நலம் வாழ – ஒரு நல்ல கதை

அந்த காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்றான குரங்கு குசேலனுக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆம் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருக்கும்.

அவ்வப்போது அருகிலுள்ள நகரப் பகுதிக்குள்ளும் சென்று விஷமத்தனம் செய்து அங்குள்ள மனிதர்களால் விரட்டியடிக்கப்பட்டு மீண்டும் காட்டிற்குள் வருவதும் இயல்பான அதன் நடவடிக்கைகளாகும்.

அன்று அப்படித்தான் காட்டைவிட்டு நகரப்பகுதிக்குள் நுழைந்தது குசேலன் குரங்கு. ஞாயிறு விடுமுறை நாளான அன்று பள்ளியில் படிக்கும் இளவயது சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடியதைக் கண்டவுடன் அங்கிருந்த புளியமரத்திலேறி அமர்ந்தபடி வேடிக்கை பார்க்கத் துவங்கியது.

சிறுவர்கள் அங்குமிங்குமாக ஓடுவதும் கத்துவதும் என இருந்ததைக் கண்டவுடன் குசேலன் குரங்கிற்கு ஆவல் அதிகமானது.

இரண்டு சிறுவர்கள் எதிர் எதிர் திசையில் நிற்பதும் ஒருவன் ஓடிவந்து பந்தைப் போடுவதும் எதிர் திசையில் இருப்பவர்கள் பறந்து வரும் பந்தினை தனது கையிலுள்ள மட்டையால் அடிக்க அந்த பந்து செல்லும் திசையிலேயே பந்தின் பின்னாலேயே சிலர் ஓட என சிறுவர்களின் கிரிக்கெட் விளையாட்டினைக் கண்டதும் குரங்கு குசேலனுக்கு தானும் அவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாடலாமா? என்ற எண்ணம் தோன்றியது.

சிறுவர்களின் விளையாட்டிலேயே தனது முழு கவனத்தையும் வைத்து கவனித்து வந்த குரங்கு குசேலன் இப்போது மட்டையால் அடிபட்ட பந்து நேராக வானத்தை நோக்கி பறந்ததையும் பறந்த பந்து கீழே விழும் முன்பாக ஒருவன் பந்தை பிடித்தவுடன் அங்கிருந்த மற்ற சிறுவர்கள் “ஓ” வென கத்தியபடி இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டியதையும் ஒருவரை ஒருவர் கைதட்டி கொண்டாடுவதையும் கண்டது.

பந்தை பிடித்தவுடன் சிறுவர்கள் கத்தியபடி அனைவரும் மகிழ்ச்சியாக ஆட்டம் ஆடியதை கண்டவுடன் தாமும் காட்டிற்குள் சென்று இதுபோல தமது நண்பர்களுடன் விளையாட வேண்டும் என்று எண்ணத் தொடங்கியது.

குசேலன் குரங்கு எண்ணத்தை நிறைவேற்றச் செய்யும் விதமாக சிறுவன் அடித்த பந்து பறந்து வந்து குசேலன் குரங்கின் அருகிலிருந்த காக்கை கூட்டினுள் விழுந்தது.

அது சமயம் இரை தேடுவதற்காக சென்றிருந்த காகம் அங்கு இல்லை என்பதால் காக்கை கூட்டினுள் பந்து அமைதியாக ஆடிக்கொண்டிருந்தது.

இதுதான் தக்க சமயம் என்று எண்ணிய குசேலன் குரங்கு விரைந்து சென்று அந்த பந்தை தூக்கிக் கொண்டு தமது காட்டை நோக்கி ஓடத்துவங்கியது.

பந்துடன் செல்லும் குரங்கை சிறிது தூரம் விரட்டியபடி வந்த சிறுவர்கள் கூட்டம் தோல்வியடைந்து திரும்பிவிட்டனர்.

பந்துடன் வேகமாக ஓடிவந்த குசேலன் குரங்கு காட்டின் மையப் பகுதியிலிருந்த மொட்டைப் பாறையின் மேலே வந்து அமர்ந்து மூச்சு வாங்கியது.

சிறிது மூச்சு வாங்கி ஆசுவாசப்படுத்தி கொண்ட பின் தனது நண்பர்களை எல்லாம் அழைத்தது .

