எல்லாவற்றையும் நான் பார்ப்பதால்
அதற்கு மேல் எனக்கு
எந்த தகுதியும் இல்லை.
அந்த எல்லாமும்
ஒரே மாதிரியாக
வெவ்வேறாக இருப்பதால்
அதன் அர்த்தம் புரிந்திடத் தவிக்கிறேன்!
இப்படியாக வாழும் நாளில்
விழித்துக் கொண்டே காணும்
ஒரு பெரிய கனவில்
நான் அறிந்தவற்றிற்கு மேல்
தடுத்து விடும் சுவரைக் கண்டும்
கற்பனைத் திறன் அற்ற நிலையில்
எதையும் அறிய முடியவில்லை!
எப்பொழுதும் நான்
எல்லா நேரங்களிலும்
தேங்கிய குட்டையில்
மூடனாகவே இருக்கிறேன்.
அப்பொழுதுக்கு அப்பொழுது
பிறந்த வார்த்தைகளைப்
பித்தனைப் போல்
எதையோ சொல்லி வைக்கிறேன்!
பனி மூடிய கண்ணாடிக்
கதவுகளின் வழியே
ஒரு நோயாளியின் கண்களினால்
ஊடுருவிப் பார்க்க முடியவில்லை!
என்னைச் சமாதானம் செய்யவும்
என்னை ஏமாற்றவும்
எனக்குக் கிட்டியது எதுவோ
அது ஒரு கசப்பான உண்மைகளைப்
பொருத்து கொள்ள முடியாத
நிச்சயமான நிஜங்கள்!
புஷ்பால ஜெயக்குமார்