நிறைகுளம் நூல் கரிசல் காட்டு மக்களின் வாழ்வை மிகச் சிறப்பாக நம் மனக்கண் முன்னே நிறுத்துகிறது. பெ.மகேந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் மா.காமராஜ்.
நான் ‘நிறைகுளம்’ நூலாசிரியர் பெ.மகேந்திரன் படித்த பள்ளியின் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்.
எம் பள்ளி மாணவர் எழுதிய நூல் குறித்து என் கருத்தினைப் பதிவு செய்வதில் பேரானந்தமும் பெருமையும் அடைகிறேன்.
கதைச் சக்கரத்தின் அச்சு
‘கெடுப்பதூஉம், கொடுப்பதூஉம் மழை’ என்று வள்ளுவர் மழை குறித்து உலகத்திற்குப் பொதுவான கருத்தினைக் கூறிவிட்டு சென்றிருந்தாலும் கரிசல் காட்டு மக்களுக்கு வள்ளுவர் வாக்கு ஒரு விதிவிலக்கு.
ஆம்! கரிசல் காட்டு சரித்திரத்தில் மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும் என்பதே நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத உண்மை.
இந்நாவலின் மைய அச்சு இதுதான். இக்கருத்தினை மையமாகக் கொண்டுதான் கதைச் சக்கரம் சுழல்கிறது.
நாவல் ஆசிரியர் முன்னுரையில் கூறியது போல் நம் ஏக்கங்களைப் பெயராக வைப்பது போல், நம் ஊர்க்குளம் என்றும் நிறைந்து இருக்க வேண்டும் என்று நினைத்து வைத்த பெயர்தான் இந்த ‘நிறைகுளம்’.
நம் பிள்ளைகளுக்கு அறிவரசன், மதியழகன் எனப் பெயர் வைப்பதில்லையா? அதைப் போலத்தான்.
‘நிறைகுளம் நிரம்பியதா? நிறைகுளம் மக்கள் ஏக்கம் நிறைவேறியதா?’ இப்படி நம்மை ஏங்க, நாவல் ஆசிரியர் அவரோடு நம்மையும் கொண்டு செல்வதே இந்நாவலின் சிறப்பு .
கதையோட்டம்
புயல் மழையால் தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தையும் பேரழிவையும் அதனால் குடும்பத்தை இழந்து நிறைகுளம் வந்து தஞ்சம் அடையும் ‘ஆதிமூலம்’ என்ற பாத்திரத்தைப் படைத்து துயரக் கடலுக்குள் நம்மைத் தள்ளித் தத்தளிக்க வைக்கிறார் நாவல் ஆசிரியர்.
‘மழைப் பெய்தும் கெடுக்கும்’ என்பதற்குச் சான்றாக தனுஷ்கோடி புயல் நிகழ்வைச் சுட்டிக் காட்டுகிறார். இந்த நூலாசிரியரின் சிந்தனை பாராட்டுக்குரியது
‘பெய்து கெடுத்த தனுஷ்கோடியிலிருந்து மழை பெய்தும் பெய்யாமலும் கெடுத்துக் கொண்டிருக்கும் ஊரான நிறைகுளம் வந்தடைவது, ஆதிமூலத்திற்கு வரமா? சாபமா?’ என நம்மை இறுதி அத்தியாயம் வரை எதிர்பார்க்க வைப்பது நூலாசிரியரின் திறமை.
‘ஆதிமூலம் குடும்பத்தார்க்கு என்ன ஆனது?
அவர் குடும்பத்தினரைச் சந்தித்தாரா?
நிறைகுளம் நிறைந்ததா?’ என நம்மை ஒரே அமர்வில் படிக்கத் தூண்டும் வகையில் கதை ஓட்டம் செல்கிறது.
இரட்டைக் கதை இரட்டைக் கதாநாயகர்கள்
மழையால் பாதிக்கப்பட்ட இரு ஊர்களின் கதைக்கு இரு கதாநாயகர்கள்.
வண்டி உருண்டோட இரு சக்கரங்களுக்கு இரு அச்சாணிகள் தேவை. ஒன்று ஆதிமூலம். ஆதிமூலம்தான் இந்நாவலின் ஒர் அச்சாணி. இந்நாவலின் ஆதியும் அந்தமும் அவர்தான்.
மற்றொருவர் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து அழகர் ஆற்றில் அணை கட்டி நிறைகுளத்திற்குத் தண்ணீர் கொண்டு வந்து நிரந்தரத் தீர்வு காணத் துடிக்கும் அழகர்சாமி மகன் ராமகிருஷ்ணன்.
