நான் சிறுத்தை பேசுகிறேன்

என் பெயர் பத்மநாதன் (சிறுத்தை).

நான் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், என் வாழ்க்கையின் இறுதி தருணங்களில், என் கடைசி மூச்சை நிறுத்தும் வேளையிலாவது என் மனதின் பாரத்தைக் கூற எண்ணியே பேசுகிறேன்…

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சியில் வனவராகப் பணி புரிந்து வரும் திரு.ப.ராஜன் அவர்கள் ஆசிரியராக அமைய‌,

அவரின் நண்பர் செ.செங்கதிர் செல்வன் அவர்கள் கட்டுரைத் தொகுப்பாளராகச் செயல்பட‌,

பத்மநாதன் என்ற சிறுத்தையாகிய நான், என் வாழ்க்கை வரலாறைக் கூறப் போகிறேன்; என்னுடன் வாருங்கள்.

 

பத்மநாதன்; இப்பெயர் என்னைத் தத்தெடுத்த சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் அன்புள்ளம் கொண்ட அதிகாரிகளால் அங்கீகாரத்துடன் சூட்டப்பட்ட, எனக்கும் மிகப்பிடித்த பெயர்.

வால்பாறை நான் பிறந்த தாய்மண்.

அங்கே ஒருநாள் எங்கள் பூனை இனமான அண்ணார் புலிக்கும் எனக்கும், எங்கள் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், அண்ணாரால் தாங்கிக்கொள்ள இயலாமல், அவருக்கு என்மேல் பகையுணர்வு வந்தது.

அவருடைய பலத்திற்கு முன் நான் எம்மாத்திரம்?

உங்களுக்கே தெரியும்; நான் பாய்ந்து ஓடுவதில் வல்லவனானலும், அவர் பதுங்கி தாக்குவதில் வல்லவர்.

எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட சண்டையில் என்னை தாக்க ஆரம்பித்தார். நான் தாக்க முயற்சிகள் செய்தும், அவர் பலத்திற்கு முன் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அவர் என் இடுப்புப் பகுதியில், தன் முழுபலத்தையும் பயன்படுத்தி என்னைக் கடித்துத் தாக்கிவிட்டார்.

அய்யோ‍! வலியால் துடிதுடித்துப் போனேன். இன்று நினைத்தாலும் மனம் பதைக்கிறது.

 

நானே எங்கள் இரை விலங்குகளை ‘வேண்டாம்; விட்டு விடு’ எனக் கதறினாலும், விடாமல் விரட்டிப் பிடித்து உணவாக்கிக் கொள்வேன்.

ஆனால் இன்றோ! தப்பித்தால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓட முயன்றேன்.

ஆனால் என்மீது ஏற்பட்ட காயத்தின் வலி தலைக்கேறி என்னை தரைக்குத் தள்ளியது. ஒரு எட்டுக் கூட நகர முடியவில்லை.

அது ஒரு தேயிலை தோட்டப் பகுதி வேறு…

தேயிலைச் செடிகள் நேர்க்கோடாக வளர்த்திருப்பதால், ஒரே நேர்க்கோட்டில் மட்டுமே நகரவும் முடிந்தது.

என் உடல் பலத்தை பயன்படுத்தி ஏதோ ஒரு திசையில் நகர ஆரம்பித்தேன். ஒன்றிரண்டு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். நினைவில் வர மறுக்கிறது.

குடிக்கத் தண்ணீரோ, உண்ண உணவோ ஏதுமில்லை. மனதிற்குள் பயம் தொற்றிக் கொண்டது. என் வாழ்க்கை இத்தோடு முடிந்தது. மண்ணோடு மண்ணாகப் போகிறேன் என மனம் பலவாறு சிந்திக்கத் தொடங்கி விட்டது.

மெல்ல மெல்ல நகர்ந்து சென்ற வண்ணம் இருந்தேன். ஆனால் ஒருதுளிக்கூட எழுந்து நிற்க முடியவில்லை.

25/06/2014‍ ம் தேதி பகல் காலை சுமார் 10, 11 மணியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தேயிலைத் தோட்டத்தினுள்ளே நகர்ந்து வந்து கொண்டேயிருந்த நான், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் ‘தொபுக்கட்டீர்’ என பள்ளத்தில் சரிந்து விழுந்தேன்.

