமா சாப்பாடும் தட்சணையும் கெடைக்கறது.

மாசத்துக்கு மூணு தடவையோ நாலு தடவையோ. அதுக்கு மேல கூப்டறது இல்ல. மிஞ்சிப் போனா மாசம் மூவாயிரத்துக்கு மேல வருமானமில்ல.

நர்மதாவுந்தா பாவம்.. ஒரு சுகர் பேஷண்ட். ஆனாலும் முடியறதோ முடியலயோ யாராத்துலயாவது விசேஷம்னா ஒத்தாசைக்குக் கூப்ட்டா பணம் கெடைக்குமேன்னு போய் ஒத்தாச செஞ்சுட்டு வரா.

அதுவும் எப்பவாவதுதான். நிரந்தர வருமானம்ன்னு ஒன்னுமில்ல பொதுவா பெரும்பாலான பொம்மனாட்டிக்கு பணம், நகை, பட்டுப் பொடவன்னு ஆசை இருக்கும்தானே.! அதுல தப்பொன்னுமில்ல. நர்மதாவுக்கும் அதுமாதிரி ஆச இருத்திருக்கும்தானே?

ஆனா ஒருமொறகூட அத வெளிக் காட்டினதே இல்லயே. இப்பதான் வயசாயிடுத்து. என்ன கல்யாணம் பண்ணின்ட அந்த சின்ன வயசுலகூட ஆசப்பட்டத வாங்க பணமில்லியே. போட்டுப்பாக்க நகை, நட்டு இல்லியே. கட்டிப்பாக்க விதவிதமா பொடவ இல்லியேன்னு ஒரு தடவகூட வருத்தமா பேசினதில்லயே..

எதுவும் வாங்கித்தர வக்கில்லாதவன்னோ, வழியில்லாதவன்னோ சம்பாதிக்கத் தெரியாதவன்னனோ கையாலாகாதவன்னோ நெனச்சு என்ன அலட்சியப்படுத்தியோ, மரியாதக் குறைவா பேசினதோ, வார்த்தையால காயப்படுத்தினதோ இல்லியே!

தாலிகட்டிண்ட அந்த நாள்ளேந்து இன்னிவரைக்கும் நர்மதா என்கிட்ட காமிக்கிற அன்பும், பரிவும், பாசமும், மென்மையான வார்த்தைகளும்!

‘நர்மு.. நீ ஆரவாரமில்லாத தெள்ளிய தெளிந்த சலசலத்து ஓடும் நீரோடை நர்மு’ என்று கண்கள் பனிக்க நான் சொல்லும் போதெல்லாம் எவ்வளவு மென்மையாகச் சிரிப்பாள்.

எட்டு வருடம் முன்பு நர்மதா அறுபது வயதைத் தொட்ட அன்று நானும் அவளுமாய் கோயிலுக்குச் சென்று கும்பேஸ்வரன் சன்னிதியில் நின்றபோது நர்மதா கண்கள்மூடி கைகளைக் கூப்பி நெஞ்சுருகியவள் போல் நின்றிருந்தாள்.

பிராகாரம் சுற்றும்போது, “நர்மு நீ சாமி முன்னாடி கண்ண மூடிண்டு ரொம்ப நாழி நின்னியே அப்படி என்னதா வேண்டீண்ட” என்று நான் கேட்டபோது, எப்போதும்போல் மென்மையாக சிரித்தாள் நர்மதா. அறுபது வயதிலும் நர்மதாவின் சிரிப்பு அழகுதான்.

“சொல்லட்டுமா?”

“ம்..சொல்லு நர்மூ..”

“எனக்கு கொஞ்ச நாளாவே காசிக்குப் போகணும். கங்கேல ஸ்னானம் பண்ணனும். கயா ச்ராத்தம் பண்ணி நம்ம மூதாதயருக்கு பிண்டம் குடுக்கனும். பிள்ளைப் பேறு இல்லாத நாம ஆத்ம பிண்டம் போட்டுக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதான் காசிக்குப் போணுங்கற ஆசைய நிறைவேத்திக்குடுன்னு ஆண்டவன்ட்ட வேண்டிண்டேன்.”

நர்மதாவோட இந்த ஆச நியாயமானது தானே.

