நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்

மழைக்காடுகள்

நில வாழிடம் வாழிடத்தின் பிரிவுகளில் ஒன்று. இவ்வாழிடம் காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள், மலைகள், ஈரநிலம் ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.

நிலவாழிடமானது அதிக மாற்றங்களைக் கொண்டது. இவ்வாழிடத்தின் உயரம் கடல் மட்டத்திற்கு கீழே உள்ள பள்ளத்தாக்கில் தொடங்கி 28,000 அடி உயரம் வரை உள்ள மலைஉச்சி வரை உள்ளது.

நிலவாழிடத்தில் வெப்பநிலையானது கணிசமான அளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது இவ்வாழ்விடத்தில் குறைந்த வெப்பநிலை -60 டிகிரி செல்சியஸாகவும், அதிக வெப்பநிலை 60 டிகிரி செல்சியஸாகவும் உள்ளது.

இவ்வாழ்விடத்தில் உள்ள மண், மணல் மற்றும் பாறைகள் அதிகளவு இயற்பியல் மற்றும் வேதியியல் வேறுபாடுகளைப் பெற்றிருக்கின்றன.

இங்கு நிலவும் காலநிலை, மழைப்பொழிவு, ஈரப்பதத்தின் அளவு ஆகியவையும் பெரும் மாறுதல்களைக் கொண்டுள்ளன.

 

காடுகள்

வாழிட அடிப்படையில் காடுகள் மழைக்காடுகள், இலையுதிர்காடுகள், தூந்திரா, டைகா என பிரிக்கப்படுகின்றன.

 

மழைக்காடுகள்

மழைக்காடுகள்
மழைக்காடுகள்

வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் அதிக மழைப்பொழிவின் காரணமாக அகன்ற இலைகளை உடைய மழைக்காடுகள் காணப்படுகின்றன.

இப்பகுதிகளில் பற்றுக்கம்பியுள்ள கொடிவகைத் தாவரங்கள், ஒருவித்திலை கொண்ட பூக்கும் தாவரமான ஆர்க்கிட்டுகள், தான் ஒட்டியுள்ள தாவரத்திற்கு தீங்கு செய்யாத மேலொட்டிகள் உள்ளிட்ட தாவரங்கள் காணப்படுகின்றன.

இங்கு குரங்குகள், தேவாங்குகள், எறும்பு தின்னிகள், வெளவ்வால்கள், பலவண்ண பறவைகள், தவளைகள், ஆமைகள், சாலமண்டர்கள், பாம்புகள் உள்ளிட்ட விலங்கினங்கள் காணப்படுகின்றன.

 

இலையுதிர் காடுகள்

இலையுதிர் காடுகள்
இலையுதிர் காடுகள்

 

இப்பகுதியானது வெப்பமான கோடையையும், குளிரான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது. இப்பகுதியில் ஆண்டுமுழுவதும் 1000 மிமீ மழைப்பொழிவினைப் பெறுகிறது. இப்பகுதியில் மழைப்பொழிவு சீராக உள்ளது.

இங்குள்ள மரங்கள் பரந்த இலைகளைக் கொண்டு கோடையில் இலைகளை உதிர்த்து பின் வசந்தத்தில் முளைக்கின்றன.

பீச், மேப்பிள்ஸ், ஓக், வால்நட்ஸ் உள்ளிட்ட மரங்கள் இங்கு காணப்படுகின்றன.

மான்கள், சாம்பல் நரிகள், ரக்கூன்கள், பறக்கும் அணில்கள், பலவகையான பாம்புகள், இருவாழ்விகள் உள்ளிட்ட முதுகெலும்புள்ள விலங்குகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

 

தூந்திரா

தூந்திரா
தூந்திரா

 

வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பகுதிகளில் உள்ள ஆர்க்டிக் பிரதேசம் தூந்திரா என்றழைக்கப்படுகிறது.

