நிஜம் எனும் நிழல்

நிஜம் எனும் நிழல்

என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,

அன்பும் நலமும்.

உங்களுக்கு தெரிந்த ஒருவர், “தம்பி! இந்த பையை அந்த தெருவில் இருக்கும் இந்த நபரிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறுகிறார்.

நீங்களும் அந்த பையை வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்கள்.

சில நாள் கழித்து அதே நபர், “தம்பி! இந்த பையில்10 லட்ச ரூபாய் இருக்கிறது. இந்த பையை அந்த தெருவில் இருக்கும் இந்த நபரிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறுகிறார்.

‘என்னது 10 லட்சமா! பயமா இருக்கிறது’ என்று யோசிப்பீர்கள். பிறகு நீங்களே முடிவெடுத்து “சரி! கொண்டு போய் கொடுத்து விடுகிறேன்” என்று அந்த பையை கட்டி அணைத்து அவரிடம் கொண்டு போய் சேர்பதற்குள் ஒருவழியாகி விடுவீர்கள்.

கொண்டுவந்து ஒப்படைத்ததை தெரியப்படுத்தும் போது, “ஏன் தம்பி! அன்னைக்கி 20 லட்சம் கொண்டு போன போது பயமில்லாம போன. இப்ப என்னப்பா இப்படி பயப்படற? சரி, சரி ரொம்ப நன்றி தம்பி” என்று அந்த பெரியவரிடம் இருந்து விடைபெறுவீர்கள்.

இப்போது சொல்லுங்கள்!

10 லட்சத்தை நீங்கள் உணர்ந்த போது உங்களுக்குள் கடமையுணர்ச்சி வந்து விட்டதல்லவா!

அது 20 லட்சமாக இருந்தாலும் அதை உணராத போது கொண்டு போய் சேர்த்தீர்களே தவிர, உங்களுக்கு பொறுப்புணர்ச்சி வந்ததா என்றால் கேள்விக்குறி தான்.

சரி, பணத்தின் மதிப்பை உணர்ந்திருக்கின்ற நீங்கள் உங்கள் மதிப்பு என்னவென்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா?

யோசிக்க வேண்டும் தானே!

1 – 12 ஆம் வகுப்புகளை நிறைவு செய்த உங்களிடம் ஒரு சிறு கேள்வி.

‘சார், இங்கேயுமா கேள்வி?’ கோபித்து கொள்ளாதீர்கள்.

சின்ன டெஸ்ட் தான்.

12 ஆண்டுகள் படிப்பை நிறைவு செய்த உங்களிடம் 12 ஆண்டுகள் (365 X 12 = 4,380) அதாவது 4,380 நாட்கள் நீங்கள் படித்ததை, கற்றுக் கொண்டதை மூன்று மணி நேரம் பேசுங்கள் என்று சொன்னால், உங்களில் எத்தனை மாணவர்களால் பேச முடியும்?

சரி! ஒரு மணி நேரம் பேசுங்கள் என்று சொன்னால்?

ஆனால் நீங்கள் ஏழாம் வகுப்பு படித்த போது உங்கள் வகுப்பில் நீங்கள் தான் முதல் தரம்!

எட்டாம் வகுப்பில் இரண்டாவது தரம்!

இப்படியே நீளும் உங்களின் முதன்மை பட்டியல்.

12 ஆண்டுகள் கற்றுக் கொண்டதை ஒரு மணி நேரம் கூட சுயமாக உங்களால் பேச முடியவில்லை என்றால் 12 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியை நான் கேட்க வேண்டியதில்லை.

12 ஆண்டுகள் நீங்கள் விதைத்த நேரம், உங்கள் பெற்றோர்களின் தியாகம், நான் படிக்கவில்லை எனது மகனாவது படிக்கட்டும் என்ற அவர்களின் ஏக்கம், பள்ளிக்கட்டணம், புத்தகம், யூனிபார்ம் போன்ற கணக்கில் வந்த வராத செலவுகள், தனது மகனை எப்படியாவது உயர்ந்தவனாக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் பின்னணியில், 12 ஆண்டுகள் கழித்து எதுவும் தெரியவில்லை எனில்,

12 ஆண்டுகள் என்னதான் செய்தோம்?

என்ன படித்தோம்?

