நில மாசுபாடு என்பது நேரடியான அல்லது மறைமுகமான மனித செயல்பாடுகளால் புவியின் மேற்பரப்பான நிலம், அதில் உள்ள மண் ஆகியவற்றின் இயற்கை வளங்களை பாதிப்படையச் செய்யும் நிகழ்வே ஆகும்.
நகர்புற மற்றும் தொழில்துறை திட மற்றும் திரவக் கழிவுகளை ஏடாகூடமாகக் கொட்டுதல், மண்ணில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுதல், விவசாயத்திற்கு தெளிக்கப்படும் பூச்சி கொல்லிகள், காடுகளை அழித்தல் போன்றவை நில மாசுபாடு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.
பெருகி வரும் நகர்புறமாதல், தொழிற்சாலைகள் அதிகரிப்பு மற்றும் நிலத்தின் இயற்கை வளங்களின் தேவை அதிகரித்தல் போன்றவற்றின் காரணமாக நில மாசுபாடு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி எல்லா நாடுகளும் யோசிக்கத் தொடங்கிவிட்டன. இன்னும் சில ஆண்டுகளில் இது தீர்க்க முடியாத பிரச்சினையாகி விடும். எனவே இது குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
இனி இதன் காரணங்கள், இதன் விளைவுகள் மற்றும் இதற்கான தீர்வுகள் குறித்து காணலாம்.
நில மாசுபாட்டின் காரணங்கள்
காடழிப்பு மற்றும் மண்அரிப்பு
மனித பொருளாதார தரத்தை உயர்த்தும் பணிகளான கட்டுமானப்பணிகள், சுரங்கங்கள் அமைத்தல், விவசாயம் போன்றவற்றிற்காக காடுகள் பெரும் அளவு அழிக்கப்படுகின்றன.
காடுகளில் உள்ள மரங்கள் சூரியனிடமிருந்து பெறப்படும் வெப்பத்தில் 20 சதவீதத்தினை வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்பி நிலத்தினை வெப்பத்திலிருந்து பாதுகாக்கின்றது.
காடுகளை அழிப்பதால் நிலமானது சூரிய வெப்பம் மற்றும் மழையினால் நேரிடையாக பாதிப்படைவதோடு மண்அரிப்பு உண்டாகுகிறது. எனவே மண் தனது வளத்தினை இழப்பதோடு தரிசாக மாறுகிறது. இதனால் நிலம் பயனற்றதாகி விடுகிறது.
வேளாண் நடவடிக்கைகள்
நாள்தோறும் பெருகிவரும் மக்கள்தொகை காரணமாக உணவுத் தேவையின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் வேளாண்மையில் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இச்செயற்கைப் பொருள்களின் பயன்பாடு பெருகி வருதால் அவை நிலத்தில் ஊடுருவி நிலத்தின் இயற்கைத் தன்மையைப் பாதிப்படையச் செய்கின்றன.
சுரங்கச் செயல்பாடுகள்
சுரங்கத்திற்காக காடழிப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் மண்அரிப்பு ஏற்பட்டு நிலம் தனது வளத்தினை இழந்து தரிசாகிறது.
மேலும் சுரங்கங்ளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களான இரும்பு, தாமிரம், அலுமினியம், பாதரசம் மற்றம் ஈயம் போன்றவை நிலச்சீர்கேட்டினை ஏற்படுத்துவதுடன் அவை நீரினையும் மாசடையச் செய்கின்றன.
சுரங்கங்களை அமைப்பதால் புவிமேற்பரப்பிற்கு அடியில் நில இடைவெளியை உருவாக்குகின்றன. இவை பேராபத்தை உண்டாக்குகின்றன.
கழிவுகளைக் கொட்டுதல்
துணிகள், பிளாஸ்டிக், மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர் போன்ற வீடு மற்றும் நகர்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மக்கும் தன்மை உடையவை; பல மட்காத தன்மை உடையவை. மட்காத பொருட்கள் குழி தோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச்சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது.
தொழிற்சாலைகளின் பெருக்கம்
நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகியவற்றில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
கழிவுநீர் சுத்திகரிப்பு
கழிவுநீரினைச் சுத்திகரிக்கும்போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நிலமாசுபாட்டினையும், எரிக்கும்போது காற்று மாசுபாட்டினையும் ஏற்படுத்துகின்றன.
கட்டுமானப்பொருட்கள்
நகர்புறமாதலின் விளைவாக அதிகளவு கட்டுமானங்கள் நடைபெறுகின்றன. இதனால் அவற்றிலிருந்து மரம், உலோகங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுகின்றன. இவை நிலத்தினை மாசுபடுத்துகின்றன.