தாங்கமுடியாத வலியில் என் கதை முடிந்தது என்று தான் எண்ணிக்கொண்டேன்.

 

கண் திறந்து பார்த்தால் ஒரு கட்டிடத்தின் பின்புறமாக இருந்தேன்.

அங்கே பயன்படுத்த இயலாத இரும்பு தகரம் மற்றும் இதர பொருட்களை போட்டு வைத்திருந்தார்கள். நானும் அதனிடையில் படுத்துக் கொண்டேன்.

கட்டிடத்தினுள் இருந்தவர்கள் ஓடி வந்து பார்க்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் நான் அந்த தகரத்திற்கு இடையில் படுத்திருந்ததால் என்னால் அவர்களை பார்க்க இயலவில்லை.

அவர்கள் அந்த தகரத்தை லேசாக நகர்த்தி, என்னை ஒரு கம்பு கொண்டு தொட்டும் தள்ளியும் பார்த்தார்கள். என் பார்வையில் நீங்கள் எல்லோரும் வேறு ஒரு உயிர் அவ்வளவே. கிடைத்தால் என் உடல் பசித் தீர்க்கப் போகும் உணவு என நினைத்துக் கொண்டேன்.

இருந்தாலும் அவர்களால் மேலும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வேறு. நான் அவர்களைப் பார்த்து உறுமிக்கொண்டு ஒரு பார்வை பார்த்தேன். அவர்கள் என்னைக் கண்டு பயப்படுவதை உணர்ந்தேன்.

சரி, இனி எப்படி நான் உறைவிடத்திற்குள் செல்வேன். என்ன நடக்குமோ என்றவாறும், அவர்களை பார்த்து உறுமியவாறுமே படுத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து யார் யாரோ வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். ‘பளிச் பளிச்’ என புகைப்படம் எடுத்ததின் வெளிச்சம் வந்து வந்து போனது.

மாலை வரை யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை.

 

திடீரென என் உடல் மீது ஏதோ ஒன்று குத்தியதை உணர்ந்த வேளையில், கண்கள் மெல்ல மெல்ல மங்கலாகத் தொடங்கியது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

கண் விழித்த நேரம் இரும்புக் கூண்டுக்குள் அகப்பட்டிருந்தேன். என் பின்னங்கால் முதுகின் கீழ்புறத்தில் ஏற்பட்டிருந்த காயத்தின் மீது ஏதோ தடவியிருந்தார்கள்.

நான் பார்ப்பதை கவனித்த ஒருவர் என்னை நோக்கி ஒரு கம்பியினை நீட்ட, அதன் முனையில் கறித்துண்டு ஒன்றை சொருகி வைத்திருந்தார்கள்.

அதை அப்படியே கவ்விக் கொண்டு மென்று விழுங்க, அதனுள் ஏதோ மாத்திரையை வைத்திருந்தார்கள் என அப்போது தான் உணர்ந்தேன்.

இவர்கள் என்னை எத்தனை அக்கறையுடன் கவனிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் உணவுடன் மருந்தும், என் உடல் காயத்தை மஞ்சள் கலந்த நீரில் சுத்தம் செய்வதும், காயத்தில் களிம்பை தடவி விடுவதுமாக இருந்தார்கள்.

அவர்களையெல்லாம் என் பிறவி குணத்துடன் நான் உறுமியவாறு கடிக்க முற்படுவேன். ஆனால் கம்பி வலைக்குள் என்னை அடைத்து வைத்திருந்ததால் அவர்களை கடிக்க இயலவில்லை.

 

நான் எனக்கே உரிய குணத்துடன் நடந்து கொண்டாலும், என்னை எப்படியாவது உயிர் பிழைக்க வைத்து விடவேண்டும் என்று தினம் தினம் மருத்துவரும், எங்களையெல்லாம் பாதுகாக்கும் காவலர்களாகிய அனைவரும், மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் என்னை பார்த்துக் கொண்டது என் வாழ்வில் மறக்க இயலாத நாட்களாகும்.

