நாவல் – மருத்துவ பயன்கள்

நாவல் முழுத்தாவரமும் துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பொதுவாகத் துவர்ப்புச் சுவையே அதிகமாகும். நாவல் பட்டை நரம்புகளைப் பலப்படுத்தும்; தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.
நாவல் பட்டை இரத்தத்தைச் சுத்தமாக்கும்; நாவல் பட்டை நீர் தொண்டை கழுவும் நீராகவும் பயன்படும். நாவல் பழம் சிறுநீர் பெருக்கும்; பசியைத் தூண்டும்; நாக்கு மற்றும் ஈறுகளைச் சுத்தம் செய்யும், குடல், இரைப்பை, இதயத் தசைகளை வலுவாக்கும்.

நாவல் பழச்சாறு, விதைகள், நீரிழிவு நோய்க்கான மருந்தாகும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாவல் பசுமை மாறாத பெருமரமாகும். நாவல் இலைகள் எதிரெதிராக, 15 செ.மீ. வரை நீளத்தில், தோல் போன்று தடிப்பாகவும், பளபளப்புடனும் காணப்படும்.

நாவல் பூக்கள் சிறியவை, மென்மையானவை, மங்கிய வெள்ளை நிறமானவை, தொகுப்பானவை.

நாவல் பழங்கள் 1.5 – 4 செ.மீ. வரை நீளமானவை, சதைப்பற்றானவை. நாவல் விதைகள் வெள்ளையானவை மற்றும் ஒரு கனிக்கு ஒன்று என்கிற அளவில் இருக்கும்.

நாவல் மரம் காடுகளிலும், ஏரி, குளத்து மேடுகளிலும் சாலை ஓரங்களிலும் வளர்ந்துள்ள மரமாகும்.

நாவல் பழத்தை நாம் அனைவரும் சுவைத்திருக்கலாம். கருஞ்சிவப்பான பழத்தை உடைய நாவல் மரம் அதிக மருத்துவப் பயன்கொண்டது. நாவல் பழமானது சுவை மிகுந்தது.

வெள்ளை நாவல் என்கிற ஒரு வகை மரம் அதன் குறிப்பிட்ட சில (முக்கியமாக நீரிழிவைக் கட்டுப்படுத்த) பயன்களுக்காக அதிகமான அளவில் தேடப்படுகின்றது.

நாவல் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. விநாயகர் சதுர்த்தி தினத்தில் நாவல் பழம் சிறப்பிடம் பெறுகின்றது.

நீரிழிவைக் கட்டுப்படுத்த நாவல் கொட்டைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு, ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர வேண்டும்.

10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் உள்ள முற்றிய நாவல் மரத்தின் பட்டையைச் சேகரித்து, நன்கு நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, குடிக்க மாதவிடாயின்போது ஏற்படும் அதிகரித்த இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இவ்வாறு இரண்டு வேளைகள், 10 நாட்கள் வரை சாப்பிடலாம்.

நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை மாலை இரண்டு வேளைகள், 2 நாட்களுக்கு சாப்பிட்டுவர சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு தீரும்.

நாவல் இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை இரு வேளைகள் 3 நாட்களுக்கு இவ்வாறு செய்யபேதி கட்டுப்படும்.

10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் உள்ள முற்றிய நாவல் மரத்தின் பட்டையச் சேகரித்து, ½ லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். ¼ லிட்டராக சுண்டிய பின்னர் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண், தொண்டை அழற்சி குணமாகும்.

வேறு நாவல் மர வகைகள்

வெள்ளைநாவல் மர பழங்கள், விதைகள் மருத்துவத்தில் பயன்படுபவை. இவை, இரத்தத்தின் சிவப்பு அணுக்களைப் பெருக்கச் செய்யும்; உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும்; ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.

சம்பு நாவல் மர இலைகள், பழங்கள், விதைகள் மருத்துவத்தில் பயன்படுபவை. இவை, வாத நோய்கள், தாகம் இவற்றைக் கட்டுப்படுத்தும். இலைக்கொழுந்து, கலப்பைக் கிழங்கை உண்டால் ஏற்படும் விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. மேலும் பித்த மயக்கத்தையும் கட்டுப்படுத்தும்.