நார்த்தங்காய் ஊறுகாய் சுவையுடன் மருத்துவக் குணம் வாய்ந்தது. இதனை சுவையாகவும் கெட்டுப் போகாமலும் வீட்டில் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
நார்த்தங்காய் பார்ப்பதற்கு ஆரஞ்சுப்பழம் போலவே இருக்கும். இதில் விட்டமின் சி அதிகம்.
தேவையான பொருட்கள்
நார்த்தங்காய் – 1 கிலோ கிராம் (ஆறு பழங்கள்)
கல் உப்பு – 100 கிராம்
மஞ்சள் பொடி – 25 கிராம்
கடுகுப் பொடி – 50 கிராம்
வெந்தயப் பொடி – 50 கிராம்
மிளகாய் வற்றல் பொடி – 100 கிராம்
மண்டை வெல்லம் – 150 கிராம்
பெருங்காயப் பொடி – 2 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்ல எண்ணெய் – 100 கிராம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – 1 ஸ்பூன்
செய்முறை
நார்த்தங்காயை முதலில் நன்கு கழுவி துணியால் துடைத்துக் கொள்ளவும்.

நார்த்தங்காயை கத்தியைக் கொண்டு படத்தில் காட்டியபடி சுருளாக வெட்டவும்.

பின்னர் சுருளுக்குள் உப்பையும், மஞ்சள் பொடியையும் ஸ்பூனால் உள்ளே வைக்கவும்.
மறுபுறம் திருப்பி சுருளுக்குள் உப்பையும், மஞ்சள் பொடியையும் வைக்கவும்.


இவ்வாறாக எல்லா நார்த்தங்காய்களிலும் உப்பையும் மஞ்சள் பொடியையும் வைத்து, படத்தில் காட்டியபடி ஒரு பாட்டிலில் போட்டு நன்கு மூடி வைக்கவும்.

பாட்டிலை அவ்வப்போது நன்கு குலுக்கி விடவும்.
இரண்டு நாட்கள் கழித்து நார்த்தங்காயை மட்டும் வெளியே எடுக்கவும்.
நார்த்தங்காய் உப்புத் தண்ணீரை வடித்து தனியே வைத்து விடவும்.

வெளியே எடுத்த நார்த்தங்காயை ஒரு தட்டில் போட்டு வெயிலில் ஒருநாள் முழுவதும் காய விடவும்.
நார்த்தங்காய் கலவையை வெயிலில் காய வைக்கும்போது தட்டின் வாயையோ, பாத்திரத்தின் வாயையோ மெல்லிய துணியால் கட்டி விடவும். இதனால் தூசி ஒட்டுவது தவிர்க்கப்படும்.


பின்னர் அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தேவையான கடுகு, வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை நன்கு அலசி காய வைக்கவும்.
தேவையான மிளகாய் வற்றலை காம்பு கிள்ளி வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
மண்டை வெல்லத்தை நன்கு தூளாக்கிக் கொள்ளவும்.
நார்த்தங்காய் உப்பு தண்ணீருடன் தூளாக்கிய மண்டை வெல்லத்தைச் சேர்த்து கரைத்து, கரைசலை அடுப்பில் வைத்து நன்கு சுட்டதும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

இக்கரைசலுடன் நாத்தங்காய் துண்டுகள், மிளகாய் வற்றல் பொடி, கடுகுப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு ஒருசேரக் கிளறவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, அலசிய கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நார்த்தங்காய் கலவையில் கொட்டி கிளறி விடவும்.


பின்னர் இக்கலவையை உள்ள பாத்திரத்தின் வாயினை, மெல்லிய துணியால் கட்டி வெயிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து எடுக்கவும்.

கலவையை காலையிலும் மாலையிலும் கிளறி விடவும்.
சுவையான நார்த்தங்காய் ஊறுகாய் தயார்.
இதனை பாட்டிலில் அடைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும்.

இவ்ஊறுகாயை குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
குறிப்பு
நார்த்தங்காய் கலவையை அவ்வப்போது கிளறி விட்டால்தான் காய் நன்றாக ஊறி சுவையாக இருக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!