நிலக்கடலை – ‍நினைவாற்றலின் மறுபெயர்

நிலக்கடலை என்றவுடன் அதனுடைய சுவையும், மணமும் நினைவிற்கு வரும்.

என்னுடைய சிறுவயதில் நிலக்கடலைக் காட்டிற்கு கடலை எடுக்கும் சமயத்தில் சென்றுள்ளேன். அதனை வேருடன் பிடுங்கி உதிர்த்து சுட்டு உண்ட சுவை இன்னும் என் நினைவில் இருக்கிறது.

அவ்வளவு அட்டகாசமான நிலக்கடலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நிலக்கடலையானது இன்றைக்கு உலகெங்கும் பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் இவை அவற்றிலிருந்து பெறப்படும் எண்ணெய்காக வர்த்தக நோக்கில் பயிர் செய்யப்படுகின்றன.

பயிராகும் 80 சதவீதம் நிலக்கடலையானது கடலை எண்ணெயாக மாற்றப்படுகிறது. இதனை பெரும்பாலோர் கொட்டை வகையைச் சார்ந்தது என்று கருதுகின்றனர். உண்மையில் இது பயறு வகையைச் சார்ந்தது.

நிலக்கடலையின் அமைப்பு மற்றும் வளரியல்பு

நிலக்கடலையானது சிறுசெடி வகைத் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது. இது செழித்து வளர அதிக வெப்பமும், நீரும் தேவை.

இத்தாவரத்திலிருந்து மஞ்சள் நிறத்தில் பூக்கள் தோன்றுகின்றன. இப்பூக்களில தன்மகரந்தச்சேர்க்கை நடைபெற்றபின்பு பூமிக்கு அடியில் நிலக்கடலைத் தோற்றுவிக்கப்படுகிறது.

 

கடலைப்பூ
கடலைப்பூ

 

நன்கு கடலை விளைந்ததும் கடலைச் செடியில் உள்ள இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும். இந்த அறிகுறி மூலம் கடலை அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக கடலையானது விதைத்து 120 முதல் 150 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிறது. அறுவடைக்கு முதல்நாள் கடலைகாடு முழுவதும் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. அறுவடை செய்யும்போது முழுதாவரமும் பிடுங்கி எடுக்கப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது.

 

அறுவடை செய்யப்பட்ட கடலைத் தாவரம்
அறுவடை செய்யப்பட்ட கடலைத் தாவரம்

 

ஒரு கடலை தாவரத்தில் 10 முதல் 150 வரை கடலைகள் கொத்தாகக் காணப்படுகின்றன. நிலக்கடலையின் வெளிப்புறமானது பழுப்புநிறத்தில் தடித்த மேற்புறத்தில் சுருக்கங்கள் கொண்டு இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிந்து காணப்படும்.

 

அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை
அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை

 

இதற்குள் கடலைபருப்பு உள்ளது. கடலைப்பருப்பின் மேற்புறம் மெல்லிய சிவந்த தோலானது காணப்படும். கடலைப்பருப்பு வெள்ளை நிறத்தில் இருபுறங்களைக் கொண்டதாக இருக்கும்.

கடலையானது இருபுற வெடிகனி வகையான ஃபேபேசி குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் அராக்கிஸ் ஹைபோசியா ஆகும்.

நிலக்கடலையின் வரலாறு

நிலக்கடலையின் தாயகம் தென்அமெரிக்க நாடான பிரேசில் மற்றும் பெரு எனக் கருதப்படுகிறது. இங்கு சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலையைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் தென்அமெரிக்காவில் நிலக்கடலை வடிவத்தில் தயார் செய்யப்பட்ட கொள்கலன்களும், நிலக்கடலையால் அலங்கரிக்கப்பட்ட பாத்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்கா இனமக்கள் இறந்தவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக அவர்களின் உடலோடு நிலக்கடலையைப் புதைத்தனர். மத்திய பிரேசிலில் வாழ்ந்த பழங்குடியினர் நிலக்கடலையில் தயார் செய்யப்பட்ட பானங்களை விரும்பி அருந்தினர்.

தென்அமெரிக்காவில் இருந்து கடலையானது ஆப்பிரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் ஆப்பிரிக்க அடிமைகளின் உணவாக அறிமுகப்படுத்தப்பட்ட இது, நாளடைவில் அங்கு செல்வாக்கு பெற்றது.

தற்போது இந்தியா, சீனா, ஐக்கிய அமெரிக்கா ஆகியவை அதிகளவு கடலையை உற்பத்தி செய்கின்றன.

நிலக்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

நிலக்கடலையில் விட்டமின் பி3 (நியாசின்), பி9 (ஃபோலேட்டுகள்), பி1 (தயாமின்), இ ஆகியவை அதிகளவும், விட்டமின் பி2 (ரிபோஃப்ளோவின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), பி6 (பைரிடாக்ஸின்) ஆகியவையும் காணப்படுகின்றன.