“இந்து மதத்துல பொறந்த கடவுள் நம்பிக்கயுள்ள ஒவ்வொருத்தரும் தன் வாழ்நாள்ல ஒருதடவயாவது காசிக்குப் போகனும் கங்கேல ஸ்னானம் பண்ணி பித்ரு தர்ப்பணம் பண்ணி பிண்டம் கொடுக்கணும். ஆத்ம பிண்டம் போட்டுக்கணும்னு ஆசப்படுவாதானே. எனக்கும் இந்த ஆசை உண்டு தானே. வெறுங்கை முழம் போடுமா? காசில்லாதவன் காசிக்குப் போக ஆசப்பட்டா முடியுமான்னு நா ஆசைய அடக்கிண்டு இருக்கேன்.”

ஆனா இதுவர தன்னோட ஆசைன்னு எதையுமே சொல்லாத என் நர்மு காசிக்குப் போகனும்னு ஆசையாயிருக்குன்னு சொன்னப்ப தடுமாறிப் போனேன்.

‘ஆண்டவனே! என் நர்மதாவோட இந்த ஆசையையாவது நான் நிறைவேத்தி வைக்க நீதான் கருணை காட்டனும்னு’ வேண்டிக்கறத் தவிற வேற எதையும்
என்னால செய்யமுடீல.

“அதுக்கென்ன நர்மு, ஆண்டவன் நெனச்சான்னா நாளைக்கேகூட நாம காசிக்கு கெளம்பலாம். நிச்சயம் ஒன் ஆச நிறைவேறும் நர்மூ.” என் குரலில் ஆற்றாமையும் தழுதழுப்பும் தெரிந்ததோ என்னவோ, மென்மையான சிரிப்புடன் என் கைகளைப் பற்றி “எதையாவது நெனச்சு வருத்தப்பட்டு கவலப்பட ஆரம்பிச்சிடாதிங்கோ. நடக்கனும்னு இருந்தா எல்லாம் தானா நடக்கும் சரியா?” என்றாள் புன்னகை மாறாமல்.

காசிக்குச் சென்று வந்த தெரிந்தவர்கள் சிலரிடம் விசாரித்தபோது அந்த காலகட்டத்தில் ‘ரெண்டு பேருக்கு குறைந்தபட்சம் முப்பதாயிரமாவது வேணும்’ என்றபோது இடிந்தே போனேன்.

எனக்கு முப்பதாயிரம் சேர்க்கவும் துப்பில்லாததாலோ அல்லது ஆண்டவன் மனது வைக்காததாலோ அறுபது வயதில் காசிக்குப் போக வேண்டுமென்ற ஆசையைச் சொன்ன நர்முவின் ஆசை, அவளின் அறுபத்தெட்டு வயதுவரை இன்னும் இன்றுவரை நிறைவேறவே இல்லை.

எட்டு வருஷம் முன்னாடி முப்பதாயிரமென்பது இப்போது இரண்டு பேருக்கு நாற்பதாயிரத்துக்கு மேல் செலவாகும் என்ற நிலைக்கு மாறியிருந்தது.

இப்போது என் ஐநூறு தட்சணை எழுநூற்றைம்பதாய் மாறியிருந்தது. அதற்கேற்ப விலைவாசியும் தாறுமாறாய் ஏறிப்போக வாழ்க்கையில் பொருளாதாரம் எப்போதும் போல் அடிமட்டத்தில்தான்.

இதோ..சங்கரா டிவியில் ரெயில்வேயின் காசி ஆன்மிகச் சுற்றுலா விளம்பரத்தை ஏக்கமும் ஆசையுமாய்ப் பார்க்கும் நர்மதாவை குற்ற உணர்ச்சியோடும் மனதின் வலியோடும் பார்ப்பதைத் தவிற என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

‘நீயெல்லாம் ஒரு ஆம்பள?’ மனது இடித்துக் கேலி செய்தது.

சாமி விளக்கேற்றி கைகூப்பிக் கண்மூடி நின்றார் நர்மதா மாமி. இப்போது என்ன வேண்டிக்கொண்டாரோ, அவருக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே தெரியும்.

மறுநாள் பிராமணார்த்தம் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய சேதுராமன் வெறுமனே சாத்தியிருந்த வாசல் கதவைத் திறந்து கொண்டு மஞ்சப்பை சகிதமாய் “நர்மூ” என்று அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.

