நிலா – கவிதை

சேந்தும் போது

பிரிதியாய் துள்ளி குதிக்கிறது

கிணற்றில்

வாளியில் இருந்த நிலா

 

ஆற்றின் அலைகளில் மின்னி

சிதறி மிதக்கின்றன

தேங்காயின் துகள்களாய்

உடைந்த அதே நிலா

 

பரிசத்தில் பயணிக்கும்

பேசும் நிலவோடு

மவுனமாய் தொடர்கிறது

வான்நிலா

 

வான அலையில்

தின்னமுடியாமல் மூழ்கி ஏமாறுகின்றன

கருமுகில்கள்

நட்சத்திரக் கெண்டைகளை

 

அடர்ந்து கிடக்கும் நாணல்களில் சிக்காமல்

நதியில் நுழைந்து செல்லும்

நிலவின் மீது அமர்ந்து கொண்டபடி

சருகோடு எறும்பொன்று

 

கரையேறி

பாலை கடக்கும் போது கையசைக்கும்

முகில் அமர்ந்து போகும் நிலவுக்கு

ஈச்சை மரங்கள்

 

மலைமீதேறி

பள்ளத்தாக்கில் நீராட இறங்கும் போது

சூரியனின் ஓரப் பார்வை பட

திரையிட்டு மறைத்துக் கொண்டது

நாணமேவும் நிலா

 

ஆனாலும்

அடிக்கடி வளர்வதும் தேய்வதுமாக

இருக்கிறது

நனவிலும் கனவிலும் அந்த நிலா

கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432

One Reply to “நிலா – கவிதை”

  1. நாணமேவும் நிலா, தேங்காயின் துகள்களாய்

    உடைந்த அதே நிலா நல்ல நயமான உவமை… கவிதையின் பழமைத்துவம்( கவிதைப்பொருள்) இன்னும் மாறாமல் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.