மரங்களற்ற இப்பகுதி மிககுறைந்த ஒளி அல்லது ஒளியற்ற நீண்ட குளிரான குளிர்காலத்தைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் கோடைகாலமானது குறுக்கிய காலஅளவு கொண்டு குளிராகவும் நீண்ட பகல் பொழுதினையும் பெற்றுள்ளது.

இங்கு உறைதல் நிகழ்வானது எந்த நேரத்திலும் சாதாரணமாக நிகழும். இங்கு மண்ணானது சில அங்குல ஆழத்தில் மட்டும் காணப்படுகிறது. இப்பகுதியில் குளங்கள், சதுப்புநிலங்கள் அதிகளவு காணப்படுகின்றன.

மோஸ், லிச்சென்ஸ் (இலைக்கன்) உள்ளிட்ட ஆல்காவகைத் தாவரங்கள் இப்பகுதியில் உள்ளன.

இடம்பெயரும் நீர்ப்பறவைகள் இங்கு கோடைகாலத்தில் காணப்படுகின்றன.

ஆர்டிக் முயல்கள், ஆர்டிக் நரிகள், மஸ்க்-எருதுகள், மரநாய்கள், ரெயின்டீர் உள்ளிட்ட விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

 

தைகா

தைகா
தைகா

 

யுரேசியா மற்றும் வடஅமெரிக்காவின் தூந்திரா பகுதிக்கு தெற்கே பரவியுள்ள பகுதி டைகா என்றழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பசுமை மாறாத ஊசியிலைக் காடுகள் காணப்படுகின்றன.

இப்பகுதியானது மிகக்குளிர்ந்த குளிர்காலத்தினையும், குளிர்ந்த கோடை காலத்தினையும் கொண்டுள்ளது. இங்கு மழைப்பொழிவு மிதமாக உள்ளது. கோடைகாலம் இங்கு மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கும்.

இங்கு ஃபிர், ஸ்ப்ரூஸ், பைன்ஸ் உள்ளிட்ட மரங்கள் காணப்படுகின்றன.

லின்க்ஸ் பூனை, சிவப்பு நரிகள், மரநாய்கள், பலவகையான ஊர்வன, கரடிகள், பறவைகள், கொறிணிகள் உள்ளன.

 

புல்வெளிகள்

வாழிடம்

 

வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்களில் குறைவான மழைப்பொழிவுடன் அடர்ந்த புற்களைக் கொண்டுள்ள பகுதிகள் புல்வெளிகள் என்ற அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் காடுகள் மற்றும் பாலைவனங்களுக்கு இடையில் அமைந்துள்ளன.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு புல்வெளிகள் உள்ளன.

ஸ்டெப்பி சவானா, பம்பாஸ், ப்ரிரீஸ் போன்றவை புல்வெளிகளுக்கு உதாரணங்களாகும்.

இங்கு மழைப்பொழிவு 250மிமீ முதல் 1000 மிமீ வரை உள்ளது. ஆனால் மழைப்பொழிவு இங்கு ஓரிர வாரங்கள் மட்டுமே இருக்கும்.

காட்டெருது, ப்ரொன்கான் மான், கயோட்டி ஓநாய், முயல்கள், தரைநாய்கள், பலவகை பாம்புகள், பல்லிகள, லார்க் உள்ளிட்டவைகள் இங்கு காணப்படுகின்றன.

 

பாலைவனங்கள்

பாலைவனம்
பாலைவனம்

 

பாலைவனங்கள் வெப்ப மற்றும் உலர் பாலைவனங்கள், குளிர் பாலைவனங்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

வெப்ப மற்றும் உலர் பாலைவனங்கள்

பாலைவனங்கள் வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் காணப்படுகின்றன. இங்கு மழை மற்றும் ஈரப்பதம் கட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது.

இங்கு ஓர் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 250 மிமீ ஆகும். இங்கு மழைப்பொழிவு சீரற்றதாக உள்ளது.

இங்கு கோடை காலம் மிகவும் வெப்பமானதாகவும், ஆவியாதல் மிகஅதிகமாகவும் இருக்கும். இங்குள்ள உயிரினங்கள் நீரினை தக்கவைத்துக் கொள்ளும் தகவமைப்பினைப் பெற்றுள்ளன.

