நாலு கோடி பாடல்கள்

நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும் – இது அரச கட்டளை.

சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து இவ்வாறு ஆணையிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.

ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று சோழ அவைக்களப் புலவர்கள் திகைத்தனர்.

அப்போது அங்கே ஒளவையார் வந்தார்.  புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார்.

உடனே அவர் அவைக்களப் புலவர்களைப் பார்த்து, “இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம்.” என்றார்.

“இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடிக் காட்டுங்கள்” என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார் ஒளவையார்.

ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

நாலு கோடி பாடல்கள்

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

(ஒளவையார் தனிப் பாடல்: 42) என்பதே அப்பாடல்.

இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கோடி

மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்.

நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து, அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

அதாவது நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்பதே இதன் பொருள் ஆகும்.

இரண்டு கோடி

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.

நம்மை மதித்து, உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில், உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

மூன்று கோடி

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.

கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும். அதாவது நல்லவர்களோடு நட்போடும், உறவோடும் இருப்பது நல்லது.

நாலு கோடி

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.

பலகோடி பலன் கிடைப்பதாக இருந்தாலும், சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது, கோடி பொன்னுக்கு இணையானது.

நல்வாழ்விற்கான இலக்கணங்கள் கோடிப் பொன்னிற்கும் உயர்ந்தவை என்ற செய்தியினை, எளியவர்க்கும் புரியும் வண்ணம் ஒளவையார் சொல்லியிருக்கின்றார்.

பணமே உலகம் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் காலத்தில், அப்படி இல்லை நற்குணங்களே முக்கியம் என்று சொல்கின்றன நாலு கோடி பாடல்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.