நல்ல நேரம்

மலையில் சூரியன் விழுகின்ற நேரம்

மனதில் மகிழ்வினைத் தருகின்ற நேரம்

அலையலை யாகவே அனைவரும் கூடியே

ஆசையுடன் விளையாடிடும் நேரம்

 

சோலைக் குயில்களும் சூழ்ந்திடும் நேரம்

சொந்தக் குரலிசை கொடுத்திடும் நேரம்

பாலைப் பசுங்கிளி பாடிடும் நேரம்

பைந்தமிழ் பாட்டிங்கு ஒலித்திடும் நேரம்

 

செப்புப் பாத்திரம் எடுத்து நாங்களே

செய்யும் சோற்றுக்கு சுவையும் கூடுமே

எப்போதும் ஈரமாய் இருக்கும் மணலிலே

எல்லோரும் வீடுகள் கட்டிடும் நேரம்

 

தங்க நிறத்தில மலர்களை எடுத்து

தரையில் கிடக்கிற கல்லுக்கு வச்சு

கொஞ்ச நேரத்தில் கோயிலைக் கட்டி

கும்பிட அனைவரும் கூடிடும் நேரம்

 

மாதவி கல்லினை மாரியென் றழைப்பாள்

மைதீன் அதனை அல்லா என்பான்

வேதம் படித்த மேரியோ அதனை

வெள்ளி நிறத்து மாதா என்பாள்

 

எங்களுக் குள்ளே இருக்கும் ஒருமையை

எல்லோரும் அளித்திடச் செய்திடும் நேரம்

இந்திய மக்களும் எங்களைப் போலவே

இணைந்து வாழ்ந்திட இன்பம் பெருகுமே

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)