நாயன்மார்கள்

நாயன்மார்கள் வரலாறு வெளிவந்த கதை

நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள்; சிவத்தொண்டே உயிர்நாதம் என வாழ்ந்தவர்கள். அவர்கள் வரலாறு எவ்விதம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது என்று பார்ப்போம்.

திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருடைய பேரருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பியின் மூலமாக, இராசராசசோழன் தேவாரத் திருமுறைகள் தில்லைப் பொன்னம்பலத்தின் அருகே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் இலச்சினையுள்ள அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்ததை அறிந்தான்.

தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி, தேவார ஆசிரியர் மூவர் திரு உருவங்களுக்கும் வழிபாடு செய்து தில்லைத் திருவீதிகளில் எழுந்தருளச் செய்து, பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்த்த போது பெரும்பாலான ஏடுகள் செல்லரித்துக் கிடந்ததை கண்டு மனம் வருந்தினான் மன்னன்.

“இக்காலத்துக்கு வேண்டிய தேவாரப் பதிகங்களைத் தவிர மற்றவற்றை செல்லரிக்கச் செய்தோம்” என்ற அருள் வாக்கினால் மனம் தேறிய மன்னன், நம்பியாண்டார் நம்பியிடம் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை தொகுத்து தருமாறு வேண்டினான்.

நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும், மாணிக்க வாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எனும் இரு நூல்களை எட்டாம் திருமுறையாகவும் தொகுத்தார்.

திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் 28 மற்றும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பதிகம் ஆகிய 29 பதிகங்களை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரப் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும்  தொகுத்தார்.

திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் ஆகிய பிரபந்தங்களையும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய 89 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய 1400 பதிகங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்துக் கொடுத்தார்.

பின்னர் சேக்கிழார் பாடிய திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாக ஏற்கப்பட்டது.

 

நாயன்மார்கள் வரலாறு சொல்லும் பெரியபுராணம்

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில் விறன்மிண்டர் என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும் “புறகு” என்று ஒதுக்கினார்

அதனால் மனம் நொந்த சுந்தரருக்கு சிவபெருமான் அடியார் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுக்க, ஒவ்வொரு அடியாருக்கும் தான் அடியேன் எனக் கூறி “திருத்தொண்டத் தொகை” எனும் 11 பாடல்களைப் பாடி அருளினார்.

இத்திருத் தொண்டத் தொகைக்கு திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் பொருள் கூற, அப்பிள்ளையாரிடம் இளமையிலேயே வேத ஆகமங்களைக் கேட்டிருந்த நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் திருத்தொண்டர் திருவந்தாதியை (தொகையடியார் ஒன்பதின்மர், தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய 72 சிவனடியார் வரலாற்றையும்) 89 இனிய பாடல்களில் அருளி உள்ளார்.

பின்பு அநபாய சோழ சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அருண்மொழித் தேவர் என்ற சேக்கிழார் பெருமான் மன்னனுடைய வேண்டுகோளுக்கிணங்க “திருத்தொண்டர் புராணம்” பாடி தில்லையில் தில்லைவாழ் அந்தணர்கள் முன்பு சித்திரை மாதம் திருவாதிரை நாளில் அரங்கேற்றினார்.

திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் 63 நாயன்மார்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். எனவே இது பெரியபுராணம் எனப் பெயர் பெற்று 12ம் திருமுறையாகத் திகழ்கிறது.

இந்த அறுபத்து மூவர் ஆகிய தனியடியார்களையும், மாணிக்க வாசகரையும், ஒன்பது தொகையடியார்களையும், சேக்கிழார் பெருமானையும் அவரவர்கள் குரு பூஜை விழாவிலே நினைத்து போற்றி வணங்கினால் நமக்கும், நம் குடும்பத்தார்க்கும் நன்மை கிட்டும்.

 

63 நாயன்மார் 9 தொகையடியார்

திருநீறு – ஒரு பார்வை

சிவாலயத்தில் வழிபாடு செய்வது எப்படி?


Comments

“நாயன்மார்கள் வரலாறு வெளிவந்த கதை” மீது ஒரு மறுமொழி