நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்

திருமால் இவ்வுலகத்தைத் தன் திருவடியால் அளந்த வரலாற்றை பன்னெடுங்காலம் முதலாக நம் இலக்கியங்களில் போற்றப்படுவதைக் காணும் போது நம் சமய பழமையை எண்ணி மகிழ்வெய்துகின்றோம்.

சங்க இலக்கியமான பதிணென் மேல்கணக்கு நூலில் பத்துப்பாட்டில் அடங்கிய பெரும்பாணாற்றுப்படையில்

“இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன்” என்று

இந்த பூமியை தன்னுடைய திருவடியால் அளந்தவன், இலக்குமியை தன்னுடைய மார்பில் வைத்துள்ள கடல்நிற வண்ணன் என்று அழகாகக் குறிப்பிடுவதை காண்கின்றோம்.

முல்லைப்பாட்டில்,

 நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
 வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
 நீர்செல நமிர்ந்த மாஅல்போல்”

அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்துடன், வலம்புரி சங்கின் குறிகள் பொறிக்கப்பட்டு திருமகளை அணைத்துள்ளவன், மாவலியிடம் நீர் ஊற்றி தானம் கொடுத்த அளவில் திரிவிக்கிரம கோலத்துடன் உயர்ந்து நின்ற திருமால் என்று காட்சிப்படுத்தியுள்ளதை படித்து இன்புறுவோம்.

திருவள்ளுவர்,

    மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
    தாயது எல்லாம் ஒருங்கு.  

சோம்பல் இல்லாத அரசன், திருமால் தாவி அளந்த தேவலோகம், பூலோகம் ஆகிய இரண்டையும் சேர்த்து ஆளலாம் என்று, திருமால் உலகளந்ததையும் காட்டுகின்றார்.

இதேகாட்சியை இளங்கோவடிகள்

     “திரண்டமரர் தொழுதேத்தும் திருமால் நின் செங்கமல
      இரண்டடியால்  மூவுலகும் இருள் தீர நடந்தனையே” என்றும்

அமரர் அனைவரும் கூடி வணங்கிப் போற்றும் திருமாலே! அன்று நீ உனது சிவந்த தாமரை மலர் போன்ற இரண்டு அடிகளால் மூன்று உலகங்களும் இருள் விலக நடந்தாய்.

     “மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகை முடியத்
       தாவிய சேவடிசேப்ப” என்றும் 

மூவுலகங்களும் இரண்டு அடிகளில் அடங்கும்படி தாவி அளந்த அந்த சிவந்த சேவடிகள் என்று போற்றுகின்றார்.

இச்செய்தியை திருமங்கையாழ்வார்

      ஒண்மதியற் புனலுருவி ஒருகால் நிற்ப
          ஒரு காலும் காமரு சீரவுணனுள்ளத்து 
       எண் மதியும் கடந்து அண்டமீது போகி
           இரு விசும்பினூடு போயெழுந்து மேலைத்
       தண்மதியும்  கதிரவுனும் தவிரவோடித்
            தாரகையின் புறம் தடவி  அப்பால் மிக்கு
       மண்முழுதும்  அகப்படுத்து நின்ற எந்தை
            மலர் புரையும் திருவடியே வணங்கினேனே

திருமால் உலகத்தை அளக்கும் போது ஒரு திருவடி பாதாளம் வரை சென்று நின்றது. மற்றோரு திருவடி சந்திர, சூரிய மண்டலத்தைக் கடந்து நட்சத்திர மண்டலத்தையும் கடந்து பின்னும் மேலே சென்று பிரமனுடைய உலகம் வரை சென்றது. ஆக ஈரேழு உலகத்தையும் தன் திருவடிகளால் அளந்ததை ஆழ்வார் அனுபவித்த இன்தமிழில் காண்கின்றோம்.

ஆண்டாள் நாச்சியார்,

           “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்றும்

           “அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த
             உம்பர் கோமானே” என்று பாடி களிப்பூட்டுகின்றார்.

இப்படி நம் பண்டைய இலக்கியங்கள் வாயிலாக ஆன்மீகச் செய்திகளையும் அழகுத் தமிழையும் உணர்ந்து ஓதி இன்புற இறைஞ்சுகின்றேன்.

ஒவ்வாக் கருத்துகளை ஒலித்து பக்தியையும் தமிழையும் பிரிக்கும் கூட்டத்தாரிடம் கவனமாக இல்லையானால் தமிழையும் இழப்போம், நம் பண்பாட்டையும் இழப்போம்.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 9444410450

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.