நின்று செய்யும் பஸ்கி செய்வது எப்படி?

நின்று செய்யும் பஸ்கி செய்வது எப்படி? என்ற‌ இக்கட்டுரை, டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா எழுதிய இந்திய நாட்டு தேகப் பயிற்சிகள் என்ற நூலில் இடம் பெற்ற கட்டுரை ஆகும்.

பஸ்கியைத் தொடங்கும் நிலை

கால்களை, இயல்பான இடைவெளி இருப்பதுபோல் விரித்து நில், கைவிரல்களை மூடியவாறு, பக்கவாட்டில் வைத்து நிமிர்ந்து நேராக நில்.

செய்முறை

நிமிர்ந்து நிற்கின்ற நிலையிலிருந்து ஒரு துள்ளு துள்ளி (Jump) அதே இடத்தில் குதிக்கலாம் அல்லது சற்றுமுன் தள்ளியும் உட்காரலாம்.

அவ்வாறு குதித்து உட்காருகின்ற நிலையில் கைகளிரண்டையும் அந்தந்தப் பக்கத்திலே இருப்பதுபோல, முழங்கைமடித்து தோள்பட்டையில் கட்டைவிரலை வைத்து அமரவும்.

உடலின் எடை முழுவதும், முன்பாதங்களில் இருப்பது போல முன் பாதங்களிலேயே உட்கார்ந்திருக்க வேண்டும்.

முழங்கால்கள் இரண்டும் பக்கவாட்டில் இருப்பதுபோல இருந்திருக்க வேண்டும்.

மீண்டும் தொடங்கிய நிலைக்கே திரும்பிவந்து நிற்கவேண்டும்.

குறிப்பு

உட்கார்ந்த நிலையிலும் உடலை நிமிர்த்தி நேராக உட்காரவும், கைகால்கள் உடல் முழுதும் விறைப்பாகவும் நேராகவும் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நின்று செய்யும் பஸ்கி முறையிலே வேறு சில முறைகளிலும் செய்முறைகள் உண்டு. அவைகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. நின்ற நிலையிலிருந்து துள்ளிக் குதித்து கீழே முன் பாதங்களில் உட்காருகின்ற பொழுது, இரு கால்களையும் சேர்த்து உட்காராமல் இடது காலை முன்புறமாக (Forward) வைத்து உட்காருதல் கைகள் வைக்கும் நிலையில் மாற்றம் இல்லை. பிறகு துள்ளிக் குதித்து நின்ற நிலைக்கு வந்துவிட வேண்டும்.

2. அதே போல் உட்காரும் பொழுது இடதுகாலை பக்கவாட்டில் (Sideward) வைத்து உட்காரவேண்டும்.

3. அதேபோல், உட்காரும் பொழுது இடதுகாலைப் பின்புறமாக (Backward) வைத்து உட்காரவேண்டும்.

4. நின்று செய்யும் பஸ்கி முறையில், துள்ளிக் கீழே உட்காரும்பொழுது, வலதுகால் வைக்கும் இடத்தில் இடது காலையும் இடதுகால் இருக்கும் இடத்தில் வலதுகாலையும் வைத்து, அதாவது குறுக்கு நெடுக்காக வைத்து, முன் பாதங்களில் அமரவேண்டும்.

கைகள் பக்கவாட்டில் வந்து, தோள் பட்டையில் வைக்கப்படல் வேண்டும்.

பின்னர் மீண்டும் நின்ற நிலைக்கே துள்ளி எழ வேண்டும்.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

எஸ்.நவராஜ் செல்லையா அவர்கள்

ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். (பிறப்பு 1937 – இறப்பு 2001)

இவர் விளையாட்டு, உடற்பயிற்சி, உடல்நலம், விளையாட்டுத் துறை (ஆங்கிலம் தமிழ்) அகராதி உள்ளிட்ட 27 நூற்களை எழுதியுள்ளார். இவரின் நூல்களை 2010 -2011 இல் தமிழ் நாடு அரசு நாட்டுடைமை ஆக்கியது.

முதன் முதலாக விளையாட்டுத்துறை பற்றி ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்.

விளையாட்டுக் களஞ்சியம் மாத இதழை 1977 முதல் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.