நான்கு பொம்மைகள் கதையிலிருந்து நாம் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
குமாரதேசம் என்ற நாட்டை தெய்வசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தார். மன்னருக்கு மணிசேனன் என்ற மகன் இருந்தான்.
அவ்விளவரசனுக்கு பதினாறு வயது நிரம்பி இருந்தபோது காலன் என்கின்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார்.
மன்னரைப் பார்த்து இளவரசன் மணிசேனனுக்கு நான்கு பொம்மைகள் பரிசளிக்க விரும்புவதாக முனிவர் காலன் தெரிவித்தார்.
மன்னரும் சம்மதிக்கவே இளவரசனின் இருப்பிடத்தை அடைந்தார்.
இளவசரன் மணிசேனனை வாழ்த்தி, இளவரசனுக்கு பரிசளிக்க விரும்புவதாகக் கூறி மூன்று பொம்மைகளை முனிவர் கொடுத்தார்.
பொம்மைகளைப் பார்த்ததும் இளவரசன் மணிசேனன் ஏமாற்றத்துடன் முனிவரிடம் “ஐயா, நான் சிறுவன் அல்லவவே. எதற்காக இந்த பொம்மைகளை எனக்கு பரிசாகக் கொடுத்தீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு முனிவர்
“தாங்கள் வருங்கால மன்னர் அல்லவா?
ஆதலால் உங்களுக்கு மக்களில் எத்தனை வகையினர் உள்ளனர்?
அவர்களிடம் அரசர் எவ்வாறு செயல்பட வேண்டும்?
என்பதை உணர்த்துவதற்காக இப்பொம்மைகளைப் பரிசாகக் கொடுத்துள்ளளேன் என்றார்.
“இந்த பொம்மைகளின் வலது காதில் துளை உள்ளது. தாங்கள் இந்தக் கம்பியை துளையினுள் செலுத்துங்கள்” என்று முனிவர் கூறினார்.
குழப்பத்துடன் முதல் பொம்மையின் காதில் கம்பியை இளவரசன் மணிசேனன் நுழைத்தான். வலது காதில் செலுத்திய கம்பி இடது காதின் வழியாக வெளியே வந்தது.
ஆச்சர்யத்துடன் முனிவரைப் பார்த்த இளவரசனிடம் “இவ்வகையான மக்கள் எதனைச் சொன்னாலும் வலது காதில் வாங்கி இடது காதின் வழியே விட்டுவிடுவர்.” என்றார்.
இளவரசனை அடுத்த பொம்மையை எடுக்குமாறு முனிவர் சைகை செய்தார்.
இரண்டாவது பொம்மையை எடுத்து வலது காதின் வழியே கம்பியை நுழைத்ததும் கம்பியானது பொம்மையின் வாயின் வழியே வெளியே வந்தது.
முனிவர் “இம்மக்கள் எதனைச் சொன்னாலும் எல்லோரிடமும் அவ்விசயத்தைச் சொல்லிவிடுவர்.” என்றார்.
மூன்றாவது பொம்மையின் காதினுள் கம்பியைச் சொருகியதும் கம்பி வெளியே வரவில்லை.
முனிவர் காலன் இளவரசன் மணிசேனனிடம் “இளவரசே, இவ்வகை மக்களிடம் எதனைச் சொன்னாலும் அவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடவே மாட்டார்கள்.” என்று கூறினார்.
இளவரசன் முனிவரிடம் “இம்மூன்று வகை மக்களில் எவ்வகையினர் சிறந்தவர்?” என்று கேட்டார்.
அதற்கு முனிவர் மற்றொரு பொம்மையை இளவரசனிடம் கொடுத்து கம்பியை நுழைக்கச் சொன்னார்.
முதல்தடவை கம்பியை நுழைத்ததும் கம்பி பொம்மையின் மற்றொரு காதின் வழியே வெளியே வந்தது.
இரண்டாவதுதடவை நுழைத்ததும் பொம்மையின் வாயின் வழியே வெளியே வந்தது.
மூன்றாவதுதடவை நுழைத்ததும் கம்பி வெளியே வரவில்லை.
நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் “இவ்வகையினரே, சிறந்தவர்.
அதாவது கெட்டவைகளை ஒருகாதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டுவிட வேண்டும்.
நல்லசெய்திகளை காதில் வாங்கி எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இரகசியங்களை காதில் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தக் கூடாது.
அரசன் என்பவன் எப்போது கேட்கக் கூடாது; எப்போது அமைதியாக இருக்கக் கூடாது; எப்போது பேச வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.” என்றும் கூறினார்.
நல்லவற்றைக் கேளுங்கள்; நல்லவற்றைப் பேசுங்கள் என்பதை நான்கு பொம்மைகள் கூறுகிறது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!