இங்கு தாவரங்கள் நீரினை தக்க வைக்க பஞ்சு போன்ற இலைப்பகுதியையும், முட்களுடன், ஆழமான வேர்களுடனும் காணப்படுகின்றன.

கள்ளி, கற்றாழை, யூக்கா போன்ற தாவர இனங்கள் இங்கு காணப்படுகின்றன. எலிகள், நரிகள், கயோட்டி ஓநாய்கள், பல்லிகள், பலவகையான பாம்புகள், தேரைகள் போன்றவை இங்கு காணப்படுகின்றன.

 

குளிர் பாலைவனங்கள்

பனிகளால் மூடிய பாலைவனங்கள் குளிர் பாலைவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வடஅமெரிக்காவின் சன்னி தூரிகைப் பகுதியும், சியாரா கஸ்கேட் மலையும் குளிர் பாலைவனத்திற்கு உதாரணங்களாகும்.

இங்கு காலநிலை மிகவும் வறண்டு காணப்படுகிறது. இங்கு கோடை வெப்பமாகவும், குளிர் காலம் குளிராகவும் இருக்கிறது.

ப்ரொன்கான் மான், கயோட்டி ஓநாய், தரைஅணில்கள், பலவகை பாம்புகள், பல்லிகள் ஆகியவை இங்கு காணப்படுகின்றன.

 

மலைகள்

மலை
மலை

உயரமான மலைப்பகுதிகள் அங்குள்ள மலைப்பொழிவு, வெப்பநிலை ஆகியவற்றிற்கு ஏற்ப பல்வேறு வகையான உயிரின அடுக்குகளைப் பெற்றுள்ளன.

மலைகளில் உயரம் செல்லச் செல்ல வெப்பநிலை குறைகிறது. அதே நேரத்தில் மலைச்சரிவுகளில் காலநிலை வேறுவகையாக உள்ளது.

மலைகள் பூமியின் மத்திய பகுதியிலிருந்து துருவப்பகுதி வரை காணப்படுகின்றன. இவ்வாழிடத்தில் உயிரினங்கள் வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன.

 

ஈரநிலங்கள்

ஈரநிலம்
ஈரநிலம்

ஈரநிலம் என்பது ஆண்டில் குறைந்தது ஆறுமாதமாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நீர் இருப்பதைக் குறிக்கும். இப்பகுதியில் தனித்துவமான உயிரினங்கள் காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் உயிர்சூழல் ஏனைய நீர்நிலைகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டும். அன்டார்டிகாவை தவிர உலகின் ஏனைய இடங்களில் ஈரநிலங்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள மண்ணானது ஈரப்பதம் மிகுந்து குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது.

சதுப்பு நிலங்கள், நீர்சூழ்ந்த காட்டுப்பகுதிகள், அலையாத்தி காட்டுப்பகுதிகள, டெல்டா உள்ளிட்டவை ஈரநிலங்கள் எனப்படுகின்றன.

தாமரை, அல்லி உள்ளிட்ட நீர்வாழ் தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.

மீன்கள், இருவாழ்விகள், முதலைகள், சதுப்புநில முயல், காட்டு பூனை, நீர் எலி போன்றவை இங்கு காணப்படுகின்றன.

 

நில வாழிடத்தின் முக்கியத்துவம்

நில வாழிடமானது எண்ணற்ற உயிரிகளுக்கு புகலிடமாக உள்ளது. நிலவாழிடத்தின் 80 சதவீத உயிரினங்கள் காடுகளில் வசிக்கின்றன.

மனிதர்கள் வேட்டையாடுதல், மருந்துப் பொருட்கள், ரப்பர், மூங்கில் உள்ளிட்ட இயற்கைப் பொருட்கள், சிறிய அளவிலான வேளாண்மை, நன்னீர் ஆகியவற்றிற்கு காட்டு வாழிடத்தைச் சார்ந்துள்ளான்.

காட்டு வாழிடமானது பூமியின் நுரையீரலாகச் செயல்படுகிறது. இது கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது.