“இனிமையான நண்பர்களே!
இங்கே என்னை பாருங்களேன்.
துணிவுடன் இன்று நாட்டுக்குள்
நுழைந்து திரும்பி வந்துள்ளேன்
மணிக்கணக்காய் அங்குள்ள
மனிதர்கள் விளையாடிய பொருளொன்றை
நமக்கென கொண்டு வந்துள்ளேன்
நாமும் விளையாட வேண்டுமென
அணிகள் இரண்டாய் பிரிந்தே நாம்
அன்புடன் விளையாட வாருங்களேன்”
என்ற குரங்கு குசேலனின் குரலைக் கேட்ட இளவயது விலங்குகள் அங்கு ஆவலுடன் கூடின.

அங்கு கூடியிருந்த அனைவரும் குரங்கு குசேலன் தலைமையில் ஒரு பிரிவாகவும் கரடி காங்கேயன் தலைமையில் இன்னொரு பிரிவாகவும் பிரிந்து நின்றனர்.

இரண்டு தென்னை மட்டைகளை எடுத்து வருமாறு குட்டியானை கோடியப்பனை குரங்கு விரட்டியது.

கோடியப்பன் யானை கொண்டு வந்த தென்னை மட்டைகளையும் குரங்கு குசேலன் கொண்டு வந்த பந்தினையும் வைத்து விளையாடத் தொடங்கின.

நேரம் காலம் ஆவது கூட தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் கூக்குரல் காடு முழுவதும் எதிரொலித்தது.

இப்போது கரடியார் பந்தை போட, மட்டைகளைக் கொண்டு வந்த கோடியப்பன் யானை பந்தினை அடித்தது. கோடியப்பன் யானையின் அடி பொறுக்காமல் பந்து இரண்டாக உடைந்தது.

பந்து உடைந்தது கண்டு வருந்திய விலங்குகள் அது யானை கோடியப்பனின் தவறல்ல என புரிந்து கொண்டு அமைதியாக கலைந்து சென்றன.

இப்போது, தான் நகர மக்களிடமிருந்து எடுத்து வந்த பந்து உடைந்ததைக் கண்டு மனம் வருந்திய குசேலன் குரங்கு உடைந்த பந்தினை பெரியவர்களுக்கு தெரியாமல் அப்புறப்படுத்த எண்ணியது.

அதன்படி சற்று தள்ளி இருந்த செம்பருத்தி செடியின் அருகே சென்று ஒரு குழியினை தோண்டி அதனுள் உடைந்த பந்தினை போட முயற்சி செய்தது.

குழி தோண்டும் போது அமைதியாக இருந்த செம்பருத்திச் செடி, உடைந்த பந்தை குழிக்குள் போடும் போது குரங்கு குசேலனை தடுத்தது.

குசேலன் குரங்கண்ணா
குசும்போ உனக்கண்ணா
விஷமான பொருளதனை என்
வேருக்கடியில் புதைக்காதே
தொலைவினில் அதனை எறிந்துவிடு –தகும்
மோசம் என்பதை புரிந்து விடு” என செம்பருத்திச் செடி தடுத்தும் குரங்கு குசேலன் யோசனை செய்தது.

“ஆஹா! விளையாடும் பொருள் என நாம் விளையாட்டு தனமாக கொண்டு வந்த இந்த பிளாஸ்டிக் பொருள் விஷமாமே! இது வரை எனக்கு தெரியாமல் போன‌தே! என எண்ணி வருந்தியபடி
உடைந்த பிளாஸ்டிக் பந்தினை கையில் எடுத்துக் கொண்டு சற்று தள்ளி ஓடிய ஆற்றினுள் எறிந்து விடலாம் என நினைத்தபடி ஆற்றின் கரையை அடைந்தது.

மெதுவாக சல சலவென ஓடிக் கொண்டிருந்த ஆறு தன்னருகே திருடனைப் போல திரு திரு என விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த குசேலன் குரங்கினை கண்டதும்

“குசேலன் குரங்கே குறும்புக்காரா
எசகு பிசகாய் எதுவும் செய்வதற்கோ
எந்தன் அருகினில் நிற்கின்றாய்
எதுதான் செய்திட நினைக்கின்றாய் “ என கேட்டது.