அளவுக்கு அதிகமாக அடாது விடாது மழை பெய்து குளம் நிறைந்து உடையும் நிலையிலிருந்த நிறைகுளம் கிராமத்தைக் காப்பாற்ற வந்த அவதாரமாகப் படைக்கப்பட்டிருக்கிறார் ஆதிமூலம்.
துணைப் பாத்திரங்கள்
துணை நடிகர்கள் இல்லாமல் கதாநாயகர்கள் வெற்றி அடைய முடியாது.
அந்த ஊர் ஊருணிக் கிடங்குப் பிள்ளையார் ஒரு முக்கிய துணைக் கதாநாயகன்.
அனைவரும் கூடும் அவ்வூர் சிமெண்ட் மேடை கூட முக்கிய கதாபாத்திரமே.
ராமகிருஷ்ணனின் சித்தப்பாவும், திக்கற்ற ஆதிமூலத்திற்கு அடைக்கலம் தந்து உதவியவருமான சாத்தூரப்பன் கதை முழுவதும் பயணிக்கும் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரமே.
ஊர் பெரியவர் ராமசுப்பு, பெட்டிக் கடை கந்தசாமி அடுத்த இடத்தைப் பிடிக்கின்றனர்.
பஜனை பாடும் மீன் துள்ளி அச்சையா அண்ணாச்சி, மோட்டார் பிட்டர் வேப்பங்குளம் சீனி, மாடு மேய்க்கும் சுந்தரம், மழை அறிகுறி சொல்லும் ஜோசியர் அப்பண்ணசாமி , நவாப்பழம் நாராயணசாமி, ஊர் வில்லங்கம் பேசும் சேதுராஜ், வாத்தியார் ரெங்கசாமி, கணக்கு வாத்தியார் ஜேம்ஸ் ஆகியோர் அவ்வப்போது வந்து சென்று கரிசல் மண்ணின் பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டை பறை சாற்றுகின்றனர்.
சாத்தப்பன் மனைவி செல்லம்மாள், பெரியவர் ராமசுப்பு மனைவி ராஜம்மாள் இருவரும் கரிசல் காட்டுப் பெண்களின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.
ஆதிமூலத்தின் தாத்தா சிலம்பு வாத்தியார் சீமைச்சாமி, அப்பா வில்லாயுதம், அம்மா பர்வதம், தங்கை மயில் ஆகியோர் தனுஷ்கோடியின் சோகத்தின் அடையாளமாக மழைக் கொடுமையைச் சித்தரிக்கும் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருகின்றனர்.
ஜெமினி கணேசன், சாவித்திரி கூட கதையில் வந்து செல்லும் பாத்திரங்களாகி விட்டனர்.
‘கம்பர் வீட்டுத் தறியும் கவி பாடும்’ அதுபோல, கரிசல் காட்டு ஆட்டு உரலும் அம்மியும் கூட கரிசல் கதை சொல்லும்.
தர்மச் சோறு வாளி, கிணற்றுத் திட்டுகளில் மேலும் கீழும் பயணிக்கும் மோட்டார், பனங்கொட்டை வண்டி, சிகரெட் கணக்கு அட்டை, மொச்சைப் பயறு கொழம்பு, அதலக்காய் வத்தல், பருப்பு நெய் சோறு, ‘டங் டங்’ ஓலி எழுப்பும் அடி பம்பு, தண்ணீர் சுமக்கும் தள்ளு வண்டி இவை யாவும் கதையோடு பின்னிப் பிணைந்துள்ள கதாபாத்திரங்கள்!!
களைப்பு போக்கும் இடைக்கதைகள்
நம் கவலையின் மத்தியில் களைப்பு தீர புத்துணர்ச்சி பெற டீ, காபி குடிப்போம் அல்லவா?
அதுபோல் படிப்போர் களைப்பைப் போக்கி அவர்களை எழுந்துவிடாமல் அமர வைத்து படிக்க வைப்பது என்பது எழுத்தாளர் திறமை.
ஒரு நாவலைப் படிப்போருக்கு இடையிடையே புத்துணர்ச்சி ஊட்டுவது இடைக் கதைகள்தான். ஆங்கிலத்தில் Episodes என்பர்.
நாவல் ஆசிரியர் மகேந்திரனும் இடைவெளி விட்டுவிட்டு கதையோடு தொடர்புடைய பல சிறுகதைகள் சொல்லி நம்மை ஒரே அமர்வில் படிக்க வைத்திருக்கிறார்.