என்னால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும், உண்ட உணவு கழிவாக வெளியே வரமாலும், என் உடல் மெலிந்து நான் பிழைப்பேனா என  பலரும் எண்ணும் நிலைக்கு வந்துவிட்டேன்.

நாட்கள் வாரங்கள் ஆகியது. என்னை பார்ப்பதற்காக பலரும் வந்து சென்ற வண்ணம் இருந்தார்கள்.

“ரொட்டிக்கடை மனித விலங்குகள் மோதல் தடுப்பு மையத்தில்” என்னை கவனித்த படி பணியாளர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள்.

அங்கே பணியிலிருந்த வேட்டைத் தடுப்பு காவலர் திரு.அபிநாராயணன் அவர்கள் எனக்கு மருந்தையும், உணவையும் கொடுப்பதும், நான் இருந்த கூண்டை பராமரிப்பதும், அத்துடன் என் தலை மீது மெதுவாக தொட்டுப் பார்ப்பதுமாக இருந்தார்.

சிறிது நாளில் கூண்டுக்குள் கையை விட்டு என் தலையை தடவிக் கொடுக்க ஆரம்பித்தார். அதனால் என் மனதிற்குள் ஒரு அன்யோன்யம் ஏற்படுவதை உணர்ந்தேன்.

அது எனக்கு மிகவும் பிடித்துப் போக ஆரம்பித்தது. என்னிடம் இருந்த முரட்டு குணம் சிறிது சிறிதாக மறைவதை கண்டேன்.

 

வாரங்கள் மாதங்கள் ஆன வேளை என் உடல் நலமும் சற்று தேர ஆரம்பித்து, எழுந்து நிற்க முயன்று பார்க்கிறேன். ஆனாலும் முடியவில்லை.

அவர்களும் என்னை எழுந்து நிற்க வைப்பதற்காக கூண்டினுள் குச்சியை விட்டு, அசைய வைத்துப் பார்த்தார்கள்.

எனக்கும் முன்பு போல நடக்க வேண்டும்; ஓட வேண்டும் என்று ஆசை தான்.  உடல் ஒத்துழைக்கவில்லையே. மீண்டும் ஒரு முறை மருத்துவர் வந்து என்னை பரிசோதித்துப் பார்த்தார்.

நல்ல மாற்றம் இருப்பதாக அருகிலிருந்த அலுவலர்களிடம் கூறியவாறு, எனக்கு உணவில் மாத்திரையை வைத்து ஊட்டிவிட கவ்விக் கொண்டேன்.  பின்பு அவரும் என் தலையை வருடி விட்டார்.

இப்படி எல்லோரும் என் மீது அன்பை பொழிந்த வண்ணம் இருந்தனர். எனக்கும் இவர்களுக்கும் ஏதோ முற்பிறவித் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

இவ்வுலகில் பிழைத்திருப்பேனா என்பதே கேள்விக் குறியாய் இருந்த எனக்கு அமைந்த வாழ்வை, இம்மானிடர்கள் மூலம் கிடைத்த‌ வரமாகக் கருதுகிறேன்.

 

வாரங்கள் மாதங்கள் ஆனது. என் மீது கருணைக் கொண்ட அத்தனை பேரின் வேண்டுதலாலும், அன்பாலும் மெல்ல மெல்ல என் பின்னங்கால்களை ஊன்றி எழத் தொடங்கினேன்.

ஆனால் சரியாக நிற்க இயலவில்லை. அவர்களும் என்னை விடுவதாக இல்லை. நான் காட்டில் இருந்த காலம் வரை என்னை யாரும் நெருங்கியதில்லை. இன்றோ என்னை விட்டு யாரும் பிரிந்ததில்லை.

என்னை பார்க்க வருகின்றவர்கள் எல்லாம் இப்போது என்னை,

“இவனை காட்டிற்குள் விடுவார்களா?

இல்லை உயிரியல் பூங்காவில் கொண்டு விடுவார்களா?”

என கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

“இவனை காட்டில் விட்டால் வேட்டையாட முடியுமா?

எப்படி உணவு உண்ணுவான்?”

என பலவாறு கேள்வி கேட்டபடியே செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.

