நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும், அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.

நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28-வது படலமாக அமைந்துள்ளது.

சமணர்களின் சூழ்ச்சி

அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் மேல் மாறாத அன்பு கொண்டு மதுரையில் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். மதுரை மக்களும் அனந்தகுண பாண்டினை பின்பற்றி சோமசுந்தரக் கடவுளிடம் பேரன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

அவனுடைய ஆட்சியில் சைவநெறி செழித்து விங்கியது. இதனை அறிந்த சமண சமயக் குரவர்கள் சூழ்ச்சியால் அனந்தகுண பாண்டினையும், மதுரையையும் அழிக்க நினைத்தனர்.

ஆதலால் அவர்கள் ஒன்றுகூடி அபிசார வேள்வி (மரண வேள்வி) ஒன்றினைத் தொடங்கினர். அவ்வேள்வியின் இறுதியில் அவுணன் ஒருவன் தோன்றினான்.

நாகம் மதுரையை அழிக்க வருதல்

அவ்வவுணன் சமணர்களிடம் “எனக்கு தாங்கள் இடும் கட்டளை யாது?” என்று வினவினான். சமணர்கள் அவனிடம் “நீ பெரிய நாகத்தின் வடிவில் சென்று அனந்தகுண பாண்டியனையும், அவனுடைய மதுரை மக்களையும் விழுக்கிவிடு” என்று கட்டளையிட்டனர்.

அவுணனும் பெரிய பாம்பின் வடிவில் அனல் தெறிக்கும் கண்களுடன் மதுரை அழிக்க மதுரையை நோக்கிப் புறப்பட்டான்.

நாகத்தினை அழித்தல்

மதுரை நகரின் புறத்தே வந்த நாகம் அங்கியிருந்தவர்களை விழுங்கத் தொடங்கியது. நாகத்தின் விசமூச்சுக் காற்றால் அவ்விடத்தில் இருந்த மரங்கள், பயிர்கள் எல்லாம் கருகின.

நாகத்தின் செயல்களை கவனித்த ஒற்றர்கள் அனந்தகுண பாண்டியனுக்கு நாகத்தின் வடிவத்தையும், செயலையும் தெரிவித்தனர்.

நாகம் பற்றி அறிந்த அனந்தகுண பாண்டியன் திருக்கோவிலை அடைந்து இறைவனை துதித்து தன்னையும் மதுரை மக்களையும் நாகத்திடமிருந்து காப்பாற்றுமாறு வேண்டினான்.

இறைவனாரும் பாம்பினை அழிக்க அனந்தகுண பாண்டியனுக்கு அருள்புரிவதாக திருவாய் மலர்ந்தருளினார். இறைவனின் ஆணையினை ஏற்று அனந்தகுண பாண்டியன் மதுரை நகரின் மேல்திசையில் நின்றிருந்த நாகத்தினிடம் சென்றான்.

இறைவனை தியானித்து நாகத்தினை நோக்கி அம்பு ஒன்றினை எய்தான். அனந்தகுண பாண்டியனின் அம்பு இறைவனின் திருவருளால் நாகத்தினை உடலினைக் கிழித்தது. நாகமானது நஞ்சினை உமிழ்ந்துவிட்டு மடிந்தது.

மக்களைக் காத்தல்

நாகம் உமிழ்ந்த நஞ்சின் விசமானது மதுரை மக்களை மயக்க நிலைக்கு தள்ளியது.

மக்களின் நிலையை அறிந்த அனந்தகுண பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து “இறைவா, மதுரையை அழிக்க வந்த கடலினை வற்றச் செய்தீர்கள்.

கருக்கொண்ட மேகங்களின் பெருமழையிலிருந்து நான்கு மாடங்களை உருவாக்கி மதுரையைக் காத்தீர்கள். மதுரையை அழிக்க வந்த யானையினை அழித்தீர்கள்.

தற்போது நாகத்தின் நஞ்சினால் மயக்கமடைந்திருக்கும் மதுரை மக்களைக் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினான்.

அனந்தகுண பாண்டியனின் கூக்குரலைக் கேட்ட இறைவனார் தன்னுடைய சடையில் அணிந்திருந்த சந்திரனின் அமுதத்தினை மதுரையின் மீது சிந்தச் செய்தார்.

இறைவனார் சிந்திய அமுதமானது நாகத்தின் நஞ்சினை முறித்தது. மதுரை மக்கள் தூக்கத்திலிருந்து விழிப்பவர்கள் போல் எழுந்தனர். நாகம் வீழ்ந்த இடம் தற்போது நாகமலை என்று அழைக்கப்படுகிறது.

நாகம் எய்த படலம் கூறும் கருத்து

தீயவர்களின் சூழ்ச்சியினை இறைவனின் திருவருளால் வீழ்த்தலாம் என்பதே நாகம் எய்த படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் அங்கம் வெட்டின படலம்

அடுத்த படலம் மாயப் பசுவை வதைத்த படலம்

 

Comments

“நாகம் எய்த படலம்” மீது ஒரு மறுமொழி