நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும்.

இந்நூலில் சுமார் நான்காயிரம் பாடல்கள் உள்ளன.  திருமாலின் அடியவர்களாகிய பன்னிரு ஆழ்வார்களால் இந்நூலில் உள்ள பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பதில் திவ்யம் என்ற சொல்லானது இனிமை மற்றும் மேலான என்பதைக் குறிக்கும். பிரபந்தம் என்பது பாடல்களின் தொகுப்பாகும்.

மேலான கருத்துகள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலினைப் பற்றி பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றழைக்கப்படுகிறது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் திருமாலின் சிறப்புகள் மற்றும் அவருடைய அவதாரங்களின் பெருமைகளையும் எடுத்து இயம்புகின்றன.

இப்பாடல்கள் பெரும்பாலும் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் வரலாறு

கிபி 6 முதல் கிபி 9-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றி பாடல்கள் பலவற்றைப் பாடி வழிபட்டனர்.

அப்பாடல்களை 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமால் அடியவரான நாதமுனிகள் ‘ஆழ்வார்கள் அருளிய செயல்கள்’ என்ற பெயரில் தொகுத்தார்.

ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 3892 ஆகும்.

நாதமுனிகள் ஆழ்வார்கள் அருளிய செயல்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தினார்.

பின்னர் வந்த மணவாளமுனிகள் என்னும் திருமால் அடியார் திருவரங்கத்து அமுதனார் பாடிய இராமானுசர் நூற்று அந்தாதியை, ஆழ்வார்கள் அருளிய செயல்கள் நூலுடன் சேர்த்து நாலாயிர திவ்ய பிரபந்தத்தை உருவாக்கினார்.

இராமானுசர் நூற்று அந்தாதி மொத்தம் 108 பாசுரங்களை உடையது. ஆழ்வார் அருளிய செயல்கள் நூலில் உள்ள பாசுரங்களும், இராமானுசர் நூற்று அந்தாதி நூலில் உள்ள பாசுரங்களும் சேர்த்து மொத்தம் 4000 பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தம் கொண்டுள்ளது.

இந்நூலானது திராவிட வேதம், திராவிட பிரபந்தம், ஐந்தாவது வேதம், ஆன்ற தமிழ்மறை என்றெல்லாம் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

இன்றைக்கும் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் இப்பாடல்களைப் போற்றிப் பாடி வழிபாடு செய்கின்றனர்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்களில் பெரும்பாலானவை பண்ணுடன் பாடக்கூடிய இசைப்பாடல்கள் ஆகும்.

 

நாலாயிர திவ்ய பிரபந்தங்களின் வகைகள்

இந்நூலானது மொத்தம் 24 பிரபந்தங்களைக் கொண்டுள்ளது. அவை

1.திருப்பல்லாண்டு

2.பெரியாழ்வார் திருமொழி

3.திருப்பாவை

4.நாச்சியார் திருமொழி

5.பெருமாள் திருமொழி

6.திருசந்தவிருத்தம்

7.திருமாலை

8.திருப்பள்ளி எழுச்சி

9.அமலனாதிபிரான்

10.கண்ணிநுண்சிறுத்தாம்பு

11.பெரிய திருமொழி

12.திருகுறுந்தாண்டகம்

13.திருநெடுந்தாண்டகம்

14.முதல் திருவந்தாதி

15. இரண்டாம் திருவந்தாதி

16. மூன்றாம் திருவந்தாதி

17.நான்முகன் திருவந்தாதி

18.திருவிருத்தம்

19.திருவாசிரியம்

20.பெரிய திருவந்தாதி

21.திருஎழுகூற்றிருக்கை

22.சிறிய திருமடல்

23.பெரிய திருமடல்

24. இராமானுசர் நூற்றந்தாதி

 

முதலாயிரம் பாடல்கள்

பெரியாழ்வார் – திருப்பல்லாண்டு (12),  திருமொழி (461)

ஆண்டாள் – திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)

குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி (105)

திருமழிசை ஆழ்வார் – திருசந்தவிருத்தம் (120)

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – திருமாலை (45), திருப்பள்ளி எழுச்சி(10)

திருப்பாணன் ஆழ்வார் – அமலனாதிபிரான்(10)

மதுரகவி ஆழ்வார் – கண்ணிநுண்சிறுத்தாம்பு (11)

இரண்டாவது ஆயிரம் பாடல்கள்

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி (1084),

திருகுறுந்தாண்டகம்(20), திருநெடுந்தாண்டகம் (30)

மூன்றாவது ஆயிரம் பாடல்கள்

பொய்கை ஆழ்வார் – முதல் திருவந்தாதி (100)

பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி (100)

பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி (100)

திருமழிசை ஆழ்வார் – நான்முகன் திருவந்தாதி (96)

நம்மாழ்வார் – திருவிருத்தம் (100), திருவாஞ்சியம் (7), பெரிய திருவந்தாதி (87)

திருமங்கை ஆழ்வார் – திருஎழுக்கூற்றிருக்கை (1), சிறிய திருமடல் (40), பெரிய திருமடல் (78)

திருவரங்கத்தமுதனார் – இராமானுச நூற்று அந்தாதி (108)

நான்காவது ஆயிரம் பாடல்கள்

நம்மாழ்வார் – திருவாய்மொழி (1102)

 

ஆழ்வார்களில் அதிக பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார் ஆவார். இவர் 1296 பாசுரங்களைப் பாடியுள்ளார்.

திருமங்கை ஆழ்வார் நம்மாழ்வாருக்கு அடுத்தபடியாக அதிக பாசுரங்களைப் பாடியுள்ளார்.

நம்மாழ்வார் இயற்றிய திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுகின்றன.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பாடல்கள் இனிமையாகவும், எளிதில் பொருள் கொள்ளும்படியும் இக்காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது ஆச்சர்யத்தக்க ஒன்றாகும்.

நாமும் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் போற்றிப் பாடி இறைவனை வழிபட்டு நல்வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

திருப்பாவை பாசுரங்களின் அமைப்பு

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

One Reply to “நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்”

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.