நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்ற பாடல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினாறாவது பாசுரம் ஆகும்.
நடைமுறை வாழ்வில் எங்கும் முறையறிந்து செல்ல வேண்டும் என்பதை இப்பாசுரம் விளக்குகிறது.
எத்தனை தெரிந்தவரானாலும் அவர் நிலைக்கு ஏற்றபடி உள்ள முறைகளை அனுசரித்தே அவரை அணுக வேண்டும்.
நாம் ஆலயம் சென்றாலும் கொடிமரம் தாண்டி துவார பாலகர்களின் அனுமதியினை மனத்தால் வேண்டி, பின் ஆண்டவனின் அருகில் செல்வதே வழக்கம்.
திருப்பாவை பாடல் 16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்
விளக்கம்
ஆயர்பாடியின் தலைவனான நந்தகோபரின் அரண்மனையை காவல் செய்பவரே, கொடி பறக்கின்றன தோரண வாயிலைக் காத்து நிற்பவரே, அழகிய அரண்மனைக் கதவுகளைத் திறந்து எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.
நாங்கள் ஆயர்பாடிச் சிறுமியர்கள். எங்களுக்கு பாவைநோன்பின் பலனைத் தருவதாக கண்ணன் வாக்களித்துள்ளான்.
அதனைப் பெறுவதற்காக நாங்கள் தூய்மையாய் அவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாட வந்துள்ளோம்.
ஆதலால் நீ உன் வாயினால் மறுப்பு சொல்லாமல் நிலையுடன் பொருந்தியுள்ள கதவை, உன் கைகளால் திறந்து வழிவிட வேண்டும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!