மேலும் இதில் தாதுஉப்புக்களான செம்புச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகளவும், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன.

இதில் அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவையும், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.

நிலக்கடலை – மருத்துவப் பண்புகள்

இதய நலத்திற்கு

நிலக்கடலையில் காணப்படும் விட்டமின் இ, நியாசின், ஃபோலேட்டுகள், புரதங்கள், மாங்கனீசு, ரெஸ்வெரடால் போன்றவை இதய நலத்தை மேம்படுத்துகின்றன.

இதில் நிறைவுறாக் கொழுப்புகளே அதிகம் காணப்படுகின்றன. இவை இதயநலத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால் இதனை உண்டு இதயநலத்தை மேம்படுத்தலாம்.

நினைவாற்றலை அதிகரிக்க

நிலக்கடலையானது மூளையின் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் உணவாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள விட்டமின் பி3 (நியாசின்) மூளையின் நினைவாற்றலை அதிகரிப்பதோடு அதனைச் சிறப்பாக செயல்படவும் தூண்டுகிறது.

மேலும் இதில் உள்ள ரெஸ்வெரடால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்க காரணமாகிறது. மேலும் கடலையை உண்ணும்போது பார்க்கின்சன், அல்சீமர்ஸ் நோய்கள் பாதிப்பு ஏற்படாமல் நம்மை பாதுகாக்கின்றன.

மனஅழுத்தத்தைக் குறைக்க

மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்க செரோடோனின் என்ற வேதிப்பொருள் அவசியமானது. கடலையை உண்ணும்போது அதில் டிரிப்தோபன் செரோடோனின் வேதிப்பொருள் சுரப்பினை தூண்டுகிறது. எனவே கடலையை உண்டு மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.

ஆரோக்கியமான உடல்எடைக் குறைப்பிற்கு

நிலக்கடலையானது புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து நிறைந்த உணவாகும். இதனை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு உண்டாவதுடன் நீண்ட நேரம் பசிஉணர்வு ஏற்படுவதில்லை.

அதேநேரத்தில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. எனவே இதனை உண்டு ஆரோக்கியமான உடல்இழப்பினைப் பெறலாம்.

ஆரோக்கியமான சருமத்திற்கு

நிலக்கடலையில் உள்ள விட்டமின் இ மற்றும் பி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள கொழுப்பானது சருமச்செல்களைப் பாதுகாப்பதுடன் சருமம் அதனுடைய ஈரப்பதத்தை இழக்காமல் பளபளக்கச் செய்கிறது. எனவே கடலையை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்.

கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு

கடலையில் காணப்படும் ஃபேலேட்டுகள் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஃபோலேட்டுகளை வழங்குகிறது. ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தையானது குறைபாடுகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க அவசியமானது.

கடலையானது பெரும்பாலும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை. மேலும் இதில் காணப்படும் செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிடவைகள் கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குடல் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்க

கடலையில் உள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது. கடலையில் உள்ள பீட்டா கௌமரிக் அமிலமானது நைட்ரோசோமைன் எனப்படும் நச்சுப்பொருள் குடலில் உருவாவதைத் தடைசெய்கிறது. இதனால் குடல்புற்று நோய் தடைசெய்யப்படுகிறது.

வாரம் இருமுறை கடலையை உட்கொள்வதால் 25 முதல் 58 சதவீதம் வரை புற்றுநோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பித்தநீர்க்கட்டி உருவாவதைத் தடுத்தல்

கடலையினை உண்ணும்போது அதில் உள்ள நிறைவுறா கொழுப்புக்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடைசெய்கிறது. கொழுப்புக்கள் உடலில் சேர்வது தடைசெய்யப்படுவதால் பித்தநீர்க்கட்டி உருவாக்கம் தடுக்கப்படுகிறது.

நிலக்கடலையை வாங்கி உபயோகிக்கும் முறை

நிலக்கடலையை தோலுடன் வாங்கும்போது கனமானதாக, ஒரே சீரான நிறத்துடன், உப்பியதாகவும், கெட்டுப்போன வாடை இல்லாததாகவும் உள்ளவற்றை வாங்க வேண்டும். உடைத்த கடலையை குளிர்பதனப்பெட்டியில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.

கடலையானது வறுத்தோ, அவித்தோ, அப்படியேவோ உண்ணப்படுகிறது. இதிலிருந்து எண்ணெய், வெண்ணெய் எடுக்கப்படுகிறது. இனிப்புகள், சாலட்டுகள், சட்னி ஆகியவை தயாரிக்க கடலை பயன்படுத்தப்படுகிறது.

நினைவாற்றலை அதிகரிக்கும் நிலக்கடலையை அடிக்கடி உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.