ஆற்றின் கேள்விக்கு பதிலாக நடந்ததை சுருக்கமாக கூறிய குசேலன் குரங்கு தன் கையிலிருந்த உடைந்த பிளாஸ்டிக் பந்தினை காட்டியது.

“உந்தன் கையில் உள்ளது விஷப்பொருளே
உடனே சென்றுவிடு இங்கிருந்தே
எந்தன் மீது அதனை நீ
எறிந்திட்டால் வரும் கேடே
ஓடும் நீர் நான்; நல்லவன் நான்
உன் கையில் உள்ள பொருளதனால்
வரும் கேடுகள் நிறைய காட்டிற்கே
வருங்காலமும் தந்திடும் மறவாதே
விரைந்தே அப்பொருள் கொண்டே நீ
விலகிச்சென்று இவ்விடத்தை” என ஆறு விரட்டியவுடன் உடைந்த பிளாஸ்டிக் பந்தினை என்னதான் செய்வது எனத் தெரியாமல் விழித்தபடி அந்த காட்டிலேயே வயதான புத்திசாலியான காகம் கருப்பனின் கூட்டினை அடைந்தது.

“கருப்பு நிறத்துடன் இருப்பவனே
காட்டில் அறிவுள்ள கருப்பனே
விருப்பமுடனே விளையாடுவதற்காய்
நாட்டினிலிருந்து கொண்டு வந்த
உருண்டை வடிவ இப்பந்து
இப்படி உடைந்தே போனதுவே
இதனை புதைத்திட நான் நினைக்க
செம்பருத்தியும் தடுத்திட்டாள்.
ஓடும் ஆற்றினில் வீசிடலாம் என
ஒரு புறம் கரையில் நின்றவுடன்
ஆறும் என்னை விரட்டியதே
விஷப்பொருள் இதுவென கூறியதே
எதுதான் உண்மை எனக்கு நீ
இனிதாய் விளங்கிட வைப்பாயா?
அத்துடன் இதனை என்ன செய்ய?

என்றொரு வழியும் சொல்வாயா?” என காகம் கருப்பனிடம் குரங்கு குசேலன் கேட்டது.

நாட்டினையும் நாட்டு மக்களின் வாழ்க்கை குறையினையும் நாகரீகம் என்ற பெயரில் அவர்களின் சுற்றுசூழல் கேடு தரும் பொருட்களின் பயன்பாடு குறித்தும் விளக்கமாக குசேலன் குரங்கிற்கு கருப்பன் கூறியது.

பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் மட்காது என்றும் நீரினால் அடித்து செல்ல இயலாமல் நீர் பகுதியில் அது தங்கிவிட நேர்ந்தால் தேவையற்ற இராசாயன பொருளாக அது மாறும், அதனால் நீரின் தூய்மை பின்பு கெட்டுப் போகும் என்று கருப்பனின் பேச்சை கேட்டு தனது செயலுக்காக வருந்தியது குசேலன் குரங்கு.

கருப்பனின் ஆலோசோனையின்படியே உடைந்திருந்த பந்தினை எடுத்துக் கொண்டு மீண்டும் நகரப் பகுதிக்குள் நுழைந்து நகரின் எல்லைப் பகுதியில் இருந்த கழிவு பொருட்கள் நிறைந்திருந்த தொட்டியிலும் அந்த உடைந்த பந்தினை போட்டு விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் விரைந்து மீண்டும் காட்டிற்குள் சென்று விட்டது.

பிளாஸ்டிக் பொருளின் உண்மையான தன்மைகளை அறிந்து கொண்ட குசேலன் குரங்கு இப்பொழுதெல்லாம் நகரப் பகுதிக்குள் வருவதேயில்லை.

“நகருக்குள் யாரும் செல்லாதீர்
நல்லவை அங்கே கிடையாது
பகட்டாய் வாழும் மனிதர்களால்
பூமியும் தீமையாய் மாறியதே
சுகமாய் நோயின்றி நாம் வாழ
சுற்றுச் சூழலினையே காப்பாற்ற
நகருக்குள் யாரும் செல்லாதீர்
நல்லவை அங்கே கிடையாது” என்று அவ்வப்போது தமது நண்பர்களுக்கு அறிவுரையும் கூறிக் கொண்டிருக்கிறதாம்.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.