உயரமான நிலப்பகுதியிலிருந்து மண், பாறைகள், சகதி ஆகியவை கீழ்நோக்கி நகர்வதே நிலச்சரிவு எனப்படும்.
பாறைத்துகள்கள் நீருடன் சேர்ந்து நகர்வதையே சேறு வழிதல் எனப்படுகிறது. நிலச்சரிவானது இயற்கை நிகழ்வுகள் மற்றும் மனித செய்கைகளால் ஏற்படுகின்றது.
கனத்த மழைப் பொழிவு, நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், காட்டுத்தீ ஆகியவை நிலச்சரிவினை ஏற்படுக்கூடிய இயற்கை நிகழ்வுகளாகும்.
காடுகள் அழிப்பு, முறைக்கேடான கட்டிட அமைப்பு, மலைகளைக் குடைதல், இயற்கை வடிகால் அமைப்புகளை மாற்றியமைத்தல் ஆகிய மனித செய்கைகளாலும் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலும் நிலச்சரிவுகள் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் ஏற்படுகின்றது. இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் அதிகஅளவு நிலச்சரிவானது நிகழ்கின்றது.
நிலச்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்
நீரானது நீர்ஊற்று போல் வெளியேறுவது,
கட்டிடச் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு அது விரிந்து கொண்டே போவது,
மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கொண்டே செல்லல்,
பாதைகள் கீழிறங்கிச் செல்லல் போன்றவற்றின் மூலம் நிலச்சரிவு ஏற்படப்போவதை அறிந்து கொள்ளலாம்.
நிலச்சரிவின் பாதிப்புகள்
நிலச்சரிவினால் வேளாண்மை உற்பத்தி பாதிக்கப்படுகின்றன.
குடியிருப்புகள் அழிக்கப்படுகின்றன.
சாலைகள் மற்றும் இருப்புப்பாதைகள் சேதமடைகின்றன.
நீரோடைகளின் போக்கு வேறு திசையில் மாற்றப்படுகின்றன.
பேரிடர் தணித்தல்
மிருதுவான மண் உள்ள பகுதிகளில் வீடுகள் கட்ட வேண்டியிருந்தால் நிலச்சரிவின் போது பாறைத்துகள்கள் விலகிச் செல்ல ஏதுவாக மாற்றுப்பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படும் முன் எச்சரிக்கை அறிவிப்புகளாக கதவுகள், ஜன்னல்கள் இறுகிக் கொள்ளும்.
மண்சரிவால் தெருக்கள் அடைபட வாய்ப்புகள் உள்ளதால் உடனடியாக தப்பிக்க குறைந்தது இரண்டு அல்லது மூன்று மாற்றுப் பாதைகளைத் திட்டமிட்டு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நிலச்சரிவின் போது வீட்டினுள் இருக்க நேர்ந்தால் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
நிலச்சரிவினால் தப்பிக்க இயலாத நிலை ஏற்படும் போது கழுத்தின் பின்புறம் இரு கைகளையும் இணைத்து மண்டியிட்டோ அல்லது அமர்ந்த நிலையிலோ இருக்க வேண்டும்.
நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைத்து காயங்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படுவதற்கு முக்கிய காரணி காடழிப்பே ஆகும். மலைச்சரிவுகளில் மரங்களை வெட்டுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. எனவே இவ்வகை அழிவைத் தடுக்க அதிக அளவில் மரங்களை வளர்த்தலே சிறந்த வழியாகும்.