நல்ல சகுனம்

காலை 8 மணிக்கு மேல்.

தனசேகரன் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு (இன்டர்வியூ) புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

தனசேகரன் கல்லூரி படிப்பை முடித்து ஆறு மாதங்களுக்கு மேல் இருக்கும்; வேலை கிடைக்கவில்லை.

புதுபுது கம்பெனிகளுக்கு இன்டர்வியூ சென்று வந்து கொண்டு இருந்தான்.

எந்த கம்பெனியிலும் வேலை தரவில்லை; நிராகரிக்கப் பட்டான். அதற்கான காரணம் என்ன என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

அம்மா லட்சுமி,“தனசேகரா! இன்டர்வியூக்கு கெளம்பிட்டியா? நல்லா சாமிய கும்பிடு. இந்த வேலையாவது கிடைக்கணும் அப்டின்னு வேண்டிக்கோ! “ என்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் படத்தை பார்த்து கூறினாள்.

“சாமிய கும்பிட்டேன். நான் கிளம்புறேன்!“ என்றான் தனசேகரன்.

“நில்லு ஒருநிமிஷம்!

எத்தன தடவ சொல்றது சகுனம் பார்த்து போகணும்னு. நீ வீட்ல இருந்து வெளியில போறப்ப, நல்ல விசயத்த, இல்ல நல்ல ஆட்களை பார்த்துட்டு போகனும்.

அப்போ தான் போற காரியம் நல்லா நடக்கும். நம்ம காம்பவுண்ட்ல இருக்கிற ஆளு எல்லாம் பொறமை பிடிச்ச ஆளுக, அவங்கள பார்த்துட்டு போனா ஒன்னும் விளங்காது!“ என்று கூறிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தாள் அம்மா லட்சுமி.

எட்டி பார்த்து விட்டு, “தனசேகரா! இப்போ கெளம்பு. காம்பவுண்ட்ல யாரையும் காணோம். சீக்கிரமா கிளம்பு!“ என்று அம்மா லட்சுமி கூறியதும், வேகமாக பைலை எடுத்து கொண்டு கிளம்பினான் தனசேகரன்.

அப்போது அந்த காம்பவுண்டின் கீழ் வீட்டை நோக்கி செல்லும் போது அந்த வீட்டில் இருந்து ஒருபெண் குரல் கேட்டது.

“தம்பி கொஞ்சம் இரு!

நீ புதுசா வேலைக்கு போக போற, நல்ல சகுனம் பார்த்து போகனும்.

நீ அந்த தனசேகரன் முகத்தில முழிச்சிட்டு போயிராத.

அவனுக்கு ஒரு வேலை கிடைக்க மாட்டேங்குது. ராசி இல்லாதவன்.

அவனுக்கு அவன் அம்மாக்கு உன் மேல தான் ஒரு கண்ணு1 கொள்ளிகண்ணு!

இரு நான் வாசல்ல பார்த்துட்டு சொல்றேன்; அப்புறம் வரலாம் “ என்று தன் மகனிடம் கூறி கொண்டிருந்த பெண்ணின் குரல், அந்த வீட்டு வாசலை கடந்து கொண்டு இருந்த தனசேகரனுக்கு கேட்டது.

அவளின் பேச்சு அவனுக்கு கோபம் வந்தாலும் யோசிக்க வைத்தது.

‘என் அம்மாவின் பேச்சும் இப்படித்தானே மற்றவர்களை காயப்படுத்தியிருக்கும்! என்று அப்போது தனசேகரனுக்கு புரிந்தது.

சகுனம் பார்ப்பது சரியா? தவறா? என்பதை விட, அவர்கள் எடுக்கும் முயற்சியே அவர்களின் செயலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104

Comments

“நல்ல சகுனம்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. […] நல்ல சகுனம் ஆரோக்கிய சாமி […]

  2. […] தெய்வமாக வந்தவர்! நல்ல சகுனம் […]

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.