முருகன்

நாளை வருவதை யாரறிவார்?

நாளை வருவதை யாரறிவார்? எனவே இன்றே நாம் இறைவனைப் போற்றி மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் உள்ள முருகன் வழிபாட்டுப் பாடல் இது.

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

வேல் வேல் முருகா, வேல் முருகா

 

நாளை வருவதை யாரறிவார்?

நன்றே செய்வோம் இன்றைக்கே!

கோளை நம்பி இருப்பாரோ

குகனே உன்னைத் தொழுவோர்கள்!

வேளை நல்ல வேளையென

வேலை செய்வோம் வாருங்கள்!

தோளை வலிமை ஆக்கிநல்

வாழ்வைத் தருவாய் செந்தூரா!

 

வாழ்வே எங்கள் வளரொளியே

வண்ணத் திருமயில் வாகனனே!

வீழ்ந்தவன் எழுந்தேன் உன்னாலே

வெற்றியை நோக்கி ஓடுகிறேன்!

மூழ்கிய கப்பல் கிளம்பியது

மூழ்கா தினிமேல் ஒருநாளும்!

ஆழ்நல் லறிவுத் தேனமுதை

அளித்தாய் எனக்கே செந்தூரா!

 

அளித்தாய் எனக்கே ஆனந்தம்

ஆற்றல் பெருகிய தய்யாவே

ஒளியும் நலமும் பொங்கியதே!

உன்னை மறந்தால் வாழ்வேது?

ஒளிவும் மறைவும் இல்லாத

ஒளியும் நலமும் பொங்கியதே!

உண்மை வாழ்வே வேண்டுமடா

தெளிவின் தெளிவே இன்பமடா

தினமும் இங்கே செந்தூரா!

 

தினமும் தினமும் உன்புகழே

திருவாய் மணக்கப் பாடுகிறேன்!

மனமும் உடலும் அதனாலே

மகிழ்வாய் இருக்கக் காணுகிறேன்!

கனவும் நனவும் மெய்ப்படுமே

கந்தா உன்அருள் எனக்கிருக்க!

நினைவில் உயிரில் நீ இருக்க

நிதமும் ஒளியே செந்தூரா!

 

நிதமும் ஒளியின் பாடலடா

நெஞ்சில் இனிமையின் ஆடலடா!

இதந்தரும் சந்தனக் கோலமுகம்

இன்னொளி கூட்டிக் கண்டேனடா!

சுதந்திரச் சங்கொளி முழங்கிடவே

சுந்தரன் வருவதைப் பாருங்கள்!

விதந்தரு கோடி இன்பமெனும்

விளைந்திட வைத்தாய் செந்தூரா!

 

விளைவோ அழிவோ அறியேன்நான்

வீணே பொழுதைக் கழிக்காமல்

இளமை தவழும் உன்அழகில்

என்னைக் கொடுத்திட விரும்புகிறேன்!

அளப்பரும் கருணைப் பெருங்கடலே

அருளே வடிவாய் நிற்கின்ற

ஒளிவளர் விளக்கே பூரணமே

உன்னால் உயர்ந்தேன் செந்தூரா!

 

உன்னால் வளர்ந்த சிறுவன் நான்

உன்னைப் பாடிக் களிக்கின்றேன்!

மன்னே எந்தன் உயிர்க்குயிரே

மனத்தே ஒலித்திடும் மாமணியே

பொன்னே முத்தே ரத்தினமே!

போற்றிப் போற்றிப் புகழ்ந்தாலும்

என்னால் முடியாதப் பாவுன்

எழிலைக் கூறிடச் செந்தூரா!

 

எழிலைக் கூறிடச் சொல்தேடி

எங்கே போவேன் ஐயாவே

மொழிக்கோர் அரசே என் தமிழே!

முருகா முருகா பேரறிவே

அழியாக் கவிதை நீயானாய்!

அன்பே அருளே உனைக்காண

விழிகள் இரண்டும் போதாதே

வேண்டும் ஆயிரம் செந்தூரா!

 

வேண்டும் வேண்டும் நீ வேண்டும்

வேலும் மயிலும் வரவேண்டும்!

நீண்ட பொழுதினில் பேரின்பம்

நெடுகத் தந்தால் ஆகாதோ?

யாண்டும் உன்அருள் வேண்டுமென

பாடும் பாட்டொளி கேட்பாயோ?

மீண்டும் மீண்டும் கேட்டாலும்

திகட்டா இசையே செந்தூரா!

 

திகட்டா தெனக்குத் திகட்டாதே

திருச்செந் தூர்நீர் திகட்டாதே!

அகத்தூள் பொங்கும் கலிப்பதனை

சொன்னால் யாருக்கும் விளங்காதே!

முகத்தைப் பாருங்கள் பெருநிலவரம்

முழுதும் பாருங்கள் திருஉலகாம்!

இகமும் பரமும் எதுவென்றால்

இதுவே என்பேன் செந்தூரா!

 


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.