நாற்காலி பஸ்கி செய்வது எப்படி?

நாற்காலி பஸ்கி செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய, இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

பஸ்கிகள் என்றால் முழங்கால்களை நன்கு, அதாவது முழுமையாக மடக்கிச் செய்யும் பயிற்சிகள் என்கிற அமைப்புடையனவாக இருக்கின்றன.

பஸ்கிப் பயிற்சிகள் தொடைத் தசைகளுக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கும் வலிமையும் வடிவமும் கொடுக்கின்றன.

நாற்காலி பஸ்கி தொடங்கும் நிலை

முதலில் நின்ற நிலையிலிருந்து இந்த பஸ்கியை தொடங்க வேண்டும்.

பின்னர், முழங்காலைப் பாதியளவு மடக்கி, (நாற்காலியில் அமரும் பாவனையில்) அரைக் குந்தல் குந்தி (Half Squat), முன்புறம் இரண்டு கைகளையும் விறைப்பாக நீட்டி, உள்ளங்கைகள் வெளிப்புறம் பார்த்திருப்பது போல, விரல்களைக் கொக்கிபோல் பிடித்து பிணைத்துக் கோர்த்துக் கொள்ளவும்.

நீட்டி கோர்த்துக் கொண்டிருக்கும் கைகள், நெஞ்சுக்கு நேராக விறைப்பாக நீட்டப்பட்டிருக்க வேண்டும்.

 

செய்முறை

இவ்வாறு பிடித்து நின்று கொண்டிருக்கும் நிலையிலிருந்து, இடது காலைத் தூக்கி இடப்புறமாகத் (கால் பாக அளவு (Quarter) திரும்பவும்.

இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதி நேராக, நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

மீண்டும் முதலில் நின்ற தொடக்க நிலைக்கு வந்து, இப்பொழுது வலப்பக்கம் (கால் பாக அளவு) திரும்ப வேண்டும்.

இவ்வாறு மாற்றி மாற்றிப் பல முறை செய்ய வேண்டும்.

குறிப்பு

நாற்காலி பஸ்கி என்று கூறப்படுவதால், முழங்கால்களை மடித்து நிற்கும் தன்மையானது, நாற்காலியில் அமர்ந்திருந்தால் உடல் அமைப்பு எப்படி இருக்குமோ, அந்த நிலையில் தோற்றமளிக்க வேண்டும்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.