எனக்கும் இவர்களுக்குள் கேள்வி கேட்டபடி செல்வதால் மனதிற்குள் சந்தேகம் வராமல் இருக்கவில்லை. யார் யாரோ அங்கே கொண்டு செல்வார்கள்; இங்கே விட்டு விடுவார்கள் என்றவாறு வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

என் உயிரை காப்பாற்ற எவ்வளவு பேர் உழைத்தார்கள் என்றெண்ணும் போது, ஒரு நொடி கண் கலங்கித்தான் போகிறது.

நான் அவர்களின் அன்பு வலையில் சிறைபட்டு 51 நாட்கள் ஆகிவிட்டது. நானும் எழுந்து கூண்டிற்குள்ளே நடக்க முயன்று வட்டமடித்தபடி இருந்தேன்.

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. அவர்கள் மகிழ்வுக்கு காரணம் நான் நல்ல முறையில் குணமடைந்தது. எனக்கும் நான் பிழைத்துக் கொண்டேன் என்ற மகிழ்ச்சி.

ஆனால் இன்றோடு இங்கே இருப்பது நிறைவு பெறப் போகிறது என்பதை, எல்லோரும் என்னை வேறிடத்திற்குக் கொண்டு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்ததில் உணர்ந்தேன்.

 

இனி யார் இது போல் கவனித்துக் கொள்வார்கள்?

எங்கே செல்லப் போகிறேன்?

என்ற மனக் கலக்கத்தோடு அன்றைய பொழுது விடிந்தது.

அந்த நாள், இந்த நாடு அந்நிய நாட்டின் பிடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரக் காற்றை சுவாசித்த நாளான, ஆகஸ்ட் மாதம் 15ம் நாளாக அமைந்தது.

ஆம். 2014‍ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி,  இந்த இரும்பு சிறையிலிருந்து வெளியே செல்லப் பிறந்த பொன்னாளாக அமைந்தது.

என்னை வழியனுப்பி வைப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மதிப்பிற்குரிய திரு.ராஜிவ் கே.ஷ்ரீவத்சவா, இ.வ.ப., அய்யா அவர்கள் தலைமையில்,

மதிப்பிற்குரிய திரு. அசோகன், துணை இயக்குநர் அவர்களும்,

இந்த அளவிற்கு நலம் பெற உருதுணையாக இருந்த மதிப்பிற்குரிய திரு.மனோகரன், வனக்கால்நடை மருத்துவர் அவர்களும்,

எங்கள் வால்பாறை வனச்சரக அலுவலராக இருந்து அத்தனை கனிவோடு கண்காணித்த திரு.கிருஷ்ணசாமி அவர்களும்,

இந்த மனித வனவிலங்கு மோதல் மீட்பு மையத்தின் வனவராக இருந்த திரு.முனியாண்டி வனவர் அவர்களும்,

என்னை கொண்டு செல்வதற்காக வந்திருந்த திரு.ராஜன், வனவர் அவர்களும்

மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் திரு.மாரிமுத்து அவரகளும்,

என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு மையத்திலேயே இருந்த அனைத்து பணியாளர்களும்,

சாலையோரத்தில் எங்கள் வாகனத்தில் என்னை ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.

இங்கே என்னுடனேயே தங்கியிருந்த அபி நாராயணன், ரஞ்சித் குமார், சக்திவேல், விக்னேஷ், வசந்த், பார்த்திபன், ஆனந்த், சதீ்ஷ் மற்றும் பலர் என் வாழ் நாளில் மறக்க முடியாத நபர்களாகும்.

 

என்னை கூண்டொடு ஈச்சர் (6 சக்கர வாகனம்) வாகனத்தில் ஏற்ற ஆரம்பித்தார்கள். நானோ கூண்டிற்குள்ளேயே அங்குமிங்கும் சுற்ற ஆரம்பித்தேன்.

 

 

என் கூண்டைச் சுற்றிலும் பசுந்தழைகளால் மூடி வைத்திருந்தபடியால், வெளியிலிருந்து யாராலும் பார்க்க இயலவில்லை.

