நாய்களின் நட்பு – சிறுகதை

நாய்களின் நட்பு கதை போலி நட்பு பற்றிப் பேசுகிறது.

சில மனிதர்கள் மற்றவர்களுடன் போலியாக நட்பு கொள்வர். அவர்களை இனம் கண்டு ஒதுங்குவது நல்லது.

இவ்வகையான மனிதர்களின் நட்பானது இக்கதையில் வரும் நாய்களின் நட்பு போன்றது. வாருங்கள் கதை பற்றிப் பார்ப்போம்.

வாமி, பாமி என்ற இரண்டு நாய்கள் ஒரே தெருவில் வசித்து வந்தன. ஒரு நாள் அவைகள் இரவு உணவு உண்டு விட்டு தெரு முனையில் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன.

ஒன்றை ஒன்று நலம் விசாரித்துக் கொண்டன. பின்னர் மிகவும் நட்புடன் பேசிக் கொண்டிருந்தன.

வாமி பாமியிடம் “என்னுடைய எஜமானர் மிகவும் நல்லவர். எனக்கு வயிராற உணவு தருவார் ஆனால் சில சமயங்களில் என்னை அடித்து விரட்டுவார்.” என்றது.

அதற்கு பாமி வாமியிடம் “நீ சொல்வதும் சரிதான். எங்கள் எஜமானர் வீட்டில் வேலை செய்யும் சமையல்காரர்களில் சோமு தாராள குணம் கொண்டவர்.

எஜமானர்கள் உண்டது போக மீதிருக்கும் உணவு வகைகள் முழுவதையும் எனக்கே அளிப்பார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் என்னைக் கண்டாலே விரட்டி விடுவர்” என்றது.

“நம்மைப் போன்ற நாய்களின் வாழ்க்கையே மிகவும் கடினம்தான். சிலநேரங்களில் என்னடா வாழ்க்கை என்று அலுப்புத் தட்டுகிறது.” என்றது வாமி.

“நான் மட்டும்தான் கஷ்டப்படுகிறேன் என்று நினைத்தேன். நீயும் அப்படித்தான் போல.” என்றது பாமி.

“நம்முடைய சிநேகிதம் போல வருமா? நாம் இருவரும் ஒரே தெருவில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறோம். நமக்குள் சண்டை என்றால் அது நன்றாக இருக்குமா?

நாம் என்றைக்கும் இப்படியே நெருங்கிய நண்பர்களாக இருப்போம். நாம் என்னென்றும் நட்புடன் இருக்க உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொள்வோம். வா” என்றது வாமி.

“நீ சொல்வதும் சரிதான். அவசியமான சூழ்நிலைகளில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வோம்.

கிடைப்பவற்றை நமக்குள் பங்குபோட்டுக் கொண்டு, சண்டை சச்சரவு இல்லாமலும், பொறாமை எண்ணம் இல்லாமலும் வாழ்க்கையை நடத்துவோம்” என்றது பாமி.

“நீ சரியாகச் சொன்னாய். நமக்குள் சண்டையும் கிடையாது. சச்சரவும் கிடையாது. நாம் இருவரும் சகோதரர்கள்” என்றது வாமி.

அந்நேரத்தில் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியில் சாப்பிட்ட இலையை ஒருவர் போட்டார். இரண்டு நாய்களும் பாய்ந்து சென்றன.

எச்சில் இலையில் இருந்த ஒரு எலும்புத்துண்டை கண்டதும் இரண்டு நாய்களும் போட்டி போட்டுக் கொண்டு எலும்பை நோக்கி பாய்ந்தன.

ஒன்றை ஒன்றை ஒன்று பார்த்து உறுமின; குரைத்தன; கடித்துக் குதறின.

சற்று நேரத்திற்கு முன் தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இரண்டு நாய்களும் மறந்து விட்டன. சூழ்நிலை சற்று மாறியதும், அவர்களின் நட்பு மாறிப் போனது.

ஆதலால் நாம் மற்றவர்களிடம் பழக்கும் போது நாய்களின் நட்பு போன்று பழகக் கூடாது.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: