நவகிரகக் கோவில்கள் கும்பகோணம், சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.
நவகிரகக் கோவில்கள் நவகிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியவற்றிற்கான சிறப்பு வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.
இப்பிறவில் ஏற்படும் இன்ப துன்பங்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இறைவனின் ஆணைப்படி நவகிரகங்கள் வழங்குவதாக இந்து மதத்தில் கருதப்படுகிறது.
தாங்கள் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி இப்பிறவியில் இன்பம் பெற இந்நவகிரக வழிபாட்டு தலங்களுக்கு சென்று மக்கள் வழிபாடு மேற்கொள்கின்றனர்.
இனி கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நவக்கிரகக் கோவில்கள் பற்றிப் பார்ப்போம்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நவக்கிரகக் கோவில்கள்
சூரியன் – சூரியனார் கோவில், திருமங்கலக்குடி
சந்திரன் – கைலாசநாதர் கோவில், திங்களுர்
செவ்வாய் – வைத்தியநாத சுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில்
புதன் – சுவேதாரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு
குரு – ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஆலங்குடி
சுக்கிரன் – அக்னீஸ்வரர் கோவில், கஞ்சனூர்
சனி – தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு
ராகு – நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்
கேது – நாகநாதர் கோவில், கீழப்பெரும்பள்ளம்
நவக்கிரக் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தும் முன்பு நவகிரகங்களுக்கு சாப விமோசனம் அளித்த திருமங்கலக்குடியில் உள்ள மங்களாம்பிகை உடன்உறை பிராணநாதர் திருக்கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
சூரியனார் கோவில், திருமங்கலக்குடி
நவக்கிரகங்களின் தலைவனான சூரியனை மூலவராக உடையது இக்கோயில். இவ்விடம் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், சுவாமி மலையிலிருந்து 21 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்கு மூலவர் சிவசூரியநாராயணர் ஆவார். இவர் இடப்புறத்தில் உஷா தேவியையும், வலப்புறத்தில் சாயா தேவியையும் கொண்டு கைகளில் தாமரை மலர் ஏந்தி புன்முறுவலுடன் திருமணக் கோலத்தில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார்.
இவருக்கு எதிரில் குரு பகவானும், சூரியனின் வாகனமான குதிரையும் காணப்படுகிறது. மற்ற நவக்கிரகங்கள் தனிச் சந்திகளில் அருள்புரிகின்றனர்.
இங்கு தைமாதத்தில் ரதசப்தமி உற்சவம் 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு தீர்த்தம் சூரிய தீர்த்தம். வெள்ளெருக்கு தலவிருட்சமாக உள்ளது.
இக்கோவிலில் நேர்த்திக்கடனுக்காக துலாபாரம் செலுத்துதலும், அன்னதானம் செய்தலும் நடைபெறுகின்றன. இக்கோவில் குலோத்துங்கச் சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
கைலாசநாதர் கோவில், திங்களுர்
நவகிரங்களில் ஒருவரான சந்திரனின் தலமாக இவ்விடம் போற்றப்படுகிறது. இவ்விடத்தில் சந்திரன் தங்கி இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கி தன்னுடைய பூரண ஒளியைத் திரும்பப் பெற்ற இடம்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரம் செய்த இடம். திருநாவுக்கரசர் இறைவனைக் குறித்து பாடல்கள் பாடி பாம்பு தீண்டிய அப்பூதி அடிகளின் மகனின் உயிரை மீட்ட தலம். நாவுக்கரசர் பாடிய பாடல்கள் திருப்பதிகம் என்றழைக்கப்படுகிறது.
இத்தல மூலவர் கைலாசநாதர். அம்மை பெரிய நாயகி. தீர்த்தம் சந்திர தீர்த்தம். இத்தலத்தில் சந்திரன் தனிச்சந்நிதியில் மேற்கு நோக்கி அருள்புரிகிறார்.
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. இவ்விடம் தஞ்சாவூரிலிருந்து 18 கிமீ தூரத்திலும், திருவையாற்றிலிருந்து 3 கிமீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 33 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் குழந்தைகளுக்கு முதல் அன்னம் ஊட்டுதல் நிகழ்வானது சிறப்பாக செய்யப்படுகிறது. இத்தல இறைவனை வழிபட திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். அறிவுத்திறன் பெருகும். மன உளைச்சல், மன அழுத்தம், சண்டை சச்சரவு ஆகியன நீங்கும்.
