இரண்டு அஸ்ஹாபித் தோழர்களோடு நபிகள் பெருமானார் நடந்து கொண்டிருந்தார்கள். தனிவழியே நெடுநேரம் பிரயாணம் தொடர்ந்தது. தொழுகைக்கான நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது.
அப்பொழுது ஒரு ஸஹாபியை (இறைதூதர் நபிகள் வழி நடப்போம் என்று உறுதி பூண்டு இஸ்லாமை வளர்த்தவர்கள்) பார்த்து, “மிஸ்வாக் (பல் துலக்க அல்லது வாய் சுத்தம் செய்ய) செய்து கொள்வதற்கு குச்சிகளை உடைத்து வாருங்கள்” என்றார்கள்.
அந்த ஸஹாபி தோழர் சற்றே தூரம் போய் மூவருக்கும் மூன்று மிஸ்வாக் குச்சிகளை ஒடித்து கொண்டு வந்தார். மிஸ்வாக்குகளை பெருமானாரின் கையிலே கொடுத்தார் தோழர்.
அவற்றை கையிலெடுத்த பெருமானார் மிஸ்வாக் துண்டுகளில் ஒன்று வளைந்திருப்பதையும் மற்ற இரு துண்டுகளும் நேராக இருப்பதையும் கவனித்தார்கள்.
பின்னர் வளைந்து கோணலாய் இருந்த மிஸ்வாக் துண்டைத் தாம் எடுத்துக் கொண்டு, நேராக இருந்த இரண்டு துண்டுகளையும் இரண்டு தோழர்களுக்கும் கொடுத்தார்கள்.
அப்பொழுது அவர்களில் ஒருவர், ” யா ரஸுல்லாஹ்! கோணலான மிஸ்வாக்கை நீங்கள் எடுத்துக்கொண்டீர்களே, நேராக உள்ள மிஸ்வாக்கை அல்லவா நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்டார்.
அதற்குப் பெருமானார்,”ஒரு பொருளை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது உயர்ந்ததாக பார்த்துக் கொடுக்க வேண்டும். நாம் விரும்புவதிலும் பார்க்க மேலானதையே மற்றவர்களுக்கு ஈவது சிறப்பானது. வளைந்து கோணலானதை மற்றவர்களுக்கு கொடுப்பதைவிட அதனை நான் வைத்துக் கொள்வதே மேலானது” நல்லதை வழங்கு என்ற கருத்தை கொண்ட சொற்களால் விடை கூறினார்கள்.
மற்றொரு சம்பவம்- அபூதல்ஹா என்னும் நபித்தோழர் மதீனாவிலே வாழ்ந்து வந்தார். அவர் பெருமானாரின் பிரிய தோழர்களில் ஒருவர்.
அவர் ஒரு செல்வந்தரும் கூட. பல பெரிய பேரீத்தம் தோட்டங்களுக்கு சொந்தக்காரராக விளங்கினார். அவருக்கு சொந்தமான தோட்டங்களில் ‘பைரஹா’ என்னும் பெயருடைய தோட்டம் ஒன்றும் இருந்தது.
பைரஹா பல சிறப்புகளை கொண்டிருந்தது. அபூதல்ஹா, பைரஹா தோட்டத்திலே மிகப்பிரியம் உடையவர். பைரஹாவிலே நீரூற்றுகள் நிறைய இருந்தன. பேரீத்தம் கனிகளும் நிறைய இருந்தன.
மதீனா முனவ்வறாவிலே மஸ்ஜிதுந்நபவிக்கு (மதீனாவில் நபி(ஸல்) அவர்களால் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்) எதிராக இத்தோட்டம் அமையப் பெற்றிருந்தது.
இதனால், பெருமானார் ரஸுலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அடிக்கடி பைரஹாவிற்குள் நுழையும் வாய்ப்பு இருந்தது.
நபிகள் பெருமான் அங்கே நுழையும் போதெல்லாம் நல்ல நீர் அருந்தி ஓய்வெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறான சிறப்புகளைக் கொண்டிருந்த அத்தோட்டத்தை அபூதல்ஹா தமது கண்ணிலும் மேலாக மதித்து வந்தார்கள்.
ஒருநாள் வழக்கம்போல அல்குர்ஆனின் ஆயத்துக்கள் அண்ணல் நபி அவர்களுக்கு அருளப்பட்டன.
“உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யும் வரை நீங்கள் ஒருபோதும் புண்ணியத்தைப் பெறவே மாட்டீர்கள்”
இந்த வாக்கியத்தை கேள்விப்பட்ட அபூதல்ஹா நபிகள் நாயகத்திடம் ஓடோடி வந்தார்.
“யா ரஸுலுல்லாஹ், எனக்குச் சொந்தமான சொத்துக்களிலே எனக்கு மிகவும் பிரியமானது பைரஹா தான்.
‘உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யும் வரை நீங்கள் ஒருபோதும் புண்ணியத்தைப் பெறவே மாட்டீர்கள்’ என்று அல்குர்ஆனின் வாயிலாக அறிவித்திருக்கும் போது பைரஹாவை எனது சொத்தாக நான் சொந்தம் பாராட்ட விரும்பவில்லை.
அல்லாஹ்வின் பாதையில் அவனது பிரியத்தை முதல் நோக்கமாக வைத்து, அதனை தானம் செய்ய முடிவு செய்து விட்டேன். ஆகவே அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ் தங்களுக்கு காட்டிய பிரகாரம் அதனை உபயோகிப்பீர்களாக” என்று கூறி முடித்தார்.
“மகிழ்ச்சி, மகிழ்ச்சி. பைரஹா லாபத்தை தரக்கூடிய சொத்தாகும். நீர் கூறியதை நான் செவியேற்றுக் கொண்டேன். அதனை நீர் உறவினர்களுக்கு சொந்தமானதாக ஆக்கிவிட வேண்டும்” என்று பணித்தார்கள்.
அபூதல்ஹா (ரலி) அவர்களும் அப்போதிலிருந்தே பைரஹாவை தமது நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து விட்டார்கள்.
“விசுவாசிகளே, (தர்மம் செய்ய கருதினால்) நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திய ( தானியம், கனி) முதலியவைகளில் இருந்தும் நல்லவைகளையே தானமாக செலவு செய்யுங்கள். அவைகளில் கெட்டவைகளை கொடுக்க விரும்பாதீர்கள்.
(ஏனெனில் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால்) அவைகளை நீங்கள் (வெறுப்புடன்) கண்மூடினவர்களாக இன்றி எடுக்க மாட்டீர்கள்.
(ஆகவே) நீங்கள் விரும்பாத பொருட்களை பிறருக்கு தானமாக கொடுக்காதீர்கள்.
நிச்சயமாக அல்லாஹ் நீதிபரனும் மிக்க புகழுடையோனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.”
– அல்குர்ஆன் சூரா பகரா 2:267
ஞாழல், புதுக்கோட்டை
அறம் செய்ய விரும்பு என்றார் ஒளவையார். அந்த அறத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை நல்லதை வழங்கு என்ற இக்கதை அழகாக விளக்குகிறது.