மழை இல்லாவிட்டாலும் உழுது திரும்பும் சம்சாரிகளைப் பார்த்து கிண்டல் செய்த வாத்தியார் நாராயணசாமிக்கு சம்சாரிகள் கூறிய பகவான் கிருஷ்ணன் சங்கு எடுத்து ஊதி மழை வருவித்த கதை (பக் 11)
ஜோசியர் பேச்சுக் கேட்டு மழை வேண்டி வர்ண பகவானைப் பிரார்த்திக்க நம்பிக்கை இல்லாமல் வந்த ஊர் மக்கள் மத்தியில் உறுதியாக மழை வரும் என நம்பி குடையை எடுத்து வந்த சிறுவன் கதை.
ஜேம்ஸ் வாத்தியார் போட்ட 1 முதல் 7 வரை உள்ள எண்ணால் வகுத்தால் மீதி ஒன்று வரும் எண் எது? என்ற கணக்கு.
ஆதிமூலம் தன் தந்தை வில்லாயுதத்துடன் நிறைகுளம் வந்த சோகக்கதை.
பிள்ளையார் கிடங்குக் கதை
திக்கற்று பசியோடு வரும் ஏழைகளுக்கு தர்மச் சோறு வாளியை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சிறுவர்கள், ”திக்குத் தெரியாமல் வந்தோம், திங்கச் சோறு போடுங்க!; நாதியத்து வந்தவர்களுக்கு, நல்ல சோறு போடுங்க!’’ என பிச்சை எடுக்கும் தர்மச் சோறு வாளிக் கதை.
பனைமரத்தை வெட்டி நேரடியாக வண்டியில் சாய்த்த அதிபுத்திசாலி கோபண்ணா, பாப்பண்ணா கதை.
காணாமல் போன நிறைகுளம் பிள்ளையாருக்குப் பதிலாக பிள்ளையாரைத் திருடிக் கொடுத்த கயத்தாறு தங்கச் சங்கிலித் திருடன் இலட்சுமணன் கதை.
நான் ரசித்த காட்சிகளும் வரிகளும்
இந்த நாவல் Tragedy யா Comedy யா எனில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் Tragedy தான்.
ஆனாலும் நாவல் ஆசிரியரின் மென்மையான நகைச்சுவை கலந்த வரிகள் நம்மைக் கரிசல் காட்டுச் சோகங்களிலிருந்தும், ஆதிமூலத்தின் சோகக் கதையிலிருந்தும் நம்மை மெல்லியதாகச் சிரிக்க வைக்கின்றன. இதுவும் நாவலாசிரியர் கையாண்ட ஒரு டெக்னிக்.
துபாயிலிருந்து வரும் மனிதரைப் பார்த்து “தம்பி! துபாயிலிருந்து வர்றீர்களா? இந்த வருடம் மழை தண்ணி எப்படி? கண்மாய் நிறைஞ்சிருச்சா? ( பக்.5)
தண்ணீர் மட்டத்திற்கேற்ப கிணற்றுப் படிகளில் மோட்டார் மேலும் கீழுமாக ஏறி இறங்கி பயணப்படுகிறது -பக்-7
மங்குற காலத்துக்கு மாங்காய், பொங்குற காலத்துக்கு புளியங்காய் (பக் 200)
பேருவாதித் தண்ணீரை சுடுமண் குடித்து விடும் மீதியை சூரியன் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிடுவான் – பக்-40
மோட்டார் ரப்பர் வாசருக்கு துர்வாசர் மாதிரி கோபம் வந்துவிடும் — பக் 51
மழை வந்தால் லீவு விடுவதற்கு அப்போது ரமணன்கள் கிடையாது – பக்-72
“அடுத்த நிலத்து வரப்பு தள்ளி ஏரோட்டும் புத்தி ஏனோ?” –பக் 94
பிட்டர் வேப்பங்குளம் சீனி, ஊரில் உள்ள மோட்டாருக்கெல்லாம் டாக்டரும் எஞ்சினியரும் அவர்தான் -பக்- 122
மார்கழி 12 முதல் 26 வரை வானம் கர்ப்பம் தரிக்கும் நாள் – பக்-138
ஆமாம். ரேடியோ சரியாய் படிக்க மாட்டேங்குது. வாத்தியார்கிட்ட டியூெசன் அனுப்பனும் பக்-180
