நான் என்பது நான் மட்டுமல்ல

நான் என்பது ஒன்றல்ல

நான் என்பது நான் மட்டுமல்ல; நான் என்பது நான் சார்ந்திருக்கின்ற பன்மையின் மொத்தம்.

நான் என்பது நான் மட்டும் தான் என்ற நினைப்பில் செய்கின்ற நல்ல அல்லது தீய செயல்கள் நாம் சார்ந்திருக்கின்ற பன்மையின் மொத்தத்தையும் தாக்கும்.

ஒரு வகுப்பில் நீ அமர்ந்திருக்கிறாய். ஆசிரியரின் அனுமதி பெற்று அந்த வகுப்பில் இருந்து வெளியே வருகிறாய்.

அனைத்து வகுப்புகளும் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. உங்கள் கல்லூரியின் முதல்வர் வலம் வருகிறார். அந்த நேரத்தில் உன்னைப் பார்க்கிறார்.

இந்த மாணவன் யார் என்று முதல்வர் கேட்கும் பொழுது, இந்த மாணவன் இந்த வகுப்பை சார்ந்தவன் என்று சொல்வார்கள்.

உனது பெயரோ நீ சம்பந்தப்பட்ட எதுவுமோ அங்கு பேசப்படுவதில்லை.

வகுப்பில் இருந்து வெளியே வந்தது நீ. ஆனால் அடையாளப் படுத்தப்பட்டது, நீ சார்ந்திருக்கின்ற வகுப்பு.

பேருந்துகள் பயணிக்கும் பிரதான சாலையில் சிவப்பு நிற சிக்னலில் வண்டி நின்று கொண்டிருக்கிறது. கடவுளுக்கு மாலை போட்ட ஒருவர் அந்த இடத்தை கடக்க முற்படுகிறார்.

கடக்க ஆரம்பிக்கும் பொழுது சிவப்பில் இருந்து பச்சை சிக்னலுக்கு மாறி விட்டது. இவர் அந்த சாலையை வேகமாக கடக்க முற்படுகின்ற போது அவசரமாக வந்த ஒருவரின் வண்டி அவர் மீது மோத முற்படுகிறது.

அவர் அதிரடியாக பிரேக் போட்டு, ஏன் சாமி! ரோட்ட பார்த்து போக மாட்டீங்களா! என்று திட்டிக் கொண்டே செல்வார்.

அதே சூழலில் மாலை போட்டவருக்குப் பதிலாக தொப்பி போட்ட ஒருவர் இருந்தால், “பாய்! ரோட்ட சரியா பாத்து போக மாட்டீங்களா?” என்று வண்டிக்காரர் திட்டுவார்.

நன்றாக யோசித்துப் பாருங்கள்.

தவறு செய்தது தனிப்பட்ட ஒருவர். ஆனால் அவரது பெயரை சொல்லி திட்டப்படுவதில்லை. அவர் சார்ந்து இருக்கின்ற அடையாளத்தை வைத்து திட்டப்படுகிறார்.

வகுப்பில் இருந்து வெளியே வந்தது நீ; அடையாளப் படுத்தப்படுவது உன் வகுப்பு.

நல்லது செய்தாலும் தீது செய்தாலும் உனது குடும்பத்தின் பெயரை சொல்லி நீ புகழப்படுவாய் அல்லது நிந்திக்கப்படுவாய்.

அதுபோல் உனது நல்ல செயலும் தீய செயலும் நீ சார்ந்த சமூகத்தை, மார்க்கத்தை உயர்வாக அல்லது தாழ்வாகக் காண்பிக்கும்.

எனவே நான் என்பது நான் மட்டுமல்ல; நான் என்பது நான் சார்ந்திருக்கின்ற குடும்பத்தின் மதத்தின் சமூகத்தின் தேசத்தின் மொத்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 9600094408