நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா?

நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? தெரிந்து கொள்ள தாய்லாந்து நாட்டின் இக்கதையைத் தொடர்ந்து படியுங்கள்.

முன்னொரு காலத்தில் நட்சத்திரத்தாய் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு சூரியன், நிலா, காற்று என்ற மூன்று மகன்கள் இருந்தனர்.

ஒரு சமயம் விண்ணரசன் வீட்டில் நடைபெறவிருந்த விழாவில் கலந்து கொள்ள நட்சத்திரத்தாய்க்கு அழைப்பு வந்தது.

நட்சத்திரத்தாய் உடல்நலம் இன்மையால் தன்னுடைய புதல்வர்களான சூரியன், நிலா, காற்று ஆகிய மூவரையும் விண்ணரசனின் விழாவில் கலந்து கொள்ளுமாறு அனுப்பி வைத்தாள்.

புதல்வர்கள் மூவரும் சந்தோசத்துடன் விருந்திற்குச் சென்றனர். 

விண்ணரசனின் வீட்டு விழாவில் தடபுடலாக விருந்து நடைபெற்றது. விருந்தில் இனிப்புகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. சூரியனும், காற்றும் வயிறார உணவினை உண்டனர்.  தம் தாயை மறந்தனர்.

நிலா தனக்கு வைத்த உணவுகள் ஒன்வொன்றிலும் இருந்து சிறிதளவினை எடுத்து தன்னுடைய தாய்க்கு பத்திரப்படுத்தி விட்டு மீதத்தை உண்டான். பின்னர் மூவரும் தம்முடைய வீட்டிற்குத் திரும்பினர்.

நட்சத்திரத்தாய் தம்முடைய குழந்தைகளை வரவேற்று விண்ணரசனின் வீட்டு விழாவினைப் பற்றி விசாரித்தாள்.

சூரியனும் காற்றும் விண்ணரசன் கொடுத்த விருந்தினைப் புகழ்ந்தனர். நிலா தான் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை நட்சத்திரத்தாயிடம் தந்தான்.

நட்சத்திரத்தாய் சூரியன் மற்றும் காற்றினைப் பார்த்து “நீங்கள் ஏன் விருந்திலிருந்து உணவுப் பதார்த்தங்களை கொண்டு வரவில்லை?” என்று கேட்டாள்.

அதற்கு சூரியனும் காற்றும் “விருந்தில் எங்களுக்கு மட்டுமே உணவினைப் பரிமாறினார்கள். விருந்து உணவு எங்களுக்கு மட்டும் போதுமானதாக இருந்தது” என்றனர்.

நிலா தன் தாயிடம் “எனக்கு பரிமாறப்பட்ட உணவில் சிறிதளவினை எடுத்து உனக்காக பத்திரப்படுத்திக் கொண்டு வந்தேன் அம்மா” என்றான்.

இதனைக் கேட்டதும் நட்சத்திரத்தாய் நிலாவினைப் பார்த்து “என் அருமை மகனே, நீ எனக்கு கொடுத்த உணவுப் பொருட்களால் என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

என் வயிறு நிரம்பி குளிர்ந்துள்ளது. அதேபோல் உன்னுடைய ஒளியானது குளிர்ச்சியாகவும், மனநிறைவையும் மக்களுக்குத் தரும். உன்னையும், உன்னுடைய ஒளியையும் மக்கள் மிகவும் நேசிப்பர்.

சூரியனே உன்னுடைய ஒளியானது அதிகமாகவும், வெப்பமாகவும் மாறும். உன்னுடைய ஒளி மற்றும் வெப்பத்தால் மக்கள் நிழல் தேடி ஓடுவர். உன்னைத் தூற்றுவர்.

காற்றே வெப்பத்தைக் கொடுக்கும் சூரியன் இருக்கும் நேரத்தில் நீ அனல் காற்றாக வீசுவாய். மக்களால் நீ வெறுக்கப்படுவாய்” என்று கூறினாள்.

நட்சத்திரத்தாய் கூறியதுபடி நிலவின் ஒளியானது குளிர்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

சூரியன் அதிக வெப்பத்தையும், ஒளியையும் கொடுப்பதால் நாம் சூரியன் இருக்கும் நேரத்தில் நிழலினைத் தேடி ஓட வேண்டியுள்ளது.

சூரியன் இருக்கும் நேரத்தில் காற்றும் அனலாக வீசி மக்களிடையே வெறுப்பினை உண்டாக்குகிறது.

நம் முன்னேற்றத்திற்கு காரணமான பெற்றோர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதை நிலவின் ஒளி குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? என்ற கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.