நிலாவாரை இலைகள் கசப்பும் குமட்டலான சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. பேதி, மூலம், வாத, பித்த கப நோய்களைக் கட்டுப்படுத்தும். மலமிளக்கும்; வாயு, கீல்வாயு, பக்க வாதம், சூலைநோய், நரம்பு இசிவு ஆகியவற்றை குணமாக்கும்; வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.
1.5 செமீ வரை உயரமான இரட்டையான கூட்டிலைகள் கொண்ட குறுஞ்செடி வகை தாவரம். மலர்கள் தொகுப்பாக, கொத்தாக அமைந்தவை. இதழ்கள் மஞ்சள் நிறமானவை. கனி தட்டையானவை. குட்டையான காம்புகளைக் கொண்டது. விதைகள் முட்டை வடிவமானவை. சவ்வு போன்றவை.
நில ஆவாரை, நில வாகை, ஆலகாலம், ஆவாகை போன்ற முக்கிய மாற்றுப் பெயர்களும் உண்டு. சமவெளிகள், மலை அடிவாரங்களில் பரவலாக வளர்கின்றன. பயிர் செய்யப்படும் நிலங்களுக்கு அருகிலும் அரிதாக காணப்படும். இலைகளே மருத்துவத்தில் பயன்படுபவை. இவை காய்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தென்னிந்தியாவைப் பொருத்த மட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் வளரும் நிலாவாரை சிறந்ததென கண்டறியப்பட்டுள்ளது. இங்கிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மலச்சிக்கல் தீர இலையைத் தூள் செய்து கொண்டு 2 கிராம் முதல் 3 கிராம் அளவு இரவில் வெந்நீருடன் சாப்பிட வேண்டும்.
வயிற்று உப்புசம் குணமாக நிலாவாரை இலையைத்தூள் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீருடன் ஒரு வேளை உணவுக்குப் பின்னர் சாப்பிட வேண்டும்.
சொறி சிரங்கு குணமாக ஒரு கைப்பிடி இலைகளை ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவ வேண்டும்.