நோயணுகா வாழ்க்கைக்கு கீழ்கண்ட நாள் ஒழுக்கங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.
எண்ணையிட்டுத் தலை முழுகும் போது வெந்நீரிலேயே குளிக்க வேண்டும்.
இரவில் பசும்பாலையே உண்ண வேண்டும்.
பகற் பொழுதில் தூக்கம் கூடாது.
இளவெயில் கூடாது.
மலம், சிறுநீர் ஆகியவவைகளை அடக்கக் கூடாது.
இடக்கையைக் கீழமைத்து உறங்க வேண்டும்.
மூல நோய் உண்டாக்கும் காய்கறிகளை உண்ணக் கூடாது.
முதல்நாள் சமைத்த காய்கறிகளை உண்ணக் கூடாது.
பசித்தாலொழிய உணவருந்தக் கூடாது.
உணவு உண்டு முடித்த பின்பே தண்ணீர் அருந்துதல் வேண்டும்.
கிழங்கு வகைகளில் கருணைக் கிழங்கின்றி வேறு ஒன்றும் உண்ணக் கூடாது.
வாழைப்பிஞ்சு உண்ணச் சிறந்தது.
உண்டபின் சிறிது தூரம் குறுநடை கொள்ள வேண்டும்.
ஆறு திங்கட்கொரு முறை வாந்தி மருந்தையும், நான்கு திங்கட்கொரு முறை பேதி மருந்தையும் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை நசியம் செய்து கொள்ள வேண்டும்.
நான்கு நாட்கொரு முறை எண்ணெயிட்டுத் தலை முழுக வேண்டும்.
மூன்று நாட்கொரு முறை கண்களுக்கு மையிட வேண்டும்.
வாசனைப் பொருட்களையும் பூக்களையும் நடு இரவில் முகரக் கூடாது.
கெட்ட மணம், தூசி போன்ற பொருட்கள் உடலில் படும்படி நெருங்கக் கூடாது.
இரவில் மர நிழலில் தங்கக் கூடாது.
உறக்கம், உணவு, மலநீர்க்கழிவு, அழுக்காடை உடுத்தல், தலைமுடியைச் சீவுதல் ஆகியவைகளை மாலை நேரத்தில் செய்தல் கூடாது.
நகங்களையும் முடியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதும் நீரைக் காய்ச்சியும், நெய்யை உருக்கியும், தயிரை நீர்விட்டு மோராக்கியும் மட்டுமே உண்ணல் வேண்டும்.
இந்த நாள் ஒழுக்கங்கள் நோயணுகாமல் நம்மைப் பாதுகாக்கும்.