நாயுருவி

நாயுருவி – மருத்துவ பயன்கள்

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்.

நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கச் செய்யும்; ஆரோக்கியம் தரும்; முறைக் காய்ச்சலைத் தடுக்கும்; கழிச்சல், வெள்ளைப்படுதல், அதிக வியர்வை போன்றவற்றைக் குணமாக்கும்.

நாயுருவி வேர் கருப்பையைச் சுருக்கும்; வாந்தியை உண்டாக்கும்; கருவைக் கலைக்கும்; முக வசீகரத்தை அதிகமாக்கும்.

நாயுருவி அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய சிறுசெடி. நாயுருவி இலைகள் முட்டை வடிவமானவை, எதிரடுக்கிலே அமைந்தவை. நாயுருவி தண்டுகள் பட்டையானவை, நாயுருவி மலர்க்கொத்துகள் நீண்டவை. நுனியிலோ கிளைகளிலோ காணப்படும். மலர்கள் சிறியவை. இருபால் தன்மையானவை.

நாயுருவி விதைகள், அவற்றைச் சூழ்ந்துள்ள சிறு முட்களுடன் எளிதில் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மையானது. தமிழகமெங்கும், தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஈரப்பாங்கான பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி ஆகிய மாற்றுப் பெயர்களும் நாயுருவி தாவரத்திற்கு உண்டு. நாயுருவி முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. நாயுருவியை எரித்தால் கிடைக்கும் சாம்பலில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது.

மலைப்பகுதியில் வளரும் செடிகள் சிவப்பான தண்டுகளுடன், சிவந்த இலைகளுடன் காணப்படும். இவற்றுக்கு செந்நாயுருவி அல்லது படருருக்கி என்கிற பெயர் உண்டு.

நாயுருவி வேரை நீரில் கழுவி, சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அதனால் (வேப்பங்குச்சியால் பல்துலக்குவது போல) பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.

நாயுருவி வேர் மற்றும் தண்டுகளை நிழலில் காயவைத்து, இடித்துத் தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தேவையான அளவு வெந்நீரில் குழப்பி, பசையாக்கி, முகத்தில் பூசிவர முகம் பொலிவடையும்.

10 கிராம் நாயுருவி இலைகளை அரைத்து, பசையாக்கி, 10 மி.லி. நல்லெண்ணெயுடன் கலந்து குழப்பி சாப்பிட வேண்டும். காலை, மாலை வேளைகளில் 10 நாட்கள் வரை சாப்பிட இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி வேர்த்தூள் ½ முதல் 1 கிராம் வரை வெந்நீரில் சாப்பிட்டு வர உடல் பலமடையும்.

நாயுருவி வேர் அல்லது இலையை அரைத்து பசையாக்கி, மேல் பூச்சாகப் பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.