இரசாயன மற்றும் அணுஉலைகள்
இரசாயன மற்றும் அணு உலைகளிலிருந்து வேதியியல் மற்றும் கதிரியக்கக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை மனித உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிப்பவை. இவை பூமிக்கடியில் குழிதோண்டி புதைக்கப்படுகின்றன. இதனால் நிலச்சீர்கேடு ஏற்படுகிறது.
நில மாசுபாட்டின் விளைவுகள்
நில மாசுபாட்டினால் மனிதர்கள், விலங்குகள், நீர் மற்றும் சுற்றுசூழலில் பேரழிவு விளைவுகள் நிகழ்கின்றன.
நிலத்தில் கொட்டப்படும் குப்பைகள் மறுசுழற்சி செய்யமுடிந்தவை, மறுபடியும் உபயோகிக்க முடிந்தவை, மற்றும் கனிம பொருட்கள் எனப்பிரிக்கபடாமல் விடப்பட்டால் அதன் விளைவானது கடுமையாக இருக்கும்.
மண்ணின் தன்மை மாறுதல்
நில மாசுபாட்டினால் மண் தன் இயற்கைப்பண்புகளை இழந்துவிடுகிறது. இதனால் மண் வறண்டு பயனற்றதாகி விடுகிறது. காடுகள், மேய்சல்நிலங்கள், வேளாண்மை போன்றவை பாதிக்கப்படுகின்றன. இதனால் உணவு மற்றும் பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும்.
நில மாசுபாட்டால் மண் தன் வளத்தினை இழப்பதால் காடுகள் குறைகின்றன. இதனால் மழைப்பொழிவு குறைகிறது. வறட்சி ஏற்படுகின்றது.
பருவநிலை மாறுபாடுகள்
நில மாசுபாட்டால் சுற்றுசூழலில் கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன. இம்மாசுபாடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பருவநிலை மாறுபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள் வெளியிடும் வாயுக்களால் புவி வெப்பமயமாதல் மற்றும் பசுமை இல்ல விளைவு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் அதிக மழைப் பொழிவு, திடீர் வெள்ளம், போதிய மழையின்மை போன்ற பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
காற்று மாசுபாடு
நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள் மலைபோல் குவிவதால் அவை பெரும்பாலும் தீ வைக்கப்படுகின்றன. இதனால் காற்று மாசுபாடு அடைகின்றது.
கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எலிகள், கரப்பான்கள் போன்றவை உருவாகி அவை மனிதர்களுக்கு நோயினை தோற்றுவிக்கின்றன. குப்பைகள் துர்நாற்றத்தையும், மீதேன் போன்ற வாயுக்களையும் உருவாக்கி காற்று மாசுபாட்டினை உருவாக்குகின்றன.
மனித நலம் பாதிக்கப்படுதல்
பூச்சிகொல்லிகள், செயற்கை உரங்கள் மற்றும் நிலத்தில் கொட்டப்படும் நச்சுக் கழிவுகளால் மனிதனுக்கு தோல் புற்று நோய் ஏற்படுகின்றது. மேலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன.
மாசடைந்த நிலத்தில் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை நாம் உண்ணுவதால் அவை நம் உடலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
விலங்குகள் பாதிப்பு
நில மாசுபாட்டினால் விலங்குகள் வேறு இடத்திற்கு புலம்பெயர்கின்றன அல்லது அவை இம்மாசுபாட்டினை சமாளித்து வாழ்கையில் உயிர் இழக்கின்றன.
நிலமாசுபாட்டினைத் தடுக்கும் வழிகள்
கழிவுப் பொருட்களின் மறுசுழற்சி, மறுபயன்பாடு, கழிவுப் பொருட்களைக் குறைத்தல் போன்றவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
வேளாண்மைக்கு செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் ஆகியவற்றைத் தவிர்த்து இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதோடு இயற்கை வேளாண்மை செய்ய வலியுறுத்துதல் அவசியம்.
குப்பைகளை உருவாக்கும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
கழிவுகளை சரியான முறையில் அகற்ற வேண்டும்.
மக்கும் பொருட்களை வாங்கி உயோகிக்க வேண்டும்.
செயற்கை பூச்சிகொல்லி பயன்படுத்தாத பொருட்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்.
இயற்கை விவசாயத்தை ஆதரிக்க வேண்டும்.
கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டக்கூடாது.
ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் உருவாகும் குப்பைகளில் மறுசுழற்சி செய்ய முடிந்தவை மற்றும் மறுபயன்பாடு உடையவை ஆகியவற்றைப் பிரித்து அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதனை ஒவ்வொருவரும் தமது கடமையாகக் கருத வேண்டும்.
கழிவுப் பொருட்களைக் குறைப்போம். நிலமாசுபாட்டினைத் தவிர்ப்போம்.
– வ.முனீஸ்வரன்
நல்ல கருத்துக்களைக் கூறி வருகிறீர்கள்.
நன்று…😎❤