கணவர் உள்ளே வந்ததைக்கூட கவனிக்காத நர்மதா மாமி கிச்சனில் வெகு மும்முரமாய் ஏதோ வேலையில் ஆழ்ந்திருந்தார்.

“நர்மதா.. நர்மு…. இப்பிடிதான் கதவ தாப்பாகூட போடாம அசிரத்தையா இருப்பியா? ஒலகங் கெட்டுக் கெடக்கறதுன்னு வாய்க்குவாய் சொல்லுவ. எவனாவது உள்ள நொழஞ்சான்னா?”

ம்கூம்..மாமி திரும்பிக்கூட பார்க்கவில்லை.

“நர்மதா..” சத்தமாய்க் கூப்பிட்டார் சேதுராமன்.

சமையல் மேடையில் வைத்து ஏதோ ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் மூடியை திருகித் திருகி மூடிக் கொண்டிருந்த மாமி சட்டெனத் திரும்பிப் பார்த்தார்.

“அட வந்துட்டேளா, கதவு தொறந்தா இருந்தது?” எனக் கேட்டுக் கொண்டே கையிலிருந்த டப்பாவை இனிமேல் நசுங்குவதற்கு இடமேயில்லை எனும் அளவுக்கு நசுங்கிப் போயிருந்த அலுமினியம் குண்டானுக்குள் வைத்து குனிந்து மேடையின் கீழே இருந்த திறப்பில் மூலையில் வைத்து அரிசி வைத்திருந்த ப்ளாஸ்டிக் பக்கெட்டை குண்டானுக்கு முன்பு இழுத்து வைத்து குண்டானை மறைத்து விட்டு நிமிர்ந்தபோது குனிந்து நிமிர்ந்ததால் இடுப்பு ‘பளிச்’சென ஒருவெட்டு வெட்டி வலித்தது.

“ஆ..அய்யோ..அம்மா” என்றபடி இடுப்பைப் பிடித்துக் கொண்டே கிச்சனிலிருந்து வெளியே வந்த மாமியைப் பார்க்க சேதுராமனுக்குப் பாவமாயும் இருந்தது. சிரிப்பும் வந்தது.

“நர்மு அப்பிடி என்னதான் வெச்சுருக்க அந்த டப்பால! அடிக்கடி அடிக்கடி எடுத்தெடுத்தெடுத்துப் பார்த்து மூடி, மூடி வெக்கிற.”

“அது பல வருஷத்து சீக்ரெட்” சொல்லி விட்டுச் சிரித்தார் மாமி.

“என்ன சீக்ரெட்டா? என்ன சீக்ரெட் அது எங்கிட்டகூட சொல்ல மாட்டியா?

“ம்.. ஒங்ககிட்ட சொல்லிட்டா அப்றம் அதுக்குபேரு சீக்ரெட்டா” சிரித்தார் மாமி. சேதுராமனும் கூடவே சிரித்தார்.

“சரி, இருங்கோ தோ வரேன்” மீண்டும் சமையல் மேடையின் கீழே குனிந்து அரிசி பக்கெட்டை நகர்த்தி குண்டானிலிருந்ந ப்ளாஸ்டிக் டப்பாவை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார் மாமி.

‘பரக் பரக்’கென்று மூடியைத் திறந்து ஈஸிசேரில் தலைகுப்புறக் கவிழ்க்க, ஐம்பதும் நூறுமாய் பணம் ‘திபுதிபு’வென கொத்துக் கொத்தாய் விழுந்தது.

அதிர்ந்து போனார் சேதுராமன்.

“என்ன நர்மு இது? ஏது இவ்வளவு பணம்?”

“எட்டு வருஷமா சேக்ரேன்னா”

“என்னது, எட்டு வருஷமா சேக்றியா! வீட்டு வாடக ஆயிரத்தை நூறு, மளிக, மருந்து மாத்ர, நாளு கெழம நாஞ் சம்பாதிக்கிற பிசாத்து காசுல ஒன்னால எப்பிடி மிச்சம் புடிச்சு இத்தன பணம்லாம் சேக்க முடிஞ்சிது நர்மு ஆச்சரியம்” தாங்க முடியாமல் சேதுராமன் கேட்டபோது

“எத்தன இருக்குன்னு கேக்கிலியே. இருவத்தி நாலாயிரம் இருக்குன்னா. டிவில ரெயில்வேல காசி, ராமேஸ்வரம்னு அழச்சுண்டு போறதா விளம்பரம் வருதே; அதுக்கு நாம ரெண்டு பேருக்கு இது போதாது.