ஆனாலும் பொது மக்களும் அங்கு இருந்த நாட்களில் என் நிலைக் குறித்து செய்தியாக வெளியிட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சி அன்பர்களும், அன்றும் நான் பயணமாக இருப்பதை புகைப்படம் மற்றும் காணொலி காட்சியாக படம்பிடித்தபடி இருந்ததும் மறக்க இயலாத நினைவுகளாய் இன்றும் கண்முன்னே காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது.

வாகனத்தில் ஏற்றிய என் கூண்டை எங்கும் அசையாத வண்ணம் இறுகக் கட்டி விட்டார்கள்.

வாகனத்தின் அருகில் கள இயக்குநர் அவர்கள் என்னை காப்பாற்றிய விபரங்களை பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு செய்தியாக பேட்டியளித்து, நான் இருந்த வாகனத்தை கொடி அசைத்து வழியனுப்பினார்.

 

வாகனம் மெல்ல நகரத் தொடங்கியது. 

நான் சுதந்திரமாக வாழ்ந்த இடத்தை விட்டு எங்கோ செல்கிறேன் என்று மட்டும் புரிந்தது.

நாங்கள் இந்த காடுகளில் வாழவில்லை என்றால் எப்படி உங்கள் ஊரும் நாடும் செழிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

எங்கள் பாதம் பட்ட வனம் தான், நீங்கள் அருந்த நீரைச் சுரந்து, அருவியாய் ஆர்ப்பரித்து ஆறாகி, உங்கள் ஊரெல்லாம் சோறாக்கக் கொடுக்கிறது.

அப்படிப்பட்ட மண்ணில், நான் சுயமாக உணவைத் தேடி உண்டு வாழ என்னால் முடியாது என்ற நிலையில் தான், பயணத்தை ஏற்று அவர்களுடன் பயணிக்க ஆரம்பித்திருந்தேன்.

பல மணி நேரங்களாக பயணித்த வண்ணம் இருந்தது. என்னையும், கூண்டையும் கவனித்துக்கொள்ள அருகிலேயே மூன்று பேர் உடனிருந்தார்கள்.

வாகனம் சேலம் வழியாக வண்டலூர் செல்வதாக பேசிக்கொண்டு வந்தார்கள்.

எனக்கும் என் புதிய வாழ்க்கை சூழல் எப்படி இருக்கப் போகிறதோ என்ற அச்சம் கலந்த ஏக்கம்.

என்னை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற கவலையை தந்தது இந்த பயணம். நான்கு வழிச் சாலையில் பயணித்தபடி இருக்க மாலை மறைந்து, மேகம் தணிந்து, இரவு எட்டிப்பார்த்திருந்தது.

 

நள்ளிரவு நேரம்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தின் நுழைவாயில் நான் பயணித்த வாகனத்தை வரவேற்க, உள்ளே சென்று நின்ற நேரம் இரவு 2 மணியிருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னை வாகனத்திலேயே விட்டு அனைவரும் ஓய்வெடுக்க விடுதிக்கு சென்றுவிட்டார்கள். இரவு கரைந்து பகலானது.

16/08/2014  அன்று என் இந்த சிறிய கூண்டிலிருந்து வெளியே வரவேண்டி காத்திருந்த நேரம்.

இங்கிருந்த உதவி வனப்பாதுகாவலர் அவர்கள் என்னை இங்கே ஒப்படைக்கும் பொருட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட,  என்னை கவனித்துக் கொள்ளும் உதவியாளர்கள் நான் இருந்த கூண்டை வாகனத்திலிருந்து கீழிறக்கி வைத்தார்கள்.

அப்போது என் முன்னால் பெரிய அறையுடன் கூடிய கூண்டு இருந்தது. இனி சிறிது காலமோ, அதிக காலமோ தெரியவில்லை. ஆனால் இங்கு தான் வாழப் போகிறேன் என்று புரிந்தது.

ஆனால் என் மனம் கலங்கியதை யாராலும் உணரமுடியவில்லை. ஏனென்று உங்களுக்கே தெரியும்.

நாம் வாழ்ந்த இடத்தை விட்டு, நிரந்தரமாக வேறு இடம் செல்வதென்றால் எப்படி இருக்கும்?

நானும் அப்படித்தான் என் நிலை உணர்ந்து கவலையாக இருந்தேன்.

