என்னுடைய செல்ல நாய் வீட்டிற்கு வெளியே வந்த என் மகளை வேகமாகச் சென்று மூக்கால் உரசியது. உடனே என் மகள் “நாயோட மூக்கில இருந்த ஈரம் கைல ஒட்டிருச்சு” என்று அழுதாள். நானும் நாயின் மூக்கு ஈரமாக இருப்பதை அடிக்கடி கவனித்திருக்கிறேன்.
கால்நடை மருத்துவரிடம் நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்? என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் காரணங்கள் பல கூறினார். அதனையே உங்களுக்கு கட்டுரையாகக் கொடுத்துள்ளேன்.
நாய் என்றவுடன் அதனுடைய நன்றியுணர்வும், மோப்ப சக்தியும் நம்முடைய நினைவிற்கு வரும். நாயின் அபார மோப்ப சக்தியினால்தான் அது துப்பறியும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது.
நாய்க்கு முகர்தல் மிகமுக்கியமானது. எனவேதான் நாய் குடும்ப விலங்குகளால் மூக்கு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
சூழ்நிலையின் தன்மையை உணர்ந்து கொள்வதற்கு மனிதன் ஐம்புலன்களில் கண்ணையே அதிகம் நம்பியிருக்கிறான். மனித மூளையும் காட்சி தகவல்களைப் புரிந்து கொள்வதற்கே அதிக நேரம் செலவிடுகிறது.
ஆனால் நாயோ சூழ்நிலையை உணர்ந்து கொள்ள கண்ணைவிட மூக்கையே நம்பியிருக்கிறது. நாய் மூளையின் புரிதல், மனித மூளையின் புரிதலுக்கு நேர்மாறானது.
அதாவது நாயின் மூளையானது காட்சி தகவல்களை புரிந்து கொள்வதை விட, வாசனை உணர்வினைப் புரிந்து கொள்வதையே மையமாகக் கொண்டுள்ளது. எனவேதான் நாய் எதனையும் முகர்ந்து கொண்டே இருக்கிறது.
நாயின் நாசிக்குழியில் 220 மில்லியன் உணர்ச்சி ஏற்பிகள் (Sensory Receptor) உள்ளன. மனித நாசிக்குழியில் 5 மில்லியன் உணர்ச்சி ஏற்பிகள் மட்டுமே உள்ளன.
நாயின் மூளையில் நாற்றங்களைப் பகுப்பாய்வு செய்வதற்காக உள்ள பகுதியின் அளவானது, மனிதமூளையில் உள்ள பகுதியினைப் போன்று நாற்பது மடங்கு பெரியது.
இதனால்தான் நாயின் மோப்பச்சக்தியானது, மனித மோப்பசக்தியைவிட 1,000 முதல் 10,000 மடங்கு அதிகமாக உள்ளது.
நாயின் அபார மோப்பசக்திக்கு மற்றொரு காரணம் வாசனை உணர்வை உருவாக்கும் மற்றொரு உறுப்பான ஜேக்கப்சனின் ஆகும்.
இவ்வுறுப்பு நாயின் நாசிக் குழிக்குள் ஆரம்பமாகி வெட்டும் பற்களுக்கு பின்னால் வாயின் மேற்பகுதியில் முடிகிறது. இது முகரும் பொருட்களின் வேதியியல் தன்மைகளை அறிந்து கொள்வதோடு நாயின் இரண்டாவது மூக்காகவும் செயல்படுகிறது.
நாயின் மோப்ப சக்திக்கும், அதனுடைய மூக்கு ஈரமாக இருப்பதற்கும் மிகப்பெரிய சம்பந்தம் உள்ளது. ஏனெனில் வாசனைத் துகள்கள் ஈரமான மேற்பரப்பில் எளிதாக ஒட்டிக் கொள்கின்றன.
நாயின் மூக்கு எப்படி ஈரமாகிறது?
நாய் மூக்கில் உள்ள கோழை, நக்குதல் மற்றும் ஈரமான பொருட்களை முகர்தல் ஆகியவற்றின் மூலம் நாயின் மூக்கு ஈரமாகிறது.
நாய் மூக்கின் உட்புறத்தில் இருக்கும் ஒருவித சிறப்பு சுரப்பி கோழையை உருவாக்குகிறது. இக்கோழையானது நாசித் துளையை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கிறது.
மேலும் இக்கோழையின் மெல்லிய அடுக்கு நாசியுடன் ஒட்டிக்கொண்டு, வாசனை ரசாயனங்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துவதோடு, நாயின் வாசனை முகர்திறனையும் அதிகரிக்கிறது.
நாய்கள் தங்களின் நீளமான நாக்கினால் மூக்கினை அடிக்கடி நக்குகின்றன. இதனால் மூக்கு கோழையில் ஒட்டியுள்ள வாசனை துகள்கள் வாய் பகுதியில் அமைந்துள்ள ஜேக்கப்சனின் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, இரண்டாவது மூக்கின் செயல்பாட்டை எளிதாக்கி வாசனையை உணரும் உணர்வு அதிகரிக்கிறது.
ஈரப்பதம் மோப்ப சக்திக்கு முக்கியமானதால், நாய் அடிக்கடி மூக்கினை நக்கி ஈரமாக்குகிறது.
மேலும் நாய் எல்லா இடங்களிலும் சென்று முகரும்போது அதனுடைய ஈரமான மூக்கில் துகள்கள் ஒட்டிக் கொள்கின்றன. நாய் மூக்கினை அடிக்கடி நக்கும்போது மூக்கில் ஒட்டியுள்ள துகள்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.
நாயானது ஈரமான புற்கள், செடிகள் உள்ளிட்ட தாவரங்களை முகரும் போது தாவரங்களில் உள்ள நீரால் நாயின் மூக்கு ஈரப்படுத்தப்படுகிறது.
நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு அதனுடைய வாசனை அறியும் திறனை அதிகரித்து சூழலை புரிந்து கொண்டு உயிர் வாழ்வது என்பதே விடை ஆகும்.
மறுமொழி இடவும்