குட்டித் தவளை - சிறுவர் கதை

நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை

சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.

செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.

அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.

அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.

அக்குளத்திற்கு நாரை, கொக்கு, நீர்க்காகம், பாம்புத்தாரா, உள்ளான் உள்ளிட்ட பறவைகள் வந்து விளையாடும். பறவைகளின் சத்தத்தால் அக்குளம் மிகவும் மகிழ்ச்சியடைந்து பறவைகளுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்திருக்கும்.

அவ்வாறு ஒருநாள் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கொக்கு குளத்திடம் “உன்னுடன் பேசி மகிழும் நாங்கள் உனக்கு நல்ல நண்பர்களா? அல்லது இங்குள்ள பூக்கள் உனக்கு நல்ல நண்பர்களா?” என்று கேட்டது.

குளத்தால் சட்டென்று யார் நல்ல நண்பர்கள் என்று பதில் அளிக்க இயலவில்லை.

ஆதலால் கொக்கிடம் “எனக்கு உன்னுடைய கேள்விக்கான பதில் தெரியவில்லை. நான் யாரிடமாவது விசாரித்து விட்டுச் சொல்கிறேன்” என்று கூறியது.

கொக்கும் “சரி, நன்கு விசாரித்து விட்டுச் சொல்” என்று அங்கிருந்து கிளம்பியது.

குளம் கொக்கின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அங்கு நீண்டநாட்களாக வசித்த தங்கமீனிடம் “என்னிடம் பேசி மகிழும் பறவைகள் எனக்கு நல்ல நண்பர்களா? அல்லது இங்குள்ள பூக்கள் எனக்கு நல்ல நண்பர்களா?” என்று கேட்டது.

அதற்கு தங்கமீன் “எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. உன்னுடைய கேள்விகளுக்கெல்லாம் எனக்கு பதில் கூற நேரமில்லை.” என்றபடி அங்கிருந்து சென்று விட்டது.

தங்கமீன் பதில் சொல்லாமல் சென்றது குளத்திற்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது.

குட்டித் தவளை சங்கு நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

அது குளத்திடம் சென்று “நான் வேண்டுமானால் உன்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லட்டுமா?” என்று கேட்டது.

“நீயா! நீ ஒரு சின்னப்பையன் உனக்கெல்லாம் ஒன்றும் தெரியாது. நீ போய் விளையாடு.” என்று கூறியது.

குளம் கூறியதைக் கேட்டதும் குட்டித் தவளை சங்கு மிகவும் வருத்தத்துடன் அங்கிருந்து சென்றது.

மறுநாள் உள்ளான் ஒன்று மும்மரமாக குளக்கரையில் இரை தேடிக் கொண்டிருந்தது. அதனுடன் அதனுடைய ஆறு குஞ்சுகளும் வந்திருந்தன. அவை குளத்திற்குள் செல்வதும், வெளியே வருவதுமாக விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன.

தாய் உள்ளான் குஞ்சுகளை கவனித்துக் கொண்டபடியே இரை தேடுவதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது.

உள்ளானைப் பார்த்ததும் குளத்திற்கு “அனுபவசாலியான இந்த உள்ளானிடம் நம்முடைய கேள்வியைக் கேட்டால் அது சரியான பதிலைச் சொல்லிவிடும். நல்ல நண்பர்கள் யார் என்று கண்டுபிடித்து விடலாம்.” என்று எண்ணியது.

“உள்ளானே. நான் ஒரு கேள்வி கேட்பேன். நீ எனக்கு சரியான பதிலைச் சொல்ல வேண்டும். என்னிடம் பேசி மகிழும் பறவைகள் எனக்கு நல்ல நண்பர்களா? அல்லது இங்குள்ள பூக்கள் எனக்கு நல்ல நண்பர்களா?” என்று குளம் கேட்டது.

“என்னுடைய ஆறு குஞ்சுகளையும் பத்திரமாகப் பாதுகாத்து அவைகளுக்கு உணவளிக்கும் வேலைக்கே எனக்கு நேரம் போதவில்லை. இதில் உன்னுடைய கேள்விக்கு வேறு பதில் சொல்ல வேண்டுமா? அதற்கெல்லாம் நேரம் இல்லை.” என்றபடி தன்னுடைய வேலையைத் தொடர்ந்தது.

குளம் உள்ளானிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த சங்கு குட்டித் தவளை “இப்போதாவது எனக்கு ஒரு வாய்ப்பு தாயேன். நான் உன்னுடைய கேள்விக்கு பதில் சொல்கிறேன்.” என்று கூறியது.

“நீயோ பொடியன். இந்த கேள்விக்கெல்லாம் எப்படி சரியான பதிலைச் சொல்ல முடியும்?” என்று மறுபடியும் கேட்டது குளம்.

“நான் பதிலைச் சொல்கிறேன். அதன் பிறகு நீ என்னுடைய பதில் சரியா தவறா என்று முடிவு செய்.” என்றது சங்கு குட்டித்தவளை.

“சரி சொல் பார்ப்போம்.” என்று அலட்சியமாகக் கூறியது குளம்.

“நீ நீரால் நிரம்பி வழிகிறாய். அதனால் பறவைகளுக்குப் போதுமான உணவு உன்னிடத்தில் கிடைக்கிறது. எனவே அவை உன்னிடம் வந்து உணவு உண்டு உறவாடிப் பேசி மகிழ்கின்றன. உன்னிடம் இருக்கும் நீர் வற்றிவிட்டால் அவை உணவிற்காக உன்னை விட்டுவிட்டு வேறு இடம் தேடிச் சென்று விடும்.

ஆனால் இங்குள்ள பூக்கள் ஒருபோதும் உன்னை விட்டுப் பிரிவதில்லை. நீர் வற்றினாலும் அவை மடிந்து இங்கேயே இருக்கும். மறுபடியும் நீரால் நீ நிரம்பும்போது புதிதாகத் தோன்றி உன்னுடனேயே இருக்கும்.

ஆகையால் இங்குள்ள பூக்கள்தான் உனக்கு நல்ல‌ நண்பர்கள்.” என்று கூறியது குட்டித் தவளை சங்கு.

குட்டித்தவளையின் பதிலைக் கேட்டதும் குளத்திற்கு ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

“உன்னைப்போய் பொடியன். ஒன்றும் தெரியாதவன் என்று சொல்லிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. புத்திசாலிதனத்திற்கும் வயதிற்கும் தொடர்பில்லை என்பதை உன்னுடைய பதில் மூலம் நிரூபித்துவிட்டாய். உன்னுடைய பதிலை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நல்ல நண்பர்கள் யார் என்று அறிந்து கொண்டேன்.” என்று குளம் கூறியது.

குழந்தைகளே, பறவைகளைப் போல் தம்முடைய தேவைக்காக‌ மட்டும் நம்மை நாடி வருபவர்கள் நல்ல நண்பர்களா? அல்லது பூக்களைப் போல் எப்போதும் நம்முடன் இருந்து சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் நல்ல நண்பர்களா? என்பதைப் புரிந்து சரியான நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள்.


Comments

“நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Good story

  2. அருமையான கதை …..