வைத்தியநாதர் திருக்கோவில், வைத்தீஸ்வரன் கோவில்
நவகிரகங்களில் மூன்றாவது கிரகமான அங்ககாரன் எனப்படும் செவ்வாயின் தலமாக இவ்விடம் உள்ளது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர். அம்மை தைலாம்பாள், தையல்நாயகி.
இவ்விடத்தில் முருகன் செல்வமுத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் அருளுகிறார். செவ்வாய்க்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. இராமாயணத்தில் வரும் சாடாயுவை எரியூட்டிய இடம் இங்குள்ளது. தீர்த்தம் சித்தாமிர்த தீர்த்தம்.
புள்ளிருக்குவேளுர் என்பது இத்தலத்தின் மற்றொரு பெயராகும். சாடாயு என்னும் பறவை அரசன் (புள்), ரிக் (வேதம்), வேள் (முருகன்), ஊர் (சூரியன்) வழிபாடு செய்த இடம்.
செவ்வாய் தன் குஷ்ட நோய் நீங்க சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது. இவ்விடம் மயிலாடு துறையிலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன் பிணிகளைத் தீர்க்க வைத்தியநாதராகவும், இறைவனுக்கு உதவியாக அம்மை தைலப்பாத்திரம், சஞ்சீவினி மூலிகை ஏந்தி வந்ததால் தையல் நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவன் 4448 வகையான நோய்களை நீக்குவதாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் நவகிரகங்கள் ஒரே நேர்கோட்டில் மூலவருக்கு பின்புறம் காட்சியளிக்கின்றனர். இங்கு தரப்படும் திருசாந்துருண்டை பிணிகளை நீக்க வல்லது.
இத்தல இறைவனை வழிபட புத்திர பாக்கியம், திருமணப் பாக்கியம், தொழில் விருத்தி ஆகியன கிட்டும். பிணிகள் நீங்கும்.
சுவேதரண்யேஸ்வரர் கோவில், திருவெண்காடு
இவ்விடம் நவகிரகங்களில் ஒன்றான புதனின் தலமாகும். இத்தலத்தின் மூலவர் சுவேதண்யேஸ்வரர். அம்மை பிரம்ம வித்யாம்பிகை. இத்தலத்தின் சிறப்பு நாயகராக சிவனின் 64 மூர்த்தங்களில் ஒருவரான அரோகர மூர்த்தி உள்ளார்.
இவ்விடத்தில் சிதம்பர ரகசியம், ஸ்படிக லிங்கம், நடராஜர் சபை ஆகியவை அமைந்துள்ளதால் இத்தலம் ஆதிசிதம்பரம் என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. இத்தலம் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
இத்தலத்தில் மூர்த்திகள் (சுவேதாரண்யேஸ்வரர், அகோரமூர்த்தி, நடராஜர்) சக்திகள் (பிரம்ம வித்தியாம்பிகை, காளி, துர்கை) தீர்த்தம் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்), தலவிருட்சம் (வடவால், வில்வம், கொன்றை) என மும்மூன்றாக அமையப் பெற்று உள்ளது. இத்தலத்தில் வடவால் தலமரத்தின் கீழ் ருத்ர பாதம் உள்ளது.
புதன் இத்தல இறைவனை வணங்கி அலி தோசம் நீங்கப் பெற்று நவகிரகத்தில் ஒன்றானார். எனவே இத்தலம் புதனுக்குரிய தலமாக விளங்குகிறது. இத்தலம் சீர்காழியிலிருந்து 13 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
காசிக்கு இணையான ஆறு தலங்களில் இவ்விடமும் ஒன்று. இத்தல இறைவனை வழிபட கவலைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, நாவன்மை, கல்வி மேன்மை ஆகியவை கிட்டும்.
ஆபத்சகாயேஸ்வரர் கோவில், திருஆலங்குடி
நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானின் கோவிலாக இத்தலம் விளங்குகிறது. தலம், மூர்த்தி, தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்றதாக இத்தலம் உள்ளது. இங்கு இறைவன் ஆபத்சகாயேஸ்வரர், அம்மை ஏலவார்குழலி. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தியாவார்.
பஞ்ச ஆரண்ய தலங்களில் இத்தலமும் ஒன்று. இத்தலமானது திருஇரும்பூளை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விசத்திலிருந்து காப்பாற்றியதால் இத்தல இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
திருவிடைமருதூர் மகாலிங்கப்பெருமானுக்கு பரிவாரத் தலங்களாக உள்ள ஒன்பது தலங்களில் இத்தலமும் ஒன்று. இத்தல இறைவனை சாயாரட்சை வழிபாட்டில் வழிபடுவது சிறப்பானதாகும்.
விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் என பலர் வழிபட்ட சிறப்பினை உடையது இத்தலம். இக்கோவிலைச் சுற்றிலும் அமிர்த புஷ்கரணி தீர்த்தமும், கோவிலின் முன்னே சக்ர தீர்த்தமும் உள்ளது.
இக்கோவில் கும்பகோணத்திலிருந்து 17 கிமீ தொலைவில் கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது.
ஆதிசங்கரர் இத்தலத்தில் குரு மூர்த்தியை வழிபட்டு சிவஞானம் பெற்றார். இந்திரன் உள்ளிட்ட அட்டதிக் பாலர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இடர்கள் நீங்கிப் பேறு பெற்றனர்.
அக்னீசுவரர் திருக்கோவில் கஞ்சனூர்
நவகிரகங்களில் சுக்ரனின் கோவிலாக இத்தலம் கருதப்படுகிறது. இறைவன் அக்னீசுவரர் அம்மை கற்பகாம்பாள் தீர்த்தம் அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
இங்கு இறைவன் பிரம்மனுக்கு திருமணக் கோலத்தை காட்டி அருளினார். பராசர முனிவருக்கு சித்த பிரமையை நீக்கி முக்தி தாண்டவம் ஆடி முக்தி அளித்தார்.
சந்திரனின் சாபம் நீங்கியதும், கல்நந்தி புல் தின்றதும், ஹரதத்தர் பஞ்சாட்சர (நமசிவாய) மகிமையை வெளிப்படுத்தியதும், மானக்கஞ்சாற நாயனார் அவதரித்ததும் இத்தலத்தின் சிறப்புக்களாகும்.
இத்தலத்தில் இறைவனே சுக்கிரனாக இருந்து அருள்பாலிப்பதாகக் கருதப்படுகிறது. இத்தல நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமி அம்மையைக் கொண்டுள்ளார் என்பது சிறப்பு.
இத்தலம் கும்பகோணத்திலிருந்து 16 கிமீ தூரத்திலும், சூரியனார் கோவிலிருந்து 2 கிமீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
இத்தல இறைவனை வணங்க உடல் பிணி, சோகை நோய், சித்த பிரம்மை ஆகியவை நீங்கும் என்றும், செல்வ செழிப்பு, நல்ல திருமண வாழ்க்கை கிடைக்கும்.
தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளாறு
இவ்விடம் நவகிரகங்களில் சனிக்கான தலமாகும். இங்கு இறைவன் தர்ப்பரண்யேஸ்வரர் அம்மை போகமார்த்த பூன்முலையாள் தீர்த்தம் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம். இத்தல இறைவனை சனிபகவான் வணங்கி ஈசுவரப் பட்டம் பெற்றார்.
மேலும் சனியினால் பாதிக்கப்பட்ட நிடத நாட்டு மன்னனான நளன் இத்தலத்திற்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டு சனி பாதிப்பிலிருந்து விடுபட்டார். ஆதலால் இத்தலம் சனிக்குரியதாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாவார்.
மதுரையில் திருஞான சம்பந்தர் சமணர்களுக்கிடையேயான போட்டியில் இத்தலம் குறித்த பாடல்கள் உள்ள ஏட்டினை அனலில் இட்டார். ஏடு தீக்கு இரையாகாமல் இருந்ததால் அனல் வாதில் ஞானசம்பந்தர் சமணர்களை வென்றார். இதனால் போகமார்த்த பூன்முலையாள் பதிகம் பச்சை பதிகம் என்ற அழைக்கப்படுகிறது.
