நவராத்திரி கொலு

நவராத்திரி கொலு விளக்கம்

நவராத்திரி கொலு விளக்கம் கட்டுரை நவராத்திரியின்போது எப்படி கொலு அமைக்க வேண்டும் என்பது பற்றி விளக்குகின்றது.

முதலில் நாம் நவராத்திரி விழா பற்றித் தெரிந்து கொள்வோம்.

நவராத்திரி விழா

நாம் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்று.

நவம் என்றால் ஒன்பது.

ஒன்பது ராத்திரிகள் அம்மனுக்கு நடத்தும் விழா நவராத்திரி விழா ஆகும்.

ஆண்டுதோறும் நான்கு வகையான நவராத்திரிகள் வருகின்றன. அவையாவன

1. வசந்த நவராத்திரி – சித்திரை மாதம்

2. ஆஷாட நவராத்திரி – ஆடி மாதம்

3. சாரதா நவராத்திரி – புரட்டாசி மாதம்

4. ஷியாமளா நவராத்திரி – தை மாதம்

இவற்றுள் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரியை நாம் சிறப்பாக கொண்டாடுகிறோம்.

புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் முதல் ஒன்பது நாட்கள் நாம் நவராத்திரியை கொண்டாடுகிறோம்.

பத்தாம் நாள் விஜயதசமி ஆகும். இந்த வருடம் செப்டம்பர்29  முதல் அக்டோபர் 7 முடிய நவராத்திரி வருகிறது.

மைசூரில் நவராத்திரியை “தசராபண்டிகை”யாகவும், மேற்கு வங்காளத்தில் “துர்காபூஜை”யாகவும் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு பூஜை செய்கிறோம்.

அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியை நினைத்து வழிபடுகிறோம்.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு பூஜை செய்கிறோம். ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது. அன்று அவரவர் தொழிலுக்குரிய கருவிகளை மற்றும் புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வணங்குகிறோம்.

பத்தாவது நாள் விஜயதசமி ஆகும்.

அன்று அம்மன் வெற்றியை கொண்டாடும் நாளாக கருதுகிறோம்.

அன்று சரஸ்வதியின் முன்பு வைத்த புத்தகங்கள் மற்றும் கருவிகளை எடுத்து நம் வேலையை தொடங்குகிறோம். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.

அன்று சிறு குழந்தைகள் தங்கள் கல்வியினை ஆரம்பிக்கிறார்கள்.

 

நவராத்திரி கொலு

நவராத்திரி என்றாலே நமக்கு கொலுவும் சுண்டலும்  நினைவிற்கு வரும்.

நவராத்திரி அன்று பெண்கள் கொலு வைத்து வித விதமான படையல் வைத்து முப்பெருந்தேவியரை வழிபடுகின்றனர்.

கொலு என்பது பல படிகளைக் கொண்ட மேடையில் பல விதமான பொம்மைகளை மற்றும் தெய்வ வடிவங்களை அழகாக அடுக்கி அலங்கரிப்பதே ஆகும்.

கொலு மேடையில் படிகளை ஒற்றைப்படை எண் கொண்டதாக அமைக்க வேண்டும்.

5, 7, 9, 11 என தேவைக்கேற்ப படிகள் அமைத்து கொலு பொம்மைகளை அடுக்கி அலங்கரிக்க வேண்டும்.

 

கீழிருந்து மேலாக முதல்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி போன்ற தாவர வகை பொம்மைகளை வைக்கலாம்.

இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்கலாம்.

மூன்றாம் படியில் மூன்றறிவு கொண்ட கரையான், எறும்பு போன்ற பொம்மைகளை வைத்து அலங்கரிக்கலாம்.

நான்காம் படியில் நான்கறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு பொம்மைகளை அடுக்கலாம்.

ஐந்தாம் படியில் ஐந்தறிவு உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளின் பொம்மைகளை அடுக்கலாம்.

ஆறாம் படியில் ஆறறிவு உள்ள மனிதர்களின் பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படியில் சித்தர்கள், ரிஷிகள் போன்றோரின் பொம்மைகளை அடுக்கலாம்.

எட்டாம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள், தேவதைகள் ஆகிய தெய்வ வடிவங்களை வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அவர்களின் தேவியர்கள் போன்ற தெய்வ வடிவங்களை அடுக்கி வைக்கலாம்.

 

இவ்வாறு பத்து நாட்களும் பூக்களால் கொலுவை அலங்கரித்து,  விதவிதமாக பிரசாதங்களை படைத்து, பாடல்களை பாடி சக்தியை வழிபடலாம்.

கொலு வைத்துள்ள வீட்டிற்கு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் தினமும் மாலையில் சென்று பக்தி பாடல்கள் பாடி மகிழ்வர்.

நாமும் நவராத்திரி விழாவினை கொண்டாடுவோம்!

அம்மனின் அருளை பெறுவோம்!

-பிரேமலதா காளிதாசன்