ஒத்தருக்கே கட்டணம் இருவதாயிரமாம். அப்ப ரெண்டு பேருக்கு நாப்பதாயிரம் ஆகும். கைச்செலவுக்குன்னு ரெண்டாயிரமாவது வேணும். கொறஞ்சது இன்னும் இருவதாயிரமாவது வேணும்.

இருவத்தஞ்சாயிரம் சேக்கவே ஒம்பாடு எம்பாடுன்னு எட்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. மேக்கொண்டு இருவாதாயிரம் சேக்க இன்னோரு எட்டு வருஷம்னா ஆகும்.

நாம காசிக்குப் போறத்துக்குள்ள கைலாசத்துக்குப் போயிடுவோம் போல.

கங்கேல ஸ்னானம் பண்ணி விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, அன்னபூரணிய தரிசித்து, கயால முன்னோர்களுக்கு பித்ரு தர்பணம் பண்ணி பிண்டம் குடுத்து ஆத்ம பிண்டம் போட எத்தன கொடுப்பின வேணும்? அந்த பாக்யம் எல்லார்க்கும் கெடச்சிடுமா என்ன?” சொல்லிவிட்டு இயல்பாய் வேடிக்கையாய் சொல்வது போல் சொல்லிச் சிரித்தார் மாமி.

சிரிப்பில் தன் ஏமாற்றத்தையும் வேதனைையையும் வெகுசிரமப்பட்டு மறைத்துக் கொண்டார்

தன்பேச்சு தன் கணவரின் மனதை வேதனைப்பட வைத்துவிடக் கூடாது. தன் ஏமாற்றத்தை கணவர் புரிந்து கொண்டு விடக்கூடாது. அதனால் அவர் மனத்தவிப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்று தன் மனைவி இயல்பாய் சிரித்துப் பேசுவது சேதுராமனுக்கு நன்றாகவே புரிந்தது.

“நர்மூ…” குரல் தழதழத்தது.

அவரது மனதின் வேதனை முகத்தில் அப்பட்டமாய்த் தெரிய புரிந்து போனது மாமிக்கு.

“என்னாச்சுன்னா ஏ என்னவோ போல ஆகிட்டேள். விடுங்கோ, போனாப் போறுது. இப்ப போகாட்டா என்ன? எல்லாம் பகவான் சங்கல்பம். அவ எப்ப நெனைக்கிறானோ அப்ப நம்மள காசிக்குக் கூட்டிண்டு போவான். இல்லேன்னா இல்ல. நீங்க மனசப் போட்டு அலட்டிக்காதிங்கோ.” மாமி கணவரை சமாதானம் செய்து கொண்டிருந்தபோது வாசல் கதவு தட்டப்படும் சப்தமும்” மாமி..மாமி…” என்ற குரலும் கேட்டது.

“யாரது?

கீரக்காரி பூங்காவனம் கொரலாட்டம் இருக்கு. ஆறு மாசத்துக்கு மேல இருக்குமே பாத்து. பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கேம்மான்னு சொல்லிட்டுப் போனவ. அப்பரம் வரவேல்ல” தனக்குத் தானே சொல்லிக் கொண்டே போய்க் கதவைத் திறந்த மாமி பூங்காவனத்தின் கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனார்.

பாழ் நெற்றி மூளிக்கழுத்து தேய்ந்து உருக்குலைந்து போன தேகம், பரட்டைத் தலை சோகம் அப்பிய முகம்.

“பூங்காவனம் என்னாச்சு ஒனக்கு?”

கேட்டதுதான் தாமதம் அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் பூங்காவனம்.

“மாமி..மாமி..போய்ட்டாரு மாமி..போய்ட்டாரு. பொண்ணுக்கு நிச்சியம் பண்ணி வெச்ச கல்யாணத்த முடிக்காமகூட பதினஞ்சு நாளு வெஷ சொரத்துல போய்ச் சேந்துட்டாரு மாமி.

