நாரைக்கு முக்தி கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னிடம் அன்பு செலுத்தி மீனினை உண்ணாமல் இருந்த நாரைக்கு முக்தி கொடுத்ததை பற்றிக் கூறுகிறது.
மதுரையின் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனதற்கான காரணம் பற்றி இப்படலம் எடுத்து உரைக்கிறது.
நாரைக்கு ஏற்பட்ட மனமாற்றம், சொக்கநாதரை நாரை வழிபடுதல், இறைவனார் நாரைக்கு கொடுத்த வரம், பொற்றாமரை குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
நாரைக்கு முக்தி கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி எட்டாவது படலமாக அமைந்துள்ளது.
நாரையின் மனமாற்றம்
பாண்டிய நாட்டில் வைகை ஆற்றிற்கு தெற்கே அழகிய தாமரை மலர்களைக் கொண்ட தடாகம் (குளம்) ஒன்று இருந்தது. அக்குளத்தில் இருந்த மீன்களை பிடித்து உண்டு நாரை ஒன்று வாழ்ந்து வந்தது.
ஒரு சமயம் மழை இல்லாமல் போனதால் தடாகத்தில் இருந்த தண்ணீர் வற்றி விட்டது. எனவே அத்தடாகத்தில் மீன்கள் இல்லாமல் போனது. இதனால் நாரை உணவில்லாமல் தவித்தது. எனவே அது காட்டினை நோக்கிப் பறந்தது.
அக்காட்டில் சிவனடியார்களான முனிவர்கள் வாழ்ந்து வந்தனர். முனிவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தடாகம் ஒன்று இருப்பதை நாரை கண்டது. அத்தடாகத்தைச் சுற்றிலும் படித்துறை அமைந்திருந்தது.
அத்தடாகத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்திருந்தன. அத்தடாகத்தினை அச்சோதீர்த்தம் என்று அழைப்பர். இதுவே தான் தங்குவதற்கு சிறந்த இடம் என்று எண்ணிய நாரை அங்கேயே தங்கியது.
முனிவர்கள் அத்தீர்த்தத்தில் நீராடும்போது மீன்கள் அவர்களின் மீதும், அவர்களின் சடையின் மீதும் புரண்டன. அதனைக் கண்ட நாரை ‘இம்முனிவர்களின் மேனியில் தவழும் இம்மீன்களை உணவாகக் கொள்ளுதல் கூடாது’ என்று எண்ணியது.
தீர்த்தத்தில் நீராடிய முனிவர்களிடம் சத்தியன் என்ற முனிவர் மதுரையம்பதியின் பெருமைகளையும், சொக்கநாதரின் திருவிளையாடல்களையும் விரிவாக எடுத்துக் கூறினார்.
முனிவரின் விளக்கத்தினைக் கேட்ட நாரைக்கு மனமாற்றம் ஏற்பட்டது. சொக்கநாதரை வழிபடும் எண்ணம் அதிகரித்தது. எனவே அது மதுரையம்பதியை நோக்கி பறந்தது.
நாரைக்கு அருளல்
மதுரையம்பதியை அடைந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டது. இவ்வாறு பதினைந்து நாட்கள் வழிபாடு நடத்தியது.
பதினாறாம் நாள் நாரை பொற்றாமரைக் குளத்தில் நீராட செல்லும்போது அங்கு மீன்கள் துள்ளுவதைக் கண்டது. உடனே அதற்கு மீனினை உண்ணும் ஆவல் உண்டானது.
சொக்கநாதரிடம் கொண்ட அன்பினால் நாரை மீனினை உண்ணும் எண்ணம் நாரைக்கு மறந்தது. பொற்றாமரைக் குளத்தில் நீராடிவிட்டு சொக்கநாதரை வழிபட்டது.
நாரையின் செயலினால் இறைவனுக்கு அதன்மீது கருணை ஏற்பட்டது. இதனால் நாரையின் முன்னால் சொக்கநாதர் தோன்றி “என் இனிய நாரையே நீ வேண்டுவது யாது?” என்று வினவினார்.
அதற்கு நாரை “ஐயனே, இப்பிறவியை நீக்கி உன்னுடைய அடியவர்கள் வசிக்கும் சிவலோகத்தில் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னைப் போல பறவைகள் இத்தீர்த்தத்தில் உள்ள மீனினை உண்டால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும். ஆதலால் இப்பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் எக்காலத்தும் இல்லாமல் இருக்க அருள் புரிய வேண்டும்.” என்று கேட்டது.
இறைவனாரும் “அவ்வாறே ஆகுக.” என்று அருள் புரிந்தார்.
பின்னர் நாரை நான்கு தோள்களும், மூன்று கண்களும் கொண்ட சிவகணமாக மாறி சிவலோகத்தை அடைந்து நந்தி கணங்களுள் ஒன்றானது.
நாரைக்கு வரம் அளித்த நாள் முதல் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் மட்டும் இன்றி நீரில் வாழும் உயிரினங்கள் ஏதும் இல்லாமல் போயின. சுகுண பாண்டியன் சிலகாலம் ஆட்சி செய்து பின்னர் சிவப்பேறு பெற்றான்.
நாரைக்கு முக்தி கொடுத்த படலம் கூறும் கருத்து
பிற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பது இறைவனை அடைய சிறந்த வழி என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.
முந்தைய படலம்: கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
அடுத்த படலம்: திருவால வாயான படலம்
Comments
“நாரைக்கு முக்தி கொடுத்த படலம்” அதற்கு 2 மறுமொழிகள்