இத்தலம் சப்த விடங்கத்தலங்களில் ஒன்றாகும். இங்கு இறைவனின் நடனம் உன்மத்த நடனமாகும்.
இத்தல இறைவனை திருமால், இந்திரன், பிரம்மா, அட்டதிக் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்சுனன், நளன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இத்தலம் காரைகாலிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வழிபட வாழ்வின் சோதனைகள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்
இவ்விடம் நவகிரகங்களில் நிழல்கிரகமான இராகுவிற்கான தலமாகும். இங்கு இறைவன் நாகநாத சுவாமி, அம்மை பிறையணிநுதலாள், கிரிகுஜாம்பிகை, தீர்த்தம் சூர்ய புஸ்கரணி.
நாகர்களின் அரசனான ஆதிசேசன் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றதால் இத்தல இறைவன் நாகநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
சுசீல முனிவரின் மகனை தீண்டியதால் ஏற்பட்ட சாபத்தினைப் போக்க ராகு இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தி பெற்றார்.
இத்தலத்தில் ராகு பகவான் மனித உருவில் நாகவல்லி, நாககன்னி என்ற தேவியர்களுடன் தென்மேற்கு மூலையில் அருளுகிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பால் அபிசேகம் செய்யும்போது பால் நீலநிறமாக காட்சியளிப்பது சிறப்பானது.
இத்தல இறைவனை வழிபட்டே கௌதமர் அகலிகையை அடைந்தார். நளன் இழந்த செல்வத்தை திரும்பப் பெற்றான். பாண்டவர்கள் இழந்த நாட்டினை திரும்பப் பெற்றார்கள். சந்திரவர்மன் நாய் வடிவு நீங்கப் பெற்றான். இந்திரன் சாபம் நீங்கப் பெற்றான். சேக்கிழார் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார்.
இத்தல இறைவனை ராகு, கார்கோடகன், வாசுகி, ஆதிசேசன், தட்சன், கௌதமர், நந்தி, நளன், பராசரர், பகீரதன், சேக்கிழார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
இத்தலம் கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. இத்தல இறைவனை வழிபட வளமான வாழ்வு, யோகம், தொழில் விருத்தி, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வெளிநாட்டுப் பயணம் ஆகியவை கிட்டும்.
நாகநாதர் கோவில், கீழப்பெரும்பள்ளம்
இத்தலம் நவகிரகங்களில் பலம் பொருந்தியவரான கேதுவிற்கு உரியது. இங்கு இறைவன் நாகநாதர். அம்மை சவுந்தர்ய நாயகி. தீர்த்தம் நாகதீர்த்தம்.
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி கக்கிய விசத்தை சிவபெருமான் விழுங்கி உலகைக் காத்தார். இதனால் சிவபெருமானை வாசுகிப் பாம்பு இத்தலத்தில் வழிபட்டது. நாகம் வழிபட்டதால் நாகநாதர் என்ற அழைக்கப்படுகிறார்.
அமிர்தம் பெற்ற அசுரான ஸ்வர்ணபானுவை மோகினான திருமால் சக்கராயுதத்தால் தாக்கிய போது தலையும், உடலும் துண்டாகியது. அவ்வாறு துண்டான உடல் பகுதி மூங்கில் காடுகளாக இருந்த கீழப்பெரும்பள்ளத்தில் விழுந்தது.
அமிர்தம் பருகியதால் உடல் இறவாது ஞானம் மார்க்கத்தில் சென்று இறைவனை நோக்கி தவமியற்றியது. இறைவனாரும் பாம்பின் தலையை உடலுக்கு பொருத்தி நவகிரக பதவியையும் வழங்கினார். இவரே கேது பகவான்.
இத்தலத்தில் வடக்கு பிரகாரத்தில் இவர் கைகளைக் கூப்பி மூலவரை வணங்கிய நிலையில் மேற்கு நோக்கி உள்ளார்.
இவ்விடம் சீர்காழி மற்றும் மயிலாடு துறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இத்தல இறைவனை வழிபட ஞான மார்க்கம், ஆன்மீகச் சிந்தனை உண்டாகும்.
நவகிரகக் கோவில்கள் சென்று இறைவனை வழிபட்டு வாழ்வில் உயர்வோம்.
– வ.முனீஸ்வரன்