நிதி திட்டமிடல்

நிதி திட்டமிடல் மூலம் நம் பணத்தைத் திறமையாக நிர்வகிக்க முடியும். நிதி திட்டமிடலின் முதல் படியாக நாம் ஒரு நிதி நிலைக் குறிப்பேடு வைத்திருக்க வேண்டும். அதில் ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கான வரவு, செலவுக் கணக்குகளைக் குறித்து வைக்க வேண்டும்.

நிதி திட்டமிடல் என்றால் என்ன?

நமது உத்தேச நிதித் தேவைகளைக் கணக்கிட்டு அவைகளை வாழ்நாள் முழுவதும் தீர்ப்பதற்கான வழிகளைக் காணும் ஒரு பயிற்சியாகும்.

(எ.கா.) குழந்தை பிறப்பு, கல்வி, வீடு வாங்குதல், திருமணம், விதை வாங்குதல் முதலியவை மற்றும் திடீர் செலவுகளைச் சமாளித்தல்

(எ.கா.) சுகவீனம், விபத்து, மரணம் வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீர்கேடுகள் முதலியன.

 

ஏன் நாம் நிதி திட்டமிடல் வேண்டும்?

நம் வருமானத்தை மனதில் கொண்டு வரக்கூடிய செலவுகளை முன்கூட்டியே திட்டமிட நிதி திட்டமிடல் வழி செய்யும். அது இரண்டு வழிகளில் நமக்கு உதவி செய்கிறது.

ஒன்று, நம் எதிர்காலத் தேவைகளுக்காக நம் வருமானத்தின் ஒரு பகுதியை முறையாகச் சேமிக்க முடிகிறது.

இரண்டு, எதிர்காலத் தேவைகளுக்குச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற செலவிங்களைத் தவிர்க்க முடிகிறது.

ஆக நாம் நிதி திட்டமிடலை இன்றே தொடங்க வேண்டும். அப்போதுதான் நம் சொந்த பணத்திலிருந்தே (இன்னொருவரிடம் கடன் வாங்காமல்) கடனை அடைக்கவும், வீடு வாங்கவும், குழந்தைகளின் மேல் படிப்பிற்காக செலவிடவும், கூடிய உயர்ந்த நிலையை அடைய முடியும். உங்கள் இலக்கை நிதி திட்ட மிடல் மூலம் அடையுங்கள்.

 

எவ்வாறு நிதி திட்டமிடல் செய்வது?

இன்றைய நிதி நிலையைக் கணக்கிடுங்கள் (இன்று நம் நிலை என்ன?)

நிதித் தேவைகளை வரையறுங்கள். நாம் குறுகிய கால இடைவெளிகளில் ஒரு ஆண்டு, நடுத்தர கால இடைவெளியில் (1-5 ஆண்டுகள்) மற்றும் நீண்ட கால இடைவெளியில் (5 ஆண்டுகளுக்கு மேல்) அடைய விரும்புவது பற்றி முடிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு இனத்திற்கான செலவையும், அதை அடைய வேண்டிய காலக் கெடுவையும் நிர்ணயிங்கள், ஒவ்வொரு வாரம், மாதம் நாம் சேமிக்க வேண்டிய தொகையைக் கணக்கிடுங்கள்.

நிதிநிலைக் குறிப்பேட்டை பராமரியுங்கள் – வாராந்திர, மாதாந்திர வரவு செலவுகளைக் குறித்து வையுங்கள்.

செலவைக் குறையுங்கள் – யோசித்துச் செலவழியுங்கள்

சேமிப்பு திட்டமிட்ட படி உள்ளதா என்று அவ்வப்போது பரிசீலனை செய்யுங்கள். அப்படி இல்லையென்றால் எந்தெந்தச் செலவுகளைக் குறைக்கலாம் எப்படிச் சேமிப்பைக் கூட்டலாம் என்று பாருங்கள்.

ஒவ்வொரு வார, மாத இறுதியில் சேமித்த பணத்தைக் கணக்கிடுங்கள்

சேமிப்பை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.

 

நிதிநிலைக் குறிப்பேடு ஏன் பராமரிக்க வேண்டும்?

நிதிநிலைக் குறிப்பேடு நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அத்தியாவசியத்திற்குச் செலவழித்த தொகை, அவசியமில்லாதவற்றிக்கு செலவு செய்த தொகை ஆகியவற்றை நாம் அறிய முடியும்.

இது நாம் எந்தச் செலவுகளைத் தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என்பதை அறிய உதவும். அது தெரிந்து விட்டால் நாம் நம் செலவுகளை முறைப்படுத்த முடியும். நாம் இந்தப் பணத்தைச் சேமித்து வறுமையைத் தவிர்க்கலாம்.

செலவு செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை சிந்தியுங்கள்?

எடுத்துக்காட்டாக நம் மாத வருமானம் ரூபாய் 5000 என்க. நம் நிதி நிலைக் குறிப்பேட்டிலிருந்து கீழ்கண்ட செலவு தொகைகளை அறிகிறோம்.

உணவு, உடை, (ரூ.2000), குழந்தைகள் கல்வி (ரூ.1000), வாடகை (ரூ.700), மருத்துவம் (ரூ.300), விழாக்கள், யாத்திரை போன்ற விருப்பச் செலவுகள் (ரூ.500) குடி, சூதாட்டம் (ரூ.500).

நாம் பண்டிகை செலவை ரூ.500 லிருந்து ரூ.200 ஆக குறைக்கலாம். மது, சூதாட்ட செலவு ரூ.500ஐத் தவிர்க்கலாம். இப்பொழுது மீதமுள்ள ரூ.600ஐச் சேமிக்கலாம்.

நிதிநிலைக் குறிப்பேட்டை உபயோகித்தால் நாம் பணத்தை சேமிக்க முடியும். இந்தக் கணக்கிடுதல் இல்லையென்றால் நாம் கையில் உள்ள எல்லா பணத்தையும் செலவழித்து விடுவோம்.

 

செலவுகளை எப்படி குறைக்க முடியும்?

சில மிகையான செலவு வகைகளை சிந்தித்துச் சிக்கனமாக செலவழிப்பதன் மூலம் ஒருவர் செலவுகளைக் குறைக்க முடியும்.

இப்படிச் சேமித்த பணம் இன்னொரு வருமானமாகிறது. அதை அத்தியாவசிய செலவுகளுக்கும் பயன்படுத்தலாம். இதை புரிந்து கொள்வது எளிது.

எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு நாளைக்கு 4 டீ குடிக்கிறார் என்றால் ஒரு மாதத்தில் 30 X 4 = 120 கப் டீ குடிக்கிறார். ஒரு டீ ரூ.10 என்றால் ஒரு மாதச் செலவு 120 X 10 = 1200.

ஒரு நாளைக்கு 4 கப் டீ தேவையா என்று சிந்திப்போம். அவர் ஒரு நாளைக்கு 2 கப் டீ குடித்தால் செலவு ரூ.600 மட்டுமே ஆகும். மீதமுள்ள ரூ.600 சேமிப்பாகும்.

4 கப் அவர் விருப்பமாக இருந்தாலும் அடிப்படைத் தேவை 2 கப்பிலேயே பூர்த்தியாகும். இப்போது அவர் வருமானம் மாதம் ரூ.600 அதிகரிக்கும். ஒரு வருட சேமிப்பு ரூ.7200 ஆகும்.

எனவே அனைவரும் நிதி திட்டமிடல் மூலம் தங்கள் வாழ்வை வளமாக்கலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.