புல்வெளிகள் மேய்ச்சல் விலங்குகளுக்கு வேண்டிய உணவினை வழங்குகின்றன. புல்வெளிகள் இயற்கை கார்பன் சிங்க் என்று அழைக்கப்படுகின்றன. இவை கார்பன் சுழற்சி என்ற இயற்கை நிகழ்விற்கு காரணமாகின்றன.

கார்பன் சுழற்சி என்பது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடைத் தேவையான அளவு பெற்று பூமியின் வெப்பநிலை சீராக வைப்பதாகும்.

மலைவாழிடமானது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பனியாகவும், பனிக்கட்டியாகவும் மாற்றி போர்த்தியுள்ளது. இந்த பனியானது வற்றாத நீரோடைகள், ஆறுகள் ஆகியவற்றிற்கு காரணமாகின்றது.

உலகில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட மக்கள் மலையிலிருந்து கிடைக்கும் ஆறுகள், நீரோடைகள் ஆகியவற்றை குடிநீர், மின்சாரம் ஆகிய தேவைகளுக்காக சார்ந்துள்ளனர்.

ஈரநிலங்கள் உலகின் இயற்கை நீர்வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. இவை பாஸ்பரஸ், கனஉலோகங்களை உள்ளிட்டவற்றை நிலத்தில் நிறுத்தி விடுகின்றன.

மேலும் கரையாத நைட்ரஜனை, நைட்ரஜன் வாயுவாக மாற்றி விடுகிறது. மேலும் இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நடுநிலையாக்குகின்றன.

இவை புயல் பாதுகாப்பு, வெள்ளக்கட்டுப்பாடு, பொழுபோக்கு போன்றவற்றிற்கும் உதவுகின்றன.

 

நில வாழிடத்தில் உண்டாகும் பாதிப்புகள்

மரங்களை அழித்தல் என்பது உயிரினங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் முக்கிய செயல் ஆகும். காட்டினை அழிப்பதால் இயற்கை நீர்சமநிலை பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

காடழிப்பால் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ காரணமாக இருக்கும் சுற்றுசூழல் சிதைந்து விடும்.

புல்வெளிகள் அதிக மேய்ச்சல், மனித ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் மண்அரிப்பு ஏற்படுகிறது. மேலும் இயற்கை நிகழ்வான கார்பன் சுழற்சியும் பாதிக்கப்பட்டு சுற்றுசூழல் சீர்கேடு அடைகிறது.

மலைகளில் உள்ள கனிமங்கள் மற்றும் அவற்றின் இயற்கை வளத்திற்காக சுரட்டப்படுகின்றன. இதனால் மலைவாழிடம் பாதிப்படைகிறது.

மேலும் வளிமண்டல வெப்ப உயர்வின் காரணமாக மலைகளில் உள்ள பனி உருகி வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதோடு கடல்நீர் மட்டத்தையும் உயர்த்தி கடல் வாழிடத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

ஈரநிலங்களின் பரப்பு இன்றைக்கு பெரிதும் சுருக்கப்பட்டுள்ளது. ஈரநிலங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டு மனிதர்களின் வசிப்பிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஈரநிலங்களின் சுருக்கம் மற்றும் இல்லாமல் போவது ஆகியவற்றால் வெள்ளப்பெருக்கு, புயலினால் பாதிப்பு, நல்ல நிலத்தடி நீராதாரப் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.

ஈரநிலத்தை அழிக்கும்போது அதில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மக்கள் நலமும் பாதிக்கப்படுகிறது

நில வாழிடம் சீர்கேடு அடைய காரணமான நமது செயல்பாடுகளை நாம் குறைந்துக் கொண்டு நில வாழிடத்தில் பல்லுயிர் தன்மையைக் காத்து சுற்றுசூழலையும் பாதுகாப்போம்.

– வ.முனீஸ்வரன்

 

Comments

“நில வாழிடம் ‍- ஓர் அறிமுகம்” அதற்கு 7 மறுமொழிகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.