 

காலை சுமார் 10 மணியிருக்க, சிறுகூண்டை விடுத்து பெரிய கூண்டில் திறந்து விட, 52 நாட்கள் அடைபட்டுக் கிடந்த கூண்டிலிருந்து வேகமாக ஓடினேன்.

அப்போது என்னால் நடக்க முடிந்ததை கண்டு மகிழ்ச்சியாக மனம் தேறினேன். ஆனாலும் சிறிது தளர்ச்சியிருந்தை என் நடை உணர்த்தியது.

அங்கே இரண்டு, மூன்று அறைககளைக் கண்டதும், எல்லா அறைகளுக்குள்ளும் வேகமாக அங்குமிங்கும் சென்று வந்தேன்.

என்னைக் காப்பாற்றி இத்தனை நாளும் மருந்து, உணவு, கொடுத்தும், அன்பு பாசம், நட்பு என எல்லா குணங்களையும் புரியவைத்தும், இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்ல நின்றிருந்தவர்களை என் கண்கள் தேடின‌.

என் தலையை வருடிய கை எங்கே என்று பார்த்தபடி, அக்கையின் வருடல் மீண்டும் கிட்டாதா என்ற ஏக்கத்தினை சுமந்து கூண்டின் ஓரம் வந்தேன்.

அங்கே அபிநாராயணன் அவர்கள் நான் இருந்த கூண்டுக்குள் கைவிட்டு, நான் ஏக்கத்தோடிருப்பதை புரிந்து என் தலை வருடிவிட்டார்.

அந்த நொடி நான் அடைந்த வேதனையை, யாாிடம் எப்படி புரிய வைப்பேன் கூறுங்கள்.

எங்கள் இருவருக்குள் இருந்த அந்த அன்பின் வலிமையை, என்னை விட்டுச் செல்லக் காத்திருந்தவர்கள் கண்கள் சொல்லியது ஆயிரம் முறை…

அன்று பதிந்த அவர்களின் முகம் ஏனோ மீண்டும் காண முடியாமல் போனது…

எனினும் ஐந்து வருடங்கள் பலமுகங்கள் கண்டு வாழ்ந்தேன்…

 

இன்னும் சிறிது நேரத்தில் இறைவன் திருவடியை அடையப் போகிறேன்.

அதற்குமுன் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால்,

மனிதர்கள் நல்லவர்கள் என்பதை நான் என் வாழ்வில் உணர்ந்தேன்.

வனவிலங்குகள் அழிந்தால் காடு அழியும்.

காடு அழிந்தால் நாடு அழியும்.

எனவே வனவிலங்குகளைக் காப்பாற்றி, காட்டைக் காப்பாற்றி, நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு, எனக்கு மறுவாழ்வு தந்த நண்பர்களையும் மற்ற மனிதர்களையும் வணங்கி வேண்டி விடைபெறுகிறேன். 

நன்றி.

போய் வருகிறேன்!

இப்படிக்கு
பத்மநாதன் என்னும் சிறுத்தை

 

பலரின் மனம் கவர்ந்த பத்மநாதன் என்னும் சிறுத்தை 2019ம் ஆண்டு இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகு சென்றது.

 

இன்றோடு பணியின் அரவணைப்பில் ஆறாண்டுகளை நிறைவு செய்து, ஏழாம் ஆண்டில் பணி புரிகின்ற‌ எனக்கு, உங்களிடம் இந்த சிறுத்தையின் வாழ்க்கை வரலாற்றை கூற வாய்ப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வணக்கம்…

என்றும் இயற்கை பணியில்,

ப. ராஜன்
வனவர்
ஆனைமலை புலிகள் காப்பகம்
பொள்ளாச்சி வனச்சரகம்

 

 

4 Replies to “நான் சிறுத்தை பேசுகிறேன்”

  1. ஐந்தறிவு ஜீவனின் மன எண்ணங்களை ஆறறிவு மனித நடையில் எழுதியது,
    நம் கூட பயணிக்கும் சக நண்பர் (சிறுத்தை) நம்மிடம் பேசியது போல் மனம் நெகிழ்ந்து… அருமை…. வாழ்த்துக்கள் …

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.