குரு பிரசாந் எழுதிய குறுங்கவிதைகள்.
தூக்கம் மெல்லமான மரணத்தின் சாயல்…
அதிலும் உன்னோடு இருந்த நிமிடங்கள்
ஒரு நொடியில் பிரமையாவது கொடுஞ்சாவு!
பெரும் காதல்தோல்வியைத்
தாங்கிக் கொண்டிருப்பது நீயும் நானுமில்லை…
ஒரு பனித்துளியைப் பிரிந்த புல்லின் இதழ்!
யாவும் கைவிட்ட பின்பும் உயிர்த்திருக்கும்
அடம் தான் தூர்ந்த கிணற்றுக்குள்
வேர்பிடித்த இந்தச் செடிக்கும்!
ஒரு துக்கத்தின் ஆற்றாமையைச் சொல்லி
அழுபவரைப்பற்றிக் கொள்ளும்
கரங்கள் புனிதமானவை…
அங்கும் ஒரு மீட்பர் உயிர்த்தெழுகிறார்!
கூட்டைச் சேர்வதுதான் இலக்கென்று
சிறகடித்துக் கொண்டிருந்தது
ஒவ்வொரு பறவையும்…
எல்லாவற்றையும் கடந்து போகவிட்டு
அனாயாசமாகக் கூவிக் கொண்டிருந்தது
ஒரு குயில் மட்டும்!
இந்த நிலவு எங்கேயும் என்னுடன் வருகிறது
என்று நினைத்திருந்த வரைக்கும்
நான் நானாகத் தான் இருந்தேன்…
சிரிப்பை நிரந்தரமாகத் தருவதற்குச்
சிற்பியால் மட்டும் முடிகிறது
கடவுளுக்கும் சேர்த்தே!
ச.குரு பிரசாந்
மதுரை
கைபேசி: 9965288806
மின்னஞ்சல்: srguruprasandh111@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!