பாதாம் பால் பசும்பாலுக்கு மாற்றான நலம் தரும் பாலாகும். இது பாதாம் விதையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.
தாவரத்திலிருந்து தயார் செய்யப்படும் இது, சைவ உணவினை உண்பவர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனுடைய பயன்பாடு பன்நெடுங்காலத்திற்கு முன்பே பழக்கத்தில் இருந்துள்ளது.
இதனை வீட்டிலும் எளிய முறையில் தயார் செய்யலாம். தற்போது பாதாம் பால் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.
பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, லாக்டோஸையோ கொண்டிருப்பதில்லை. எனவே லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
பாதாம் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
பாதாம் பாலானது விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளேவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), இ மற்றும் டி ஆகியவை உள்ளன.
மேலும் இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. இப்பாலில் புரதம், கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன.
பாதாம் பால் – மருத்துவப் பண்புகள்
இதய நலத்தைப் பாதுகாக்க
பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது.
எலும்புகளின் பலத்திற்கு
பாதாம் பாலானது நமது தினசரி கால்சியத் தேவையில் 30 சதவீதத்தையும், விட்டமின் டி தேவையில் 25 சதவீதத்தையும் பூர்த்தி செய்கிறது.
மேற்கூறிய இரண்டும் ஒன்றாகச் செயல்பட்டு எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலிமையைச் சேர்க்கிறது. இதனால் கீல்வாதம், ஆஸ்டியோபோரோஸிஸ் உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்களும் தடை செய்யப்படுகின்றன.
சருமப் பாதுகாப்பிற்கு
பாதாம் பாலானது நமது தினசரி விட்டமின் இ தேவையில் 50 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. பாதாம் பாலில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் இ ஆகியவை சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கின்றது.
இதனைக் கொண்டு சருமத்தை அலசும்போது சருமம் பளபளப்பாகிறது. பளபளப்பான ஆரோக்கியமான பன்னீர் மற்றும் பாதாம் பாலிலைக் கொண்டு சருமத்தை அலச வேண்டும்.
தசைகளின் ஆரோக்கியம் மேம்பட
பாதாம் பாலில் உள்ள விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்) மற்றும் இரும்புச்சத்து ஆகியவை தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அவற்றை வலுவாக்கவும் செய்கின்றன.
சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மேம்பட
கால்சியம் மற்றும் பொட்டாசியம் தனிமங்களின் அளவுகள் உடலில் அதிகரிக்கும்போது அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை உண்டாக்குகின்றன.
பாதாம் பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் பாதாம் பாலினை உண்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
பாதாம் பால் தயார் செய்யும் முறை
பாதாம் விதைகளை முதல் நாள் இரவே நீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனுடைய தோலினை உரித்து எடுத்துவிட வேண்டும்.
பின் அதனை மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அக்கரைசலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் தேன் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து உண்ணலாம்.
பாதாம் பாலினைப் பற்றிய எச்சரிக்கை
பாதாம் பாலினை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது தைராய்டு சுரப்பில் பாதிப்பினை உண்டாக்குகிறது.
இரண்டு வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு இப்பாலினைக் கொடுக்கக் கூடாது.
பாதாம் பாலிலிருந்து பாதாம் வெண்ணெய் தயார் செய்யப்படுகிறது. பாதாம் பாலானது அப்படியேவோ, அல்லது ஏனைய உணவுப் பொருள்களுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. நலம் தரும் பாதாம் பாலை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.
மறுமொழி இடவும்