பழக்கங்கள் மனிதனுக்கு அடிமையாக வேண்டும் என்பது போய்,
மனிதன் பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டான்.
நல்லதோ, கெட்டதோ – அடிமை என்றால் அடிமை தான்!
நான் மட்டும் விதிவிலக்கா?
ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடும்
மனிதர்களின் வரிசையில் நானும் தான்!
‘பொறுப்பார் பூமி ஆள்வார்’ என்பர் சிலர்.
‘பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு’ என்பர் பலர்.
பூமியை ஆள்கிறேனோ இல்லையோ,
எல்லை கடந்தும் பொறுமையைக் கடைப்பிடிக்கும்
குணம், பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை.
பணிபுரியும் இடமாகட்டும்
வெளியே பொது இடமாகட்டும்
வீட்டிலாகட்டும்
கிண்டலோ, கேலியோ
குத்தலோ, குதர்க்கமோ
ஏச்சோ, பேச்சோ
சுட்டிக் காட்டுவதென்னவோ நம்மைத்தான்
எனத் தெரிந்தும்,
முழுமையாக அறிந்தும்
‘சகிப்புத் தன்மை’ மீதுள்ள தீராத காதல் குறைவதில்லை!
‘தன்மானம்’ சில சமயம் குறுக்கிட்டுத் தன் பங்கிற்குப்
‘பொறுமை’யைக் கேலி செய்யும்!
‘சகிப்புத் தன்மை’யைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கும்!
இறுதியில் வெல்வது?
இந்தப் பாழாய்ப் போன பொறுமையும் சகிப்புத் தன்மையும் தான்.
சுதந்திரத்திற்குப் புலம்பும் என்னை
என் ஆன்மாவின் குரல்
தட்டியெழுப்பி விழிப்புணர்ச்சியைத் தூண்ட
கூர்ந்து கேட்கிறேன்…
உள் மனம் கூறுகிறது!
‘பொறு! அமைதியாக இரு!!
கொஞ்ச காலம் சகித்துக் கொள்!!’
பொறுமையும், சகிப்புத் தன்மையும் என்னை மறுபடியும்
விலங்கிட்டு அழைத்துச் செல்கின்றன..!
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998