நாள் ஒழுக்கம்

கணகணவென மணியின் ஓசை கேட்டிட எழுந்தே ஓடணும்
கைகளில் புத்தகப்பை சுமந்தே பள்ளிக்கூடம் செல்லணும்
வணக்கம் சொல்லி வரவேற்றிட விரைந்தே செல்லணும்
வாசலில் புதிய பூக்களிடம் நலமா? என்றே கேட்கணும்

புதிய சேதிகள் சொல்லிடும் அறிவியல் வகுப்பினை ரசிக்கணும்
திக்குகள் எட்டும் நடந்ததை சரித்திரப் பாடம் சொல்லிடும்
மனத்திற்கினிய தாய்மொழி பாடலை மனனம் செய்யணும்
மறைத்திட ஒன்றும் இல்லா கணக்கினை விரும்பணும்

கனவில் நல்லவை கண்டிட கதைகள் புதிதாய் கேட்கணும்
காலம் கடந்தும் ஏணியாய் விளங்கிடும் நூலகம் செல்லணும்
சினமெனும் நோய்க்கு மருந்தென சிரிப்பினை பகிரணும்
செயலால் நன்மைகள் விளைவதை நாளும் தொடரணும்

தனக்கே எல்லாம் சொந்தம் என்றே சொல்லா திருக்கணும்
தாமரை இலை தண்ணீர் போல கவலை தொடாதிருக்கணும்
ஜனகன மனவென தேசிய கீதம் மாலையில் பாடணும்
சாயும் பொழுதினில் பாயும் நீரென விளையாடிப் பழகணும்

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.