எதற்கு படித்தோம்?

என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

நீங்கள் படிக்கும் கல்லூரியில் உங்கள் வகுப்பில் 50 மாணவர்கள் படிப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கல்லூரியில் காலை – மாலை பிரிவுகளில் 20 துறைகள் இருக்கலாம்.

ஒரு கல்லூரியில் இருந்து ஒரு வருடத்தில் அந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் சுமார் 1,000 மாணவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு துறையில் 50 மாணவர்கள் என்றால் 20 துறையில் 50 X 20 = 1,000 மாணவர்கள்.

ஒரு வருடத்தில் ஒரு கல்லூரியில் இருந்து சுமார் 1,000 மாணவர்கள் படிப்பை நிறைவு செய்து வெளியேறுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டங்களிலும் எத்தனை கல்லூரிகள் இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.

கலை & அறிவியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், துணை மருத்துவ படிப்புகள், இன்ஜினியரிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், கட்டிடக்கலை கல்லூரிகள், இவைகளின் பிரிவுகள்.. என நீண்டு கொண்டே செல்லும் படிப்புகளின் பாடப்பிரிவுகள்..

மிகக் குறைந்த பட்சம் 300 கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு வருடத்திற்கு மூன்று லட்சம் மாணவர்கள் தங்கள் படிப்பை நிறைவு செய்து வெளியேறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மற்றொரு பக்கம், மாதம் ஒரு முறை, மாதத்திற்கு இரண்டு முறை, வாரம் ஒரு முறை வெளியாகும் வேலைவாய்ப்பு சம்பந்தமான விளம்பரங்களின் எண்ணிக்கைகள், இந்த வாரம் வெளிவரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் அடுத்த வாரம் வருவது இல்லை.

அப்படி எனில், படிப்பை நிறைவு செய்து வெளிவரும் மாணவர்கள் அந்தந்த வேலைகளில் அமர்ந்தால் வேலையின்மை குறையத்தானே செய்ய வேண்டும். அதுதானே யதார்த்தமும் கூட.

ஆனால் இங்கு படிப்பை நிறைவு செய்த மாணவர்களும் அதிகமாகிறார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும் வேலைக்கு ஆள் எடுக்கின்ற விளம்பரங்களின் தேவைகளும் அதிகமாகிறது எனும் போது எதை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்ற கேள்வி அழுத்தமாய் எழுகிறது.

மீண்டும் எனது இந்த மடலின் முதல் பகுதியை படியுங்கள்.

பணம்!

பொருட்களின் மதிப்பை உணர்ந்த நீங்கள் உங்கள் மதிப்பை உணராமல் போனது ஏன்?

படிக்கும் போது நிஜமாக இருந்தது எல்லாம் இப்போது நிழலாக தெரிவது ஏன்?

என்னடா இவர்? நம்மை தரம் தாழ்த்தி பேசுகிறார் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லாம் உங்கள் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாடுதான்.

நான் ஏன் இப்படி மாறினேன்?

இவ்வளவு நாள் நான் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லையா?

என்ற உங்கள் கேள்விகளுக்கான பதில் உங்களை தேடி நிச்சயம் வரும்.

உங்களை தேடி பழகி கொள்ளுங்கள்!

உங்கள் மதிப்பை உணருங்கள்!

நிழலை நம்பி நிஜத்தை விட்டுவிடாதீர்கள்!

நீங்கள் யார் என்பதை பிறருக்கு தெரியப்படுத்த அதிகம் முயற்சிக்காதீர்கள். நீங்கள் யார் என்பதை உங்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்துங்கள். அப்படி தெரியப்படுத்தி பாருங்கள். வேலை மட்டுமல்ல எல்லாம் வசப்படும்.

வாழ்த்துக்களுடன்
முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408


Comments

“நிஜம் எனும் நிழல்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. மிகச் சிறப்பான வாழ்வியல் கட்டுரை; மிகப் பயனுள்ளது; கருத்துள்ளது; தேவையானது; உண்மையானது; மதிப்புடையது; செழிப்பானது; வளமையானது; மகுடம் ஆனது!

    வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களுக்கு!

    தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை தமிழ் உலகத்திற்கு தாருங்கள்!

  2. Amazing 👏…good msg

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.