எம்புருஷன் போகாத ஆஸ்பத்திரி இல்ல; பண்ணாத வைத்தியமில்ல. கஷ்டப்பட்டு சம்பாரிச்சு பொண்ணு கல்யாணத்துக்குன்னு சேத்து வெச்ச காசயெல்லாம் வைத்தியத்துக்குன்னு எழந்துட்டு புருஷனையும் எழந்து பொண்ணு கல்யாணமும் நடக்காம..” அழுது கதறினாள் பூங்காவனம்.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருட பூங்காவனத்துடனான பழக்கம். பூங்காவனத்தின் நிலைமை மாமியை நிலைகுலைய வைத்தது.

அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தார் மாமி.

“பூங்காவனம் எல்லாம் ஆண்டவன் செயல். வேற என்னத்த சொல்லுவேன். பொண்ணு கல்யாணம் என்னாச்சு?”

“மாமி பொண்ணு கல்யாணத்துக்காக வெச்சிருந்த பணம் மட்டுமில்ல; அரைப் பவுனுக்கு செஞ்சு வெச்சிருந்த திருமங்கல்யத்தகூட வித்துதான் வைத்தியம் பண்ணேன். பொழக்கிலியே, அவரு பொழக்கிலியே, கட்டத் தாலிகூட
இல்லாம கல்யாணம் எப்பிடி நடக்கும்” அழுதாள் பூங்காவனம்.

“புள்ள வீட்டுக்காரங்க கல்யாணத்த நிறுத்திட்டாங்களா”

“இல்லம்மா அவுங்க ரொம்ப நல்லவுங்கதான். மூணுமாசம் டயம் தர்றோம். அதுக்குள்ள தாலியும் மாலையுமாச்சும் வாங்கிட்டு வாங்க. எங்க புள்ள தாலி கட்டுவான். அதுக்குமேல ஒருநாள்கூட காத்திருக்கமாட்டோம்.வேற பொண்ணு பாத்துதுடுவோம்னு கறாரா சொல்லிட்டாங்க.

அவங்க குடுத்த டயம் முடிய இன்னும் பத்து நாளுதாம்மா இருக்கு. அரப்பவுனு தாலி வாங்க இருவதாயிரத்துக்கு மேல ஆவும். அம்மாம் பணத்த இனிமே நா எப்ப சம்பாரிக்கிறது. என்னநம்பி யாரும்மா கடன் குடுப்பாங்க? எம்பொண்ணு வாழ்க்க அவ்வளவுதாம்மா” கேவி அழும் பூங்காவனத்தை பார்த்து மாமியும் அழுது விட்டார்.

சட்டென என்ன தோன்றியதோ, “பூங்காவனம் அழாத, இரு வரேன்” என்று சொல்லிவிட்டு கணவரிடம் சென்று ஏதோ கிசுகிசுத்தார்.

“நர்மு பூங்காவனம் சொன்னதயெல்லாம் கேட்டுண்டுதான் இருந்தேன். மனசு தாங்கல. நீ என்ன நெனைக்கிறயோ அதச் செய்யு நர்மு. நீ என்ன செஞ்சாலும் எனக்கு சம்மதம் தான்.

நீ சொன்னியே இப்ப காசிக்குப் போய் கங்கேல ஸ்னானம் பண்றதவிட ஒரு ஏழைப் பெண்ணோட கழுத்துல தாலி ஏற ஒதவரது எத்தனை எத்தனையோ மடங்கு ஒசந்ததுன்னு. ரொம்ப சரியாச் சொன்ன நர்மு” நா தழுதழுக்க தன் சம்மதத்தைச் சொன்ன கணவர் சேதுராமனை நன்றியோடும் பெருமையோடும் பார்த்தார் நர்மதா மாமி.

ஈசி சேரில் கிடந்த பணம் இருபத்தி நாலாயிரத்தையும் ‘மளமள’வென்று ப்ளாஸ்டிக் டப்பாவில் அள்ளிப்போட்டு மூடிவிட்டு “பூங்காவனம் கொஞ்சம் உள்ள வாயேன்” என்று அழைக்க, ‘இதுவரை உள்ளேயெல்லாம் வந்திராத பூங்காவனம் எதற்கு மாமி உள்ள கூப்புடுறாங்க?’ என்று புரியாமல் தயங்கித் தயங்கி உள்ளே வந்து நின்றாள்.

“இந்தாங்கோ, இத நீங்களும் புடிங்கோ” ரெண்டு பேருமா குடுப்போம் என்றார் மாமி.