ராமசுப்புவின் கோபம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அந்தக் கரண்டி, சட்டிக்குள் போய் வருகிற வேகத்தை வைத்து கணித்துக் கொள்வாள் ராஜம்மாள் – 216
தனுஷ்கோடியைப் பார்க்க, சிறந்த அழகி ஒருத்தியை விதவையாகப் பார்க்கிற மாதிரி இருந்தது – பக்-228
நெடுநாள் கழித்து சந்தித்த ஆதிமூலத்தையும் தங்கை மயிலையும் பேச விட்டுவிட்டு தங்கை மயிலின் கணவன் வெளியே வந்தபோது பூவரசு நிழலில் ஒரு தாய் நாய் படுத்திருக்க இரு நாய்குட்டிகள் ஒன்றை ஒன்று கடிக்கவும் கவ்வவுமாக விளையாடிக் கொண்டிருந்தன – பக்-242
டிராக்டரிலிருந்து நான்கு பேர் மாடு சாணம் போட்டதுபோல் ‘திபு திபு’வென்று குதித்து கீழே விழுந்தார்கள் —பக்- 244
கண்முன் காட்சியாக வர்ணனை
அதுபோல் சில சம்பவங்களை கண் முன் காட்சியாக வர்ணித்து நம்மை நாவலில் வரும் கதாபாத்திரமாகவே மாற்றி உணரும்படி செய்திருப்பது ஒரு நல்ல எழுத்தாளரின் இயல்பு.
அதைத் திரு.மககந்திரன் எழுத்தில் உணர்கிறேன். நிறைய ரசிக்கத் தகுந்த காட்சிகள் இருந்தாலும் உதாரணத்திற்கு ஓரிரு காட்சியை மட்டும் சொல்லிவிட்டுச் செல்கிறேன்.
ஊர் மேடை: பக்-26 ஊருணிக்கரையில் ஒரு சிமெண்ட் மேடை அதில் ‘தளதள’வென்று வளர்ந்த நிழல் தந்து கொண்டிருந்த இச்சி மரம்.
அருகே ஒரு வேப்ப மரம். மேடையைச் சுற்றி அரளிச் செடிகள், காகித ரோஜா செடிகள் என்று ஒரு சின்னப் பூங்கா போன்ற பராமரிப்பு – ஊர் மேடையை நம் கண் முன் காட்சியாக வர்ணிக்கிறார்.
சாத்தப்பன் காபி குடிக்கும் முறை:- காபி டம்ளரை இரண்டு விரல்களில் மட்டும் நிற்கிற மாதிரிப் பிடித்து அப்படியே அடிப்பக்கம் சுத்துற மாதிரி வட்டமாக ஆட்டுவார்.
அப்புறம் ஒரு கணக்கு உண்டு. நாலு ஆட்டு ஆட்டிவிட்டு ஒரு வாய் உறிஞ்சுவார். அப்படி உறியும் போது ஒரு பெரும் சத்தம் ‘புர்ர்..’ என்று கேட்கும். என்னே வர்ணனை!!
அப்படியே நீங்களோ உங்கள் நண்பர்களா காபி குடிக்கும் காட்சியை உங்கள் மனக் கண் முன் காண்கிறீர்களா?
ஊருணியில் துவைக்கும் ஒலி பக் 19
‘ஊருணி தெற்குப்புறம் யாராவது துணி துவைத்தால் வடக்குக் கரையொட்டி போகிறவர்களுக்குக் கல்லில் துணி படும் போது சத்தம் கேட்காது. தலைக்கு மேலே துணி போகும் போதுதான் ‘லொப்’ என்ற சத்தம் காதில் விழும்!’
இந்த வர்ணனை நான் சிறுபிள்ளையில் கண்மாய் பக்கம் காளான் பொறுக்கப் போகும்போது, கண் முன் பார்த்து அனுபவித்த நிகழ்வின் ஞாபகத்தை மனக்கண் முன் கொண்டு வந்தது.
தனுஷ்கோடி பேரழிவு, நிறைகுளம் பெருமழைக்காட்சி, ஆதிமூலம் அடிமடை திறந்துவிட்ட காட்சி, எல்லாம் சில அத்தியாயங்களை ஆக்கிரமித்துள்ளது. நூல் ஆசிரியருக்கு ஒரு பெரும் கை தட்டலே செய்யலாம்.
ஜெமினி – சாவித்திரி கதையின் ஓர் அங்கம்:
ஜெமினி கணேசனும் சாவித்திரியும் தனுஷ்கோடி பேரழிவு நாளான 1964 டிம்பர் 28 ஆம் நாள் காலை தனுஷ்கோடி வந்ததை நூலாசிரியர் தம் கதைப்போக்கில் தன் கதைக்குள் கொண்டு வருவது மிக அருமை.
புயலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் போதும் அத்தனை கஷ்டத்திலும், ‘ஜெமினி கணேசன் சாவித்திரி வந்தார்களா? ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தார்களா? அவர்களுக்கு என்ன ஆனது?’ என நினைக்கும் ஆதிமூலத்தின் (மக்களின்) சினிமா மோகம்,
ஜெமினி சாவித்திரி மேல் உள்ள பைத்தியக்காரத்தனத்தை நாவல் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்ல வேறொரு அத்தியாயத்தில் சாவித்திரி 1981 இல் இறந்த செய்தியை பேப்பரில் பார்த்து அன்று முழுவதும் சோகமாக இருந்த ஆதிமூலத்தை என்னதான் சொல்ல?
பாசமலர் படமும் தங்கை மயிலின் மாறுபட்ட சிந்தனையும்:
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி நடித்து வெளிவந்த படம்; அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக இன்றும் பேசப்படும் படம் பாசமலர்.
நாம் எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்ததும் நம்மைப் ‘படம் எப்படி இருந்தது?’ எனக் கேட்டால் “சிவாஜி, சாவித்திரி நடிப்பு சூப்பர். அண்ணன், தங்கை என்றால் இப்படி இருக்கணும்!” என்றுதான் சொல்வோம்.
ஆனால் அண்ணன் ஆதிமூலம் “படம் எப்படி இருந்தது?” எனத் தங்கை மயிலிடம் கேட்க “கல்யாணம் ஆனா எல்லா ஆம்பிள்னளகளும் ஜெமினி மாதிரிதான் இருப்பாங்களா அண்ணா! எனக்கு கல்யாணமாகி நான் நம்ம வீட்டுக்கு வர முடியாமப் போச்சுனா, நான் செத்துடுவேன் அண்ணா! அதற்கு ஆதிமூலம், ”நான் சிவாஜி மாதிரி பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுவேன்”.
அதற்கு தங்கை மயிலு, “உன் வீட்டுக்கு வந்தா உன் பொண்டாட்டி எம்.என்.ராஜம் போல் இருந்தால் என்னை விரட்டி விடுவாளே!” என்று சிவாஜி, சாவித்திரி பாத்திரங்களை விட்டுவிட்டு ஜெமினி, ராஜம் பாத்திரங்களை நினைக்கும் மயிலு மயிலுதான்.
கதை முடிவு
மழை வந்துவிடும்; அழகர் அணை கட்ட ஆர்டர் வந்து வேலை தொடங்கிவிடும்; கரிசல் பூமிக்கு விடிவு வந்துவிடும்; ஆதிமூலம் தன் தாய் தந்தை, தங்கையுடன் சேருவார் என எதிர்பார்த்த என் போன்ற சாதாரண வாசகர்களுக்கு ஏமாற்றமே!!
ஆதிமூலம் தங்கையைப் பார்த்து மகிழ்ந்தாலும் அவனது தாய், தந்தை இறந்த செய்தி ஆதிமூலத்தை நிலைகுலைய வைக்கிறது.
கரிசல் காட்டு காலநிலையே மாறினால் தவிர, கரிசல் பூமியை மழை மறைவுப் பகுதியிலிருந்து தூக்கி மாற்றி வைத்தால் தவிர பெய்தலும் காய்தலும் கரிசல் காட்டு தலைவிதி என நாவல் ஆசிரியர் நினனத்தாரோ என்னவோ,
”செல்லம்மாள் ஊருணிக் கிணற்றில் தண்ணீர் இறைத்து நாலைந்து குடங்களில் நிரப்பித் தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தாள். அதிலும் ஒரு குடம் காலியாகவே வந்தது” என முடிக்கிறார்.
அன்புடையீர்,
நிறைகுளம் கண்மாய் நிறையவில்லை என்றாலும் பெ.மகேந்திரன் எழுதிய நிறைகுளம் நாவல் எல்லா வகையிலும் மன நிறைவு தரும் நாவலாக உள்ளது.
நான் அடைந்த இன்பம் எல்லோரும் அடைய இந்நாவலைப் படியுங்கள்.
நானும் இன்னும் பலமுறை வாசிப்பேன்.
மா.காமராஜ்
ஓய்வு ஆசிரியர்
A.V.M. மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளி
விளாம்பட்டி, சிவகாசி