மதுரை – சோலை அழகுபுரம்
இரவு அரசு மதுபான கடை, போதை தலைக்கு மேல ஏறி தடுமாறியபடி வீட்டை நோக்கி நடந்து கொண்டு இருந்தான் ராஜேஷ்.
ராஜேஷை இதுவரை யாரும் இப்படி பார்த்தது இல்லை. ராஜேஷ் என்றால் ‘நல்ல’ என்ற ஒருவார்த்தை மட்டும் தான் எல்லாரிடமும் வரும்.
அப்பா சுந்தரம் – அம்மா மீனாட்சிக்கு ஒரே பிள்ளை ராஜேஷ், செல்லமாக வளர்த்தனர். நல்லவிதமாக தான் வளர்ந்தான்; நன்றாக படித்தான்; நல்ல வேலைக்கு சென்றான். கை நிறைய பணம்; பெண் பார்க்க ஆரம்பித்தனர்.
ராஜேஷ் தனக்கென்று ஒரு தொழில் ஆரம்பித்தான். நல்ல முறையில் சென்று கொண்டு இருந்தது.
அப்பா சுந்தரம் தனியார் அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
அவர் சொந்த உழைப்பில் பணம் சேர்த்து ஒரு வீட்டை கட்டினார். அந்த வீட்டில் தான் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.
ராஜேஷ் தன் சொந்த பந்தகளுக்கு பிடித்த ஆளாகி போயிருந்தான். “பிள்ளைன்னு கிடச்சா அது ராஜேஷ் மாதிரி தான் கிடைக்கணும்!” என்று அனைவரும் வாய்விட்டு பெருமையாய் சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவனாய் இருந்தான்.
யார் கண் பட்டதோ?
நிலைமை தலைகீழாக மாற துவங்கியது. தொழில் நட்டம் மற்றும் உடன் இருந்தவரின் துரோகம் ஆகியவற்றால் ராஜேஷ் பணத்தை இழக்க வேண்டிய தருணம் உண்டானது.
கடன் வாங்க துவங்கினான். கடன் வாங்கி தொழிலில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய முயன்றான் ராஜேஷ்.கடன் அதிகமாக அதிகமாக அவனால் சமாளிக்க முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள், அவனை துரத்த, அவனால் தப்பிக்க வழி இன்றி மாட்டி கொண்டான். ஒருகட்டத்தில் தன் தந்தை கட்டிய வீட்டை விற்க வேண்டிய சூழல் வந்து விட்டது.
‘ராஜேஷை நல்லவன்’ என்று கூறிய வாய் எல்லாம் தற்போது வசை பாட துவங்கியது.
ராஜேஷை கண்டு சொந்த பந்தங்கள் பயந்து விலக ஆரம்பித்தனர். ‘நம்மிடம் பணம் கேட்டு விடுவானோ?’ என்று பயந்து விலகினார்.
ராஜேஷ் அப்பா சுந்தரம் – அம்மா மீனாட்சி மட்டும் தன் பிள்ளைக்கு ஆதரவு தந்தனர் கண்ணீருடன்.
மறுநாள் காலையில் வீட்டை விற்க ஆட்களை வர சொல்லி இருந்தார் அப்பா சுந்தரம்.
அதனால் மனம் உடைந்து குடித்து விட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தான் ராஜேஷ்.
அப்பா – அம்மாவை பார்த்து கண் கலங்கினான் ராஜேஷ்.
“என்னால தான அப்பா எல்லாம். உன் கனவு இந்த வீடு. இந்த வீட்டை கட்டும் போது எவளோ ஆசை ஆசைய கட்டுன. அந்த வீட்டை என்னால பராமரிக்க கூட முடியல.
என்னால இப்போ வீட்டை விக்கிற நிலைமைக்கு வந்துடோம். என்னை மன்னிச்சிருங்க அப்பா! “ என்று கதறி அழுதபடி , அப்பாவின் காலில் விழுந்தான் ராஜேஷ்.
“கிறுக்கு பயலே எந்திரிடா!. எ
னக்கு நீ ரொம்ப முக்கியம்டா.
பண கஷ்டம் கொஞ்ச நாள் தான் கஷ்டமா இருக்கும். அதுல இருந்து வெளியில் வந்திருவ.
உன் மேல முழு நம்பிக்கை இருக்கு. இப்படி மனசு ஒடஞ்சி போகாத. நீ நல்லவன், நிச்சயமா தோத்து போகமாட்ட!”என்று அம்மா மீனாட்சி கூறினாள்.
“ஆமாடா ராஜேஷ்!,
ஊரு பேசுறத காதுல வாங்காத.
அம்மா அப்பா உன் மேல முழு நம்பிக்கை வச்சிருக்கோம்.
நீ நல்லா மீண்டும் பழைய மாதிரி வருவ. இப்போ உன் கஷ்டத்திற்கு நான் உதவி பண்றேன்.
என் பெயர்ல இருக்கிற வீட்டை வித்து காசு தாரேன். கடனை அடைச்சுட்டு , தொழில் நல்ல விதமா ஆரம்பித்து, பழைய ராஜேஷா நீ வா, எனக்கு அது போதும்.
எனக்கு உன்னைவிட வேற காசு, சொத்து இதெல்லாம் தேவை இல்லை.
இரண்டு வருசத்தில நல்ல நிலைமைக்கு வரணும். உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு புது வீடு வாங்கி அங்க குடி போவோம்.
கவலைபடாத! அப்பா – அம்மா ரெண்டு பேரும் உன்கூட துணையா இருப்போம். நான் இருக்கேன்பா , கவலைபடாத! ஏதும்னா கேளு எங்களால முடிந்த வரை உதவி செய்வோம்” என்று அப்பா சுந்தரம் கூறியது ராஜேஷ்க்கு ஆறுதலாய் இருந்தது.
ராஜேஷ் பண கஷ்டத்தில் இருந்து மீண்டு வர கொஞ்ச காலம் தான் ஆகும். அதற்குள் அவனை சுற்றி இருப்பவர்கள் தோற்று போகும் அளவிற்கு பேசி விடுவார்கள்.
ராஜேஷ் விடா முயற்சியுடன் நகர்கிறான்; அப்பா – அம்மாவின் ஆதரவோடு. ராஜேஷ் மீண்டும் வெல்வான் நிச்சயமாக!

மணிராம் கார்த்திக்
மதுரை
கைபேசி: 9842901104
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!