சேதுராமனும் பணமிருந்த ப்ளாஸ்டிக் டப்பாவைத் தொட்டு நிற்க, “பூங்காவனம், இதுல இருவத்து நாலாயிரம் பணமிருக்கு. இதுல அரப்பவுனுக்குத் தாலி வாங்கி, பொண்ணு மாப்ளைக்கு மால வாங்கி மாப்ள வீட்டுக்காரங்க கொடுத்த டயமுக்குள்ள பொண்ணோட கல்யாணத்த நடத்து.” பொண்ணு மாப்ளைக்கு எங்களோட வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத பூங்காவனம் அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்றாள்.

“இந்தா பூங்காவனம் இத வாங்கிக்கோ”மாமாவும் மாமியும் சேர்ந்தாற்போல் சொல்ல, “மாமீ..ஐயா..” கதறி விட்டாள் பூங்காவனம்.

காலில் விழுந்த அவளை எழுப்பி சமாதானம் செய்து அனுப்பிவைக்க ஒருமணி நேரமாயிற்று மாமிக்கு.

“ஏன்னா, நா இப்பிடி ஒரு முடிவு எடுத்ததுல ஒங்குளுக்கு ஒன்னும் வருத்தமில்லியே”

“நர்மு, ஏ இப்பிடில்லாம் கேக்கற. ஒன்ன பாத்து நா ரொம்ப பெருமபடறேன் நர்மு. நர்மு நா எப்பவும் சொல்றா மாரி இப்பவுஞ் சொல்றேன்.

என் மனைவி நர்மதா களங்கமோ ஆரவாரமோ இல்லாத ஸ்படிகம் போன்ற நீரோட. அமைதியா ஒடுற நர்மதை நதியின் ஒரு நீரோடை போன்றவள்.

ஆமா நர்மதா நீ ஒரு நீரோடை. மனதில் அன்பும் தூய்மையும் மட்டுமே கொண்டவள்.” வாஞ்சையுடன் தன் மனைவியின் கரங்களைப் பற்றினார் ஏழை சேதுராமன்.

தப்பு தப்பு யார் சொன்னது சேதுராமன் ஏழையென்று?

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இறைவனின் வரமென நல்ல மனைவி அமைந்த ஆண் என்றும் ஏழை இல்லை.

இரண்டு நாள் கழித்து மாலை வழக்கம் போல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது பட்டன் ஃபோன் சிணுங்கியது.

“ஹலோ… யாரு?” கேட்டார் சேதுராமன்.

“சேதுராமன் சார். நாந்தான் சங்கர மடத்துலேந்து கிச்சா பேசறேன். வாழ்த்துக்கள்.”

“ஓ! கிருஷ்ண மூர்த்தி சாரா, நமஸ்காரம்ணா, எதுக்கு வாழ்த்துக்கள். புரியலயே”

“வருஷா வருஷம் மடத்துலேந்து வசதி குறைவான பத்து தம்பதிகள காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் இலவசமா அழைச்சுண்டு போவாளோனோ, நீங்ககூட பதிவு செஞ்சேளே. அந்த லிஸ்ட்ல ஒங்கபேரு குலுக்கல்ல வந்துருக்கு. நீங்களும் ஒங்க மாமியும் ஆடி அமாவாசைக்குக் காசிக்குப் போகப் போறேள். பத்து பைசா ஒங்குளுக்கு செலவு இல்ல. நிம்மதியா காசிக்குப் போய்ட்டு வரலாம். எல்லா செலவும் மடத்தோடது. வாழ்த்துக்கள், வெச்சுடறேன்.”

எதிர்பாராத சந்தோஷம் கொடுத்த திகைப்பில் சில வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றார் சேதுராமன்.

மனைவியிடம் விபரஞ் சொல்ல முடியாமல் சந்தோஷத்தில் தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் அரும்பியது சேதுராமனுக்கு.

“அப்பனே விஸ்வேஸ்வரா.. காசிநாதா.. அம்பிகே விசாலாஷி.. அன்னபூரணித் தாயே…” மனம் உணர்ச்சிப் பெருக்கால் கூவியது.

ஆண்டவனுக்குத் தெரியும் யாருக்கு எதை எப்படி எப்போது தர வேண்டுமென்று.

காஞ்சி. தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சிபுரம்